தமிழக மீனவர்கள் 24 பேர் ஸ்ரீலங்கா கடற்படையினரால் கைது

ஸ்ரீலங்கா கடற்பரப்பில் வைத்து மேலும் 24 தமிழக மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதன்மூலம் கடந்த வாரத்தில் மாத்திரம் கைதுசெய்யப்பட்ட தமிழக மீனவர்களின் எண்ணிக்கை 50 ஐ எட்டியுள்ளது.

சர்வதேச கடற்பரப்பை தாண்டிவந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் மேலும் 24 தமிழக மீனவர்கள் ஸ்ரீலங்கா கடற்படையினரால் அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கச்சதீவு மற்றும் தலைமன்னால் கடற்பரப்புக்களுக்கு இடையில் வைத்து 15 தமிழக மீனவர்கள் கைதுசெய்யப்பட்டு, தலைமன்னாருக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக ராமேஸ்வரம் மீன்பிடித்துறையின் உதவிப் பணிப்பாளர் கூறியுள்ளார்.

இந்த மீனவர்கள் ராமேஸ்வரத்தை சேர்ந்தவர்கள் என்பதுடன், அவர்களின் இரண்டு படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அத்துடன் புதுக்கோட்டையைச் சேர்ந்த ஏனைய ஒன்பது பேரும் நெடுந்தீவு கடற்பரப்பில் கைதுசெய்யப்பட்டு, காங்கேசன்துறைக்கு அவர்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

அவர்களின் மேலும் இரண்டு படகுகளும் ஸ்ரீலங்கா கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஸ்ரீலங்கா கடற்படையினரால் இதுவரை 85 மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், 136 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலய திருவிழா எதிர்வரும் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள நிலையில், மீனவர்களின் கைதுகள், தமிழக மீனவர்கள் மத்தியில் அதிருப்தியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற நான்காம் சுற்றுப் பேச்சுவார்த்தையின் போது இனிவரும் காலத்தில் மீனவர்கள் கைதுசெய்யப்பட மாட்டார்கள் என உறுதி வழங்கப்பட்டதாக ராமேஸ்வரம் பகுதி மீனவத் தலைவர் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் ஸ்ரீலங்கா கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் எந்தவொரு படகுகளும் விடுவிக்கப்பட மாட்டார்கள் என ஸ்ரீலங்கா மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர திட்டவட்டமாக தெரிவித்திருந்தார்.

Related posts

Top