சம்பந்தன், சுமந்திரனை கூட்டமைப்பில் இருந்து தூக்கி எறிய வேண்டும்!

ஐநாவில் கால அவகாசம் வழங்கப்பட கூடாது என கூட்டமைப்பின் 11 பாராளுமன்ற உறுப்பினர்களும் கோசம் எழுப்பியமைக்கு காரணம் அடுத்த தேர்தலில் மக்கள் மத்தியில் செல்லவேண்டும் என்பதற்காகவே. உண்மையாக ஐநாவில் இலங்கைக்கு கால அவகாசம் வழங்கப்படக்கூடாது எனில் சம்பந்தன் மற்றும் சுமந்திரனையும் அவர்களது கூட்டதினரையும் கூட்டமைப்பில் இருந்து தூக்கி எறிய வேண்டும். இல்லாவிடில் தமிழ் இனத்திற்கு எவ்வாறான நன்மைகளும் ஏற்படப்போவதில்லை என த.தே.ம.மு தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

இன்றைய தினம் நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் இடம்பெற்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வருடாந்த பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தேசிய மாநாட்டில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உரைhttp://eeladhesam.com

Posted by Eeladhesam News on Sonntag, 5. März 2017

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், ஆயுதப் போராட்டம் முடிவிற்கு கொண்டுவரப்பட்டதன் பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பினரோடு கொள்கை ரீதியாக முரண்பட்டு தமிழ் தேசிய மக்கள் முன்னணியை உருவாக்கி இருந்தோம். எம்மை பலவீனப்படுத்துவதற்காக காங்கிரசினுடைய தலைவர் அப்பாத்துரை விநாயகமூர்த்தியை பிரித்து கூட்டமைப்பின் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருந்தார். அந்த காலகட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு துரோகமிழைக்கின்றது என கூறியபோது எங்களையே துரோகிகளாக பார்த்தனர்.

தேசம் எனும் கருப்பொருளை முன்வைத்தபோது அதை வெற்றுக் கோசம் என கொச்சைப்படுத்தினார்கள். யாழ்பாண மண்ணை பாதுகாப்பான மண் என்று கூறலாம். நாவற்குழி போன்ற சில இடங்களில் சிங்களக் குடியேற்றங்கள் அமைக்கப்பட்டாலும் பெரும்பான்மையான நிலங்கள் தமிழ் மக்களிடமே உள்ளது. ஆனால் தென் தமிழ் தேசத்தில் தமிழ் மக்களினுடைய நிலங்கள் பறிபோகின்றன. இலட்சக்கணக்கான மக்கள் எந்த கொள்கை, இலட்சியத்திற்காக தமது இன் உயிர்களை தியாகம் செய்தார்களோ அதனை நிலைநாட்ட த.தே.ம.மு நிலைத்து நிற்கும்.

தமிழ் தேசிய இறைமை மற்றும் தமிழர்களுக்கான சுயநிர்ணயம் ஏற்றுக்கொள்ளப்படாத தீர்வை தாம் ஏற்கப்போவதில்லை என்பதில் தமிழ் மக்கள் உறுதியாக நிற்கின்றனர் என்றால் அது எமது செயற்பாட்டின் வெற்றியையே குறிக்கும். தேர்தல் காலங்களில் சமஸ்டி என கதைத்துவிட்டு பின்னர் ஒற்றையாட்சிக்கு சம்மதம் தெரிவிப்பவர்கள் நாங்கள் அல்ல. எம்மை பற்றி பாராளுமன்றதில் கூட விமர்சிக்காமல் இருக்க முடியவில்லை என்றால் அது எமது பலத்தை குறிக்கின்றது.

தமிழ் மக்களுக்கு எதிராக போர்குற்றங்கள் மட்டுமல்ல இன அழிப்பையும் இலங்கை அரசு மேற்கொண்டது என்பதை ஆரம்பம் முதலே வெளிக்கொணர்ந்து வந்தோம். எனவே இந்த தேசத்தில் இடம்பெற்ற இன அழிப்பை நிரூபிக்க வேண்டிய பாரிய பொறுப்பும் எம்மிடமே உள்ளது. பொறுப்புகூறல், நிரந்தர அரசியல் தீர்வு எட்டப்படாமலே எமது எதிர்கால சந்ததியினர் நிம்மதியாக வாழ்கின்ற சூழலை உருவாக்க முடியும்.

எமது இனம் அழிக்கப்படுவதை தடுப்பதற்கு அரசியல் தீர்வும் பொறுப்புகூறலும் அவசியம். அரசியல் தீர்வு பற்றி மக்கள் மிகத் தெளிவாக இருக்கின்ற அதேவேளை பொறுப்புகூறல் பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் இல்லை. தமிழ் மக்களுக்கு உண்மை நிலவரங்களை வெளிக்கொணர்பவர்கள் சிங்கள தேசியவாதிகளே. ஏனெனில் தமிழர்களின் தலைமைகள் என்று சொல்லபடுகின்ற தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மக்களுக்கு உண்மைகளை சொல்வதில்லை.

ஐனாதிபதி பலாலி இராணுவ முகாமில் உரையாற்றும் போது பொறுப்புகூறல் விடயத்தில் வெளிநாட்டு சக்திகள் தலையிட முடியாது, எந்தவொரு இராணுவ சிப்பாயும் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படமாட்டார்கள். நானும் அதற்கு தயாரில்லை என தெரிவித்துள்ளார். தமிழ் மக்களை அழித்த இராணுவத்திற்கு எதிராக எதுவிதமான சட்டநடவடிக்கைகளை மேற்கொள்ளமாட்டோம் என கூறியபோதும் தமிழ் தேசிய கூட்டமைப்பு நிபந்தனை அற்ற ஆதரவை கொடுத்துக் கொண்டு ஐநாவிலும் இருவருட கால அவகாசத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பினுடைய தலைவரும் பேச்சாளரும் தங்களை தமிழ் மக்களிடம் இருந்து பாதுகாக்க பெரும் அரச படையை வைத்திருக்கின்றனர். இவர்கள் இருவரும் ஐநாவில் இலங்கை அரசிற்கு கால அவகாசம் வழங்கலாம் என கூறியபோதும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் 16 உறுப்பினர்களில் 11 உறுப்பினர்கள் ஐநா கால அவகாசம் வழங்கக்கூடாது என தமது கோரிக்கை எழுப்பி இருந்தனர். உண்மையில் இவர்களுடைய கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படாது.

இவ் 11 கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களும் அடுத்த தேர்தலில் தாங்கள் மக்கள் மத்தியில் செல்லவேண்டும் என்பதற்காகவே ஐநாவில் கால அவகாசம் வழங்கப்பட கூடாது என கோசம் எழுப்பினர். உண்மையாக ஐநாவில் இலங்கைக்கு கால அவகாசம் வழங்கப்படக்கூடாது எனில் சம்பந்தன் மற்றும் சுமந்திரனையும் அவர்களது கூட்டத்தினரையும் தூக்கி எறிய வேண்டும். இல்லாவிடில் தமிழ் இனத்திற்கு எவ்வாறான நன்மைகளும் ஏற்படப்போவதில்லை.

தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து நாம் பிரிந்து சென்றபோது எமக்கு பதவி ஆசை என்ற குற்றச்சாட்டை முன்வந்திருந்தனர். உண்மையில் 2009ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாக பின்னோக்கி சென்றபோது இரண்டு முக்கிய தூதரங்களின் நெருங்கிய நபர் எங்களை சந்தித்தார் . தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுக்கு வயதாகி விட்டது. எனவே அடுத்த தலைமைப் பொறுப்பை நீங்கள் ஏற்கவேண்டும். ஆனால் உங்கள் கொள்கைகளை கைவிட வேண்டும் என கூறினார். அப்போது நாங்கள் கூறினோம் கொள்கைகளை கைவிட்டு பதவிகளை நாங்கள் பெறப்போவதில்லை என்பதை வலியுறுத்தி இருந்தோம்.

நாம் எங்களின் ஒருமித்த கொள்கைகளை கைவிட்டிருந்தால் எப்போதோ பாராளுமன்ற உறுப்பினர்களாகி இருப்போம். தொடர்சியாக கொள்கைகளை முன்வைத்தும் நாம் தோற்றால் உண்மையில் அது எமது தோல்வியல்ல. ஒட்டுமொத்த தமிழ் இனத்தினுடைய தோல்வியே என தெரிவித்தார்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தேசிய மாநாட்டில் செல்வராசா கஜேந்திரன் உரை

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தேசிய மாநாட்டில் செல்வராசா கஜேந்திரன் உரைhttp://eeladhesam.com

Posted by Eeladhesam News on Sonntag, 5. März 2017

Related posts

Top