சிறீலங்காவுக்கான சுற்றுலா பயணிகளின் வரகை திடீர் சரிவு!

சிறிலங்காவில் போர் முடிவுக்கு வந்த பின்னர், தொடர்ச்சியாக அதிகரித்து வந்த சுற்றுலாப் பயணிகளின் வருகை கடந்த பெப்ரவரி மாதத்தில் திடீர் சரிவைச் சந்தித்துள்ளது.

2016ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில், 2017 பெப்ரவரியில், சுற்றுலாப் பயணிகளின் வருகை 0.1 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது. 2016 பெப்ரவரியில் 197,697 சுற்றுலாப் பயணிகள் சிறிலங்கா வந்திருந்தனர். எனினும், இந்த ஆண்டு பெப்ரவரியில் 197,517 பேரே சிறிலங்கா வந்துள்ளனர்.

குறிப்பாக கிழக்காசிய பயணிகளின் வருகை, 11.1 வீதத்தினாலும், சீனப் பயணிகளின் வருகை, 21.6 வீதத்தினாலும், தென்னாசிய நாடுகளின் பயணிகளின் தொகை 2.9 வீதத்தினாலும், குறைந்திருக்கிறது.

இந்தியாவில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும், பெப்ரவரி மாதத்தில், 0.9 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது.

சிறிலங்காவின் பிரதான அனைத்துலக விமான நிலையமான கட்டுநாயக்க விமான நிலைய ஓடுபாதை சீரமைப்புப் பணிகள் இடம்பெறுவதால் பகலில் 8 மணிநேரம் மூடப்படுகிறது. இதனால், சுற்றுலாப் பயணிகளின் வருகையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.

அதேவேளை, கடந்த ஆண்டின் முதல் இரு மாதங்களிலும் சிறிலங்கா வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை விட, இந்த ஆண்டின் முதலிரு மாதங்களிலும் சிறிலங்கா வந்தவர்களின் எண்ணிக்கை, 6.4 வீதத்தினால் அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டில் 2.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டிருக்கிறது.

Related posts

Top