ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கு: குற்றச்சாட்டை நிராகரித்தார் பிள்ளையான்!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை தொடர்பான சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ள பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் மற்றும் ஏனைய மூன்று சந்தேகநபர்களும் தம் மீதான குற்றச்சாட்டுக்களை நிராகரித்துள்ளனர்.

சந்தேகநபர்களுக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களத்தால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் இன்றைய தினம் (புதன்கிழமை) வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, தம் மீதான குற்றச்சாட்டுக்களை பிரதிவாதிகள் நிராகரித்த நிலையில், வழக்கு விசாரணையை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4ஆம் திகதிக்கு மேல்நீதிமன்ற நீதிபதி எம்.வை.எம்.இஸ்ஸதீன் ஒத்திவைத்தார்.

பிள்ளையான் தரப்பில் இன்றைய தினம் மன்றில் ஆறு சட்டத்தரணிகள் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கடந்த 2005ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ஆம் திகதி மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்டார். சம்பவம் தொடர்பில் பிள்ளையான் உள்ளிட்ட நால்வர் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

Top