இனப்படுகொலைக்கான நீதியை இழுத்தடிக்கும் இலங்கைக்கு எதிரான கையெழுத்து இயக்கம்

11.03.2017 சனி காலை 9.00 மணி, சென்னை நிருபர்கள் சங்கம், சேப்பாக்கம் பேரன்புக்கும் பெருமரியாதைக்கும் உரிய ஊடக நண்பர்களுக்கு, வணக்கம்.

ஒன்றரை லட்சம் தமிழர்களைக் கொன்று குவித்த இலங்கை, போர்க்குற்ற விசாரணையிலிருந்து தப்பிக்க முயற்சித்து வருவதை நீங்கள் அறிவீர்கள். இனப்படுகொலை முடிந்து 8 ஆண்டுகள் ஆனபிறகும், சர்வதேச நீதிபதிகளைக் கொண்டு போர்க்குற்றங்களை விசாரிப்பதாக இலங்கையே ஒப்புக்கொண்டு 18 மாதம் ஆனபிறகும், அதுதொடர்பாக எந்த நடவடிக்கையும் இன்றுவரை எடுக்கப்படவில்லை.

கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற எந்த நடவடிக்கையையும் எடுக்காத இலங்கை, இப்போது மேலும் 18 மாத காலஅவகாசம் பெற முயல்கிறது. இப்படியெல்லாம் இழுத்தடிப்பதன் மூலம், இனப்படுகொலைக்கான நீதியைக் குழிதோண்டிப் புதைத்துவிட வேண்டும் என்பதே இலங்கையின் திட்டம்.

இலங்கையின் இந்தச் சூழ்ச்சியை, ஐநா மனித உரிமைகள் பேரவைக்கும் சர்வதேசத்துக்கும் உணர்த்துவதற்காக சென்னையில் கையெழுத்து இயக்கம் ஒன்றை மார்ச் 11ம்தேதி நடத்துகிறோம். குற்றவாளி இலங்கைக்குக் கால அவகாசம் தராதே – என்று வலியுறுத்த இருக்கிறோம்.

சென்னை சேப்பாக்கம் அரசினர் தோட்டத்தில் உள்ள ‘சென்னை நிருபர்கள் சங்கத்தில்’ (சென்னை பத்திரிகையாளர் மன்றம் அருகில்) 11.03.2017 சனிக்கிழமை காலை சரியாக 9 மணிக்கு திரு. சத்யராஜ் அவர்கள் இந்தக் கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கிவைக்கிறார். இந்தக் கையெழுத்து இயக்கத்தில், பல்வேறு அரசியல் இயக்கங்களின் தலைவர்கள், பிரமுகர்கள், கலைஞர்கள், வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், பேராசிரியர்கள், மாணவர் பிரதிநிதிகள், மகளிர் அமைப்பினர் பங்கேற்கின்றனர்.

இந்தக் கையெழுத்து இயக்கம் குறித்த செய்திகள் மூலம் இந்த இயக்கத்தின் நோக்கத்தை வலுப்படுத்த உதவும்படி, அனைத்து ஊடகங்களையும் ஊடகவியலாளர்களையும் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி!

இப்படிக்கு,
புகழேந்தி தங்கராஜ்

வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் வீரவணக்க நிகழ்வுக் குழு, சென்னை
9841906290 / 9840053710 / 9840480273

Related posts

Top