அவுஸ்திரேலியாவின் தமிழீழ செயற்பாட்டாளர் ட்ரெவர் கிறான்ட் வணக்க நிகழ்வு – ஜெனிவா

அண்மையில் சாவடைந்த தமிழீழச் செயற்பாட்டாளர் ட்ரெவர் கிறான்ட் அவர்களின் வணக்க நிகழ்வு ஜெனிவாவில் முக்கிய உலகத்தமிழ்ச் செயற்பாட்டாளர்கள் ஒன்றிணைந்து நடத்தப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை 10 – 03 – 2017 அன்று உள்ளுர் நேரப்படி மாலை ஆறு மணிக்கு மொன்பிறில்லியன்ற் என்ற மண்டபத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது.

பொதுச்சுடரினை வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரனும் ஈகச்சுடரினை மாவீரர் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவராலும் ஏற்றப்பட்டதை தொடர்ந்து தமிழ்ச்செயற்பாட்டாளர்கள் ட்றெவர் கிறான்ட் தொடர்பான நினைவுரைகளை ஆற்றினார்கள்.

மன்னார் சிவில் சமூகத்தை சேர்ந்த லியோவின் உறவினரும் மதகுருவுமான செபமாலை அவர்கள் உரையாற்றும்போது, அவுஸ்திரேலியாவில் லியோ மரணித்தபோது அவனது மரணத்தையும் அதற்கான காரணிகளையும் வெளிக்கொண்டுவருவதில் ட்றெவர் காட்டிய அக்கறையையும் அதனைத்தொடர்ந்து லியோவின் குடும்பத்திற்கு தேவையான உதவிகள் சென்றடைவதில் காட்டிய ஆர்வத்தையும் நினைவுகூர்ந்தார். லியோ தனது மரணத்தின் பின்னர் தனது அங்கங்களை தானம் செய்தமை குறிப்பிடத்தக்கது.

ட்ரெவர் கிறான்ட்டின் நெருங்கிய நண்பரும் அவுஸ்திரேலிய தமிழ்ச் செயற்பாட்டாளருமான அரன் மயில்வாகனம் தமிழ்மக்களின் உரிமைக்காகவும் தமிழ் அகதிகளின் வாழ்வுக்காகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட ட்றெவர் கிரான்ட் இன் செயற்பாடுகளை நினைவுகூர்ந்தார்.

தமிழ்ச்சமூக வானொலியான 3சிஆர் இலும் இணைந்து தமிழ் மக்களின் பிரச்சனைகளை வெளிக்கொண்டுவருவதிலும், தமிழர்களின் பிரச்சனைகள் தொடர்பாக ஆங்கில ஊடகங்களில் பதிவுகளை எழுதுவதிலும் மிகவும் அக்கறையோடு செயற்பட்டதையும், சிறிலங்கா புறக்கணிப்பு போராட்டத்திலும் தமிழீழ சுதந்திரத்திற்கான வாகன நடைபயணம் என பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்ததையும் குறிப்பிட்டார்.

நிகழ்வில் உரையாற்றிய அனந்தி சசிதரன் – ட்ரெவர் கிறான்ட் போன்ற அர்ப்பணிப்புடன் செயற்பட்டவர்களை நினைவுகூர்வதும் அவர்களுக்கு உரிய வணக்க மரியாதை செய்வதும் மற்றய சமூகசெயற்பாட்டாளர்களை ஊக்கப்படுத்தும் எனக்குறிப்பிட்டார். தாயகத்திலும் ட்றெவர் கிறான்ட் இற்கு வணக்க நிகழ்வுகளை ஒழுங்குசெய்வேன் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய மே 17 இயக்கத்தலைவர் திருமுருகன் காந்தி – ட்றெவர் கிறான்ட் ஐ சந்திக்கும் ஒருவர் அவர் செய்துகொண்டிருந்த பணிகளின் கனதியை அறிந்திருக்கமாட்டார்கள். அந்தளவுக்கு எளிமையானவராக அவர் இருந்தார் என்றும், அவரது அர்ப்பணிப்பான செயற்பாட்டை எமது மக்களுக்கு எடுத்துச்சொல்லவேண்டும் எனவும் அதற்கான நடவடிக்கைகளை தான் செய்வேன் எனவும் அவர் குறிப்பிட்டார்.

தொடர்ந்து உரையாற்றிய தென்ஆபிரிக்க செயற்பாட்டாளர் கிறிஸ் கோவிந்தன் – தான் றெவர் கிறான்ற் உடன் சிறிலங்கா புறக்கணிப்பு போராட்டத்தில் பங்குகொண்டதையும் இன்னொரு சமூகத்தைச்சார்ந்த ஒருவரின் இத்தகைய அர்ப்பணிப்பான செயற்பாடு ஆச்சரியத்தை தந்ததாக குறிப்பிட்டார்.

திருகோணமலையைச் சேர்ந்த மதகுருவான பிரபாகர் அவர்கள் உரையாற்றும்போது – நாங்கள் எப்படிச்செயற்படவேண்டும் என்பதற்கு றெவர் ஒரு முன்னுதாரணம் எனவும் அத்தகைய ஈடுபாடான செயற்பாடுகளே மக்களின் விடுதலையை பெற்றுத்தரும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முக்கிய செயற்பாட்டுப்பிரதிநிதியான மாணிக்கவாசகர் அவர்கள் உரையாற்றும்போது – நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் ட்றெவர் கிறான்ட் தொடர்பான வணக்கச் செய்தி வெளியிடப்பட்டதையும் ட்றெவர் கிறான்ட் எப்படியான வழிகளில் தம்முடன் இணைந்து செய்ற்பட்டார் என்பதையும் அவர் நினைவுகூர்ந்தார்.

இவ்வணக்க நிகழ்வை அம்பாறை மாவட்ட மனிதநேய செயற்பாட்டாளர் கணேஸ் செல்வராஜ் தொகுத்து வழங்கினார்.   

Top