ஜ.நாவுக்கு அவசர மனு-250 க்கும் மேற்பட்ட தமிழ் அமைப்புக்கள் கூட்டாக வலியுறுத்தல்!

மனித உரிமைகளுக்கான ஐ.நா. உயர் ஸ்தானிகர் மற்றும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை உறுப்பு நாடுகளுக்கான அவசர மனு – 250 க்கும் மேலதிகமான தமிழ் அமைப்புகள் கூட்டாக வலியுறுத்தல்

காணொளி

நடைபெறும் ஐநா மனித உரிமைகள் பேரவையின் 34 ஆவது கூட்டத்தொடரில் சிறிலங்கா அரசாங்கத்துக்கு மீண்டும் கால நீடிப்பு வழங்கக் கூடாது மற்றும் சர்வதேச சட்டங்களை மீறிய சிறிலங்கா அரசை ஐ.நா பொதுச்சபைக்கு பரிந்துரைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ் அரசியல் அமைப்புகள் , சங்கங்கள் , கோயில்கள் , சிவில் அமைப்புகள் , விளையாட்டுக் கழகங்கள் மற்றும் தமிழ் கல்வி நிறுவனங்கள் என 250 க்கும் மேலதிகமான பன்னாட்டு தமிழ் அமைப்புகள் மனித உரிமைகளுக்கான ஐ.நா. உயர் ஸ்தானிகர் மற்றும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை உறுப்பு நாடுகளுக்கான அவசர மனு ஒன்றினை கடந்த 06 . 03 .2017 அன்று ஜெனிவாவில் ஐநா மனிதவுரிமை ஆணையாளரின் காரியாலயத்தில் நடைபெற்ற சந்திப்பில் கையளித்துள்ளதுடன் ஏனைய ஐ.நா. மனித உரிமைகள் பேரவை உறுப்பு நாடுகளை நோக்கிய செயற்பாடுகளையும் அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை பிரதிநிதிகள் மற்றும் ஏனைய சக தமிழ்த் தேசியத்தை நோக்கிய தமிழ் அமைப்புகள் முன்னெடுத்துவருகின்றனர்.

சிறிலங்கா அரசாங்கமானது 2015 ஆண்டு ஒக்டோபர் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தில் கூறப்பட்ட முக்கிய விடயங்களை மதிக்காமல், அங்கு வழங்கிய வாக்குறுதிகளை வழங்கப்பட்ட காலப்பகுதிக்குள் நடைமுறைப்படுத்தாமல், இவ் விடயம் சார்ந்த முக்கிய சர்வதேச உதவிகளை நிராகரிக்கும் வகையில் தனது நிலப்பாட்டை கொண்டுள்ளது. ஒரு புறம் ‘நல்லாட்சி’ அரசாங்கம் எனும் வேடம் தரித்தபடி சர்வதேசத்தை ஏமாற்றி வருகின்றது. மறுபுறம் தமிழர் தாயகத்தில் பல்வேறு மனிதவுரிமை மீறல்களை மேற்கொண்டு வருகிறது. தாமதிக்கப்படும் நீதி மறுக்கப்படும் நீதிக்கு ஒப்பானது எனும் கருத்துக்கு அமைய இனிமேலும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையானது சிறீலங்காவுக்கு கால நீடிப்பு கொடுக்க கூடாது என்பதை வலியுறுத்தப்பட்டுள்ளது.

சிறீலங்காவுக்கு ஆதரவான எவ்வித தீர்மானத்தையும், அத்தோடு கூடிய காலநீடிப்பையும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையும் மற்றும் அங்கத்துவ நாடுகளும் வெற்றுவாக்குறுதிகளை நம்பி ஆதரிக்க கூடாது என்பதும் நாம் வேண்டுகின்றோம். தமிழின அழிப்புக்கு நீதி கிடைக்கும் பொருட்டு சம்மந்தப்பட்ட அனைவரும் இதனை உறுதிப்படுத்த வேண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

சிறிலங்கா தொடர்பான விடயம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையினால் தொடர்ந்தும் கண்காணிப்பில் இருக்கும் சமநேரத்தில் இவ் விடயம் ஐ.நா பொதுச்சபைக்கு கொண்டுசெல்லப்பட்டு, அதன் ஊடாக ஐ.நா. பாதுகாப்பு சபையில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு பரிந்துரைக்கப்பட வேண்டும் என்றும் அத்தோடு இலங்கைத் தீவில் சிறீலங்கா அரசாங்கத்தின் ஆக்கிரமிப்பு படைகளால் முன்னெடுக்கப்படும் ´மனிதவுரிமை
மீறல்களை உடனடியாக தடுத்து நிறுத்தும் பொருட்டு தமிழர் தாயகத்தில் ஐ.நா வின் கண்காணிப்பு பணியகம் நிறுவப்படவேண்டும் என்றும் இம் மனுவில் வேண்டப்பட்டுள்ளது.

சிறீலங்காவுக்கு காலநீடிப்பு கொடுக்க வேண்டும் என்பதில் தாயகத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் மற்றும் புலத்தில் “உலகத் தமிழர் பேரவையும்” எடுக்கும் முயற்சி தமிழ்த் தேசியத்தையும், நீதிக்காக போராடும் மக்களின் உணர்வுகளையும், அவர்களுக்கு கிடைக்கவேண்டிய பரிகார நீதியையும் அடியோடு அழிக்கும் செயலாகவே அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை கருதுவதுடன் அதற்கான கண்டனத்தையும் இத்தருணத்தில் தெரிவித்துக்கொள்கின்றது.

அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை

Tags

Related posts

Top