மைத்திரி அரசு பொறுப்பேற்று 2வருடமாகியும் இராணுவத்தினரின் கண்காணிப்பிலேயே தமிழ்மக்கள்!

சிறீலங்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு இரண்டு வருடங்களாகியும் யுத்தம் நடைபெற்ற பகுதிகளில் வாழும் தமிழ் மக்கள் தொடர்ந்தும் இராணுவத்தினரின் கண்காணிப்பு மற்றும் அச்சுறுத்தலுக்கு மத்தியிலேயே வாழ்கிறார்கள் என அனைத்துலக உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூகா தெரிவித்துள்ளார்.

அனைத்துலக ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், கடத்தல்கள், சித்திரவதைகள், பாலியல் வன்முறைகள் போன்ற வன்முறைகள், துஷ்பிரயோகங்களும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.

போர் முடிவுக்கு வந்து எட்டு ஆண்டுகள் கடந்தும், இராணுவமயச் சூழலின் அளவு ஏற்றுக் கொள்ள முடியாதது. அதைவிட, சிறீலங்கா அரசபடைகள் தொடர்ந்தும் விலக்களிப்புடன் செயற்படுகின்றன.

ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் சிறீலங்கா இராணுவத்தின் அனைத்துலக அணுகுமுறை 180 பாகை கோணத்தில் மாறிவிட்டன.

ராஜபக்ச காலத்தில் பொறுத்துக்கொள்ளாத, விரக்தியை வெளிப்படுத்தியவர்கள் இப்போது, மேலதிக காலஅவகாசத்தைக் கொடுக்க விரும்புகிறார்கள்.

தென் பகுதியில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ள போதிலும், வடக்கின் சூழ்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை.

ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள, முறைப்படுத்தப்பட்ட குற்றங்கள் தொடர்பான பாரதூரமான குற்றச்சாட்டுகள் தொடர்பாக, விசாரணை செய்ய புதிய அரசாங்கம் எதையுமே செய்யவில்லை. சிங்களவர்கள், முஸ்லிம்கள், தமிழர்களுக்கு மறுசீரமைப்பு தேவைப்படுகிறது.

பிரச்சினைக்கு அரசியல் மற்றும் பொருளாதார தீர்வு மிகவும் அவசியமானது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

Top