த.தே.கூட்டமைப்புக்கு வவுனியாவில் கடும் எதிர்ப்பு!

ஐ.நா மனித உரிமை பேரவையினால் பரிந்துரைக்கப்பட்ட தீர்மானத்திற்கு பதிலளிக்கும் கடப்பாட்டினை தொடர்ந்தும் உதாசீனம் செய்துவரும் சிறீலங்கா அரசுக்கு, இம்முறையும் ஜெனிவாவில் இன்னும் இரண்டு வருட கால அவகாசம் வழங்குமாறு கோரிக்கை விடுக்கும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியாவில் கறுப்புக்கொடி போராட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் குடும்பங்களின் சங்கத்தினால், கடந்த பெப்ரவரி 24ம் திகதி முதல் வவுனியா மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும், ‘தீர்வு கிடைக்கும் வரையிலான சுழற்சிமுறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் இன்று திங்கட்கிழமை 18வது நாளாகவும் தொடர்கின்றது.

இந்தநிலையில் சிறீலங்கா அரசுக்கு இம்முறையும் ஜெனிவாவில் இன்னும் இரண்டு வருட கால அவகாசம் வழங்குவதற்கு கூட்டமைப்பு தீர்மானத்துள்ளது.

யுத்தக்குற்றம், சித்திரவதைகள், பாலியல் வன்கொடுமைகளுக்கு காரணமானவர்களை, சர்வதேச நீதிபதிகள் மற்றும் வழக்குத்தொடுநர்கள் உடனான கலப்பு நீதிமன்றம் ஒன்றினை ஸ்தாபித்து விசாரணைகளை மேற்கொள்வதற்கு உடன்படாமல் முரண்டுபிடித்துவரும் சிறீலங்கா அரசை, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தவேண்டும் என்று வலியுறுத்தாமல், பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நீதி வழங்கும் சட்ட ஒழுங்குகளிலிருந்து தவறிழைத்துள்ள தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கு கண்டனமும் எதிர்ப்பும் தெரிவித்து, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடியலையும் குடும்பங்களால் கறுப்புக்கொடி போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஏ9 சாலை ஓரமாக உணவு தவிர்ப்பு போராட்டம் நடைபெறும் இடத்தில், கறுப்புக்கொடிகளை பறக்க விட்டு போராட்டத்தை அவர்கள் தொடர்கின்றனர்.

Related posts

Top