ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறும் மசோதாவுக்கு பிரிட்டன் பாராளுமன்றம் ஒப்புதல்

மக்களின் கருத்துப்படி ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறும் மசோதாவுக்கு பிரிட்டன் பாராளுமன்றம் இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து விலகுவது குறித்த பொது ஓட்டெடுப்பு கடந்தாண்டு நடந்தது. அதில் 52 சதவீதம் பேர் வெளியேற வேண்டும் என வாக்களித்தனர்.

இதனால் ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகுவதாக பிரிட்டன் அறிவித்தது. இந்த தீர்மானத்துக்கு எதிராக இருந்த முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் பதவி விலகினார். புதிய பிரதமராக தெரசா மே தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதற்கிடையே, ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகுவதற்கு ஒப்புதல் பெறுவதற்கான சட்ட மசோதா பிரிட்டன் பாராளுமன்றத்தின் பிரபுக்கள் சபையில் கடந்த 1-ந்தேதி கொண்டு வரப்பட்டது. இதை பிரதமர் தெரசா மே தாக்கல் செய்தார்.

ஆனால், இந்த மசோதா தோல்வி அடைந்தது. அதைத் தொடர்ந்து கடந்த 7-ம் தேதி இரண்டாவது முறையாக இம்மசோதா பாராளுமன்ற பிரபுக்கள் சபையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா மீது 3 மணி நேர விவாதம் நடந்தது. இறுதியில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் அதுவும் தோல்வி அடைந்தது.

மேலும், ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறுவது தொடர்பாக பிரிட்டன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு மூன்று மாதங்கள் முன்னதாக ஐரோப்பிய யூனியன் குடியுரிமையை பாதுகாப்பது தொடர்பாக உறுதி செய்யப்பட வேண்டும் என்று பிரபுக்கள் சபையில் முன்னர் நிறைவேற்றப்பட்ட சட்ட திருத்தங்களை பாராளுமன்ற கீழவை நேற்று வாக்கெடுப்பின் மூலம் நிராகரித்தது.

இந்த சட்ட திருத்தத்துக்கு எதிராக 335 எம்.பி.க்களும், ஆதரவாக 287 எம்.பி.க்களும் வாக்களித்திருந்தனர். இந்நிலையில், மக்களின் கருத்துப்படி ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறும் மசோதாவுக்கு பிரிட்டன் பாராளுமன்றம் இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த மசோதாவுக்கு ராணி எலிசபத் ஒப்புதல் அளித்த பின்னர் இது சட்ட வடிவம் பெறும். இதையடுத்து, ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுகையில் தர வேண்டிய அல்லது பெற வேண்டிய வர்த்தகம் சார்ந்த இழப்பீட்டு தொகை, ஐரோப்பிய யூனியனில் உள்ள நாடுகளில் வசிக்கும் பிரிட்டன் குடிமக்கள் மற்றும் பிரிட்டனில் வாழ்ந்துவரும் ஐரோப்பிய யூனியன் நாட்டினரின் இரட்டை குடியுரிமையின் நிலைப்பாடு தொடர்பாக ஐரோப்பிய பாராளுமன்ற தலைவருடன் பிரிட்டன் பிரதமர் தெரசா மே பேச்சுவார்த்தையின் மூலம் உறுதி செய்வார்.

பிரிட்டன் அரசின் நிலைப்பாட்டை முன்வைத்தும் முன்னோடியாக கொண்டும், ஐரோப்பிய யூனியனில் இருந்து விரைவில் வெளியேற துடிக்கும் ஸ்காட்லாந்தும் முடிவெடுக்க வேண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

Top