சிறீலங்கா ஜனாதிபதியிடம் முதுகெலும்பு உள்ளதா என கேட்கும் நிலை தமிழர்களுக்கு ஏற்படும்

சிறீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முதுகை தடவி உங்களுக்கு முதுகெலும்பு இருக்கிறதா? என தமிழ் அரசியல் தலைமைகள் கேட்கும் நிலை வரலாம்.

எஸ்.டபிள்யூ.ஆர்.பண்டாரநாயக்கவின் முதுகை தடவி உங்களுக்கு முதுகெலும்பு உள்ளதா? என ஈ.எம்.பி நாகநாதன் என்ற தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் கேட்ட வரலாறுகள் உள்ளது என வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் வடமாகாணசபை எதிர்கட்சியில் உள்ள சிங்கள உறுப்பினர்களை நோக்கி கூறியுள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் 2015 ஆம் ஆண்டு சிறீலங்கா அரசாங்கத்துடன் ஒப்புதல் வழங்கி நிறைவேற்றிய தீர்மானம் தொடர்பாக ஆராய்வதற்கான விசேட அமர்வு இன்று நடைபெற்றது.

இதன்போது அண்மையில் யாழ்ப்பாணம் வந்த சிறீலங்கா ஜனாதிபதி இராணுவத்தினர் மத்தியில் உரையாற்றும்போது எனக்கு முதுகெலும்பு உள்ளது.

படையினரை விசாரிக்க இடமளிக்க மாட்டேன் என கூறிய கருத்துக்கு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சிறீலங்கா ஜனாதிபதிக்கு முதுகெலும்பு இருந்தால் ஐ.நா தீர்மானத்தை நடைமுறைப்படுத்தவேண்டும் என ஊடகங்களுக்கு கூறியிருந்தார்.

அந்த கருத்தை காண்பித்து வடமாகாணசபை சிங்கள உறுப்பினர் ஜெயத்திலக்க உரையாற்றினார். அதற்குப் பதிலளிக்கும்போதே எம்.கே. சிவாஜிலிங்கம் இவ்வாறு கூறியுள்ளார்.

எஸ்.டபிள்யூ.ஆர்.பண்டாரநாயக்கவின் முதுகை தடவி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.எம்.பி.நாகநாதன் உங்களுக்கு முதுகெலும்பு உள்ளதா? என கேட்டதைபோல் சிறீலங்கா ஜனாதிபதியின் முதுகை தடவி எங்களுடைய தமிழ் தலைவர்கள் கேட்கும் நிலை வரும் என கூறினார்.

இதேவேளை வட மாகாணசபை உறுப்பினர் எஸ்.சுகிர்தன் கருத்து தெரிவிக்கையில், தனக்கு முதுகெலும்பு உள்ளது படையினரை விசாரிக்க விடமாட்டேன் என கூறும் சிறீலங்கா ஜனாதிபதி தில் இருந்தால் அதே கருத்தை ஜெனீவாவில் சொல்லட்டும் என கூறினார்.

Related posts

Top