காதல் திருமணத்துக்கு எதிர்ப்பு; இரு குடும்பங்களிடையே வாள்வெட்டு

வவுனியா பொலிஸ் நிலைய பிரிவுக்கு உட்பட்ட ஈச்சங்குளம் பொலிஸ் கட்டுப்பாட்டுப் பகுதியில் இரு குடும்பங்களுக்கிடையில் காதல் திருமண விவகாரம் காரணமாக ஏற்பட்ட கருத்து முரண்பாடு முற்றி யதில் அது வாள்வெட்டிலும் வீடு தீ வைப்பு சம்பவத்திலும் முடிந்துள்ளது.

இச் சம்பவம் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் நடைபெற்றுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

காதலித்து பெற்றோர்கள் விருப்பம் இன்றி திருமணம் செய்த நிலையில் ஏற்பட்ட பிரச்சினையினால் மணமகன் வீட்டுக்கு நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் வெள்ளை நிற ஹயஸ் ரக வாகனத்தில் சென்ற பெண் வீட்டார் இளைஞனின் வீட்டிற்கு சென்று வீட்டில் இருந்தவர்கள் மீது வாள் வெட்டுத்தாக்குதல் மேற்கொண்டு விட்டு மணப் பெண்ணை அழைத்துச் சென்றுள்ளனர்.
இதன் பின்னர் பெண்ணின் வீட்டுக்குச் சென்ற இனந்தெரியாத நபர்கள் மணப் பெண்ணின் வீட்டை தீக்கிரையாக்கியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் இரு தரப்பு விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் மற்றும் தடயவியல் பிரிவினர் தீக்கிரையான வீட்டில் கைரேகை அடையாளங்களை பார்வையிட்டு பதிவு செய்துள்ளனர்.
அதேவேளை இளைஞனின் வீட்டார் மீது தாக்குதல் மேற்கொண்ட வாள்கள் மற்றும் பெரிய கத்தி என்பனவும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் மணப் பெண்ணின் தாயார் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப் பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா ஈச்சங்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

Top