கேப்பாபுலவு மக்களிற்கு தடைவிதிக்க மறுத்த நீதிமன்று!

கேப்பாப்பிலவு மக்களின் ஜனநாயக போராட்டங்களுக்கு தடை விதிக்க முடியாதென தெரிவித்துள்ளதுடன் தடைவிதிக்குமாறு இராணுவத்தினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை நிராகரித்து முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கேப்பாபுலவு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் வீதி போக்குவரத்து மற்றும் இராணுவத்திற்கு இடையூறின்றி, நில மீட்புக்கான சாத்வீக போராட்டத்தை முன்னெடுக்கவும் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.எஸ் சம்சுதீன் அனுமதி வழங்கியுள்ளார்.
கேப்பாப்புலவிலுள்ள இராணுவத்தினரது வசமிருக்கும் தங்களது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி கடந்த 16 நாட்களாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

முல்லைத்தீவு – கேப்பாப்புலவு இராணுவ முகாமுக்கு முன்பாக நிலமீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களிடம் இன்றைய தினம் கருத்து கோரவிருப்பதாக முல்லைத்தீவு நீதிமன்றம் நேற்றைய தினம் அறிவித்திருந்தது.

இதற்கமைய போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் சார்பில் ஈடுபட்டுள்ள, தர்மரட்ணம் மல்லிகாதேவி, ஆனந்தன் கலாநிதி, சுமித் கட்சன் சந்திரலீலா, மயில்வாகனம் நித்தியகரன், நடராஜா உதயகுமார், ஆகியோர் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தனர்.
வீதிப்போக்குவரத்திற்கும், இராணுவத்திற்கும் இடையூறு ஏற்படுத்தாத நிலையில் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டதாக மக்கள் தெரிவித்தனர்.
நேற்றையதினம் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்த முள்ளியவளை இலங்கை காவல் நிலையப் பொறுப்பதிகாரி, மக்களின் போராட்டத்தினால் இராணுவம் நெருக்கடிகளிற்குள்ளாகியிருப்பதாக தெரிவித்தியிருந்தார்.

இதேவேளை இருதரப்பினரதும் சாட்சிகள் கருத்துக்கள் ஆவணங்கள் ஆகியவற்றை பரிசீலித்த நீதவான் மேற்படி உத்தரவை பிறப்பித்து 14 நாட்களுக்கு இது நடைமுறையில் இருக்கும் என தெரிவித்துள்ளார்.

இதனிடையே போராட்டகளத்தினில் சுகவீனமுற்ற மூவர் வைத்தியசாலைகளினில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

Top