நாயாற்றுப்பகுதியில் கூடுதலான தென்னிலங்கை மீனவர்கள் வருகைக்கான ஏற்பாடு. – குறைகளை முன்வைத்த மக்கள்.

நாயாறுப் பகுதியில் இவ்வாண்டுத்தொழில் நடவடிக்கைக்களில் தென்னிலங்கை மீனவர்களை கூடுதலாக அனுமதிக்கும் செயற்பாட்டில் கடற்றொழில் திணைக்களம் ஈடுபடுவதாக ரவிகரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் வடமாகாணசபை உறுப்பினர் மதிப்புறு துரைராசா ரவிகரன் அவர்கள் கருத்து தெரிவிக்கையில்,

செம்மலை- நாயாற்றுப்பகுதியில் மீனவமக்களை நானும் வன்னிப்பாராளுமன்ற உறுப்பினர் மதிப்புறு சாள்சு நிர்மலநாதன் அவர்களும் நேற்று (2017.03.15) சந்தித்தோம்.

தென்பகுதி மீனவர்கள் வருகை பற்றியும் முன்னைய எழுபத்தெட்டுப்படகுகளைத்தவிர கூடுதலாக இன்றுவரை இருநூற்றுமூன்று படகுகளுக்கு கொழும்பிலிருந்து அனுமதிகள் கிடைத்துள்ளதாகவும் அதில் இருபத்துமூன்று படகுகளை நாயாற்றின் முகத்துவாரத்தின் ஊடாக நீரேரியில் நிறுத்திவைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தமிழ் மீனவர்கள் தெரிவித்தனர்.

தமது நிலமைகளையும் தாம் மேலும் துன்பப்பட வேண்டியதையும் பலரும் சுட்டிக்காட்டினார்கள்.

இப்பற்றியங்கள் தொடர்பில் நாம் அவர்களை ஆறுதற்படுத்தியதோடு மீனவச்சார்பாளர் மூவர் கடற்றொழில் அமைச்சரை சந்திப்பதற்கான ஏற்பாட்டினை மேற்கொள்வதாக மதிப்புறு பாராளுமன்ற உறுப்பினர் சாள்சு நிர்மலநாதன் அவர்கள் தெரிவித்தார். மதிப்புறு முதலமைச்சர் ஊடாக இது விடயத்தை நடுவண்ணரசுக்கு தெரியப்படுத்துவதாக நானும் தெரிவித்தேன் என தெரிவித்தார்.

இதற்கு சரியான தீர்வு கிடைக்காதிருப்பின் தாங்கள் பாரியளவிலான எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என மீனவர்கள் தெரிவித்தனர்.

Related posts

Top