காணாமல் போனவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம்! – சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர்

காணாமல் போனவர்கள் அல்லது கடத்தப்பட்டவர்கள் அன்றைய தினமே கொல்லப்பட்டிருக்கலாம் என சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

அத்துடன் காணாமல் போனவர்களாக கருதப்படுபவர்களில் சிலர் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றிருக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

வெளிவிவகார அமைச்சில் இன்று (வியாழக்கிழமை) மாலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், காணாமல் போனோரின் பிரச்சினைக் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்தபோதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் காணாமல் போனவர்களை கண்டுபிடிப்பதற்கான முழு முயற்சியில் சிறீலங்கா அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாகவும், அதற்கான குழுவை அமைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ள சிறீலங்கா அமைச்சர் மங்கள, இவ்விடயம் தொடர்பாக தமிழ் மக்களுடன் இணைந்து செயற்படவுள்ளதாகவும் அதற்கு தமிழ் மக்களும் ஆதரவு வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

இதேவேளை, காணாமல் போனவர்களை கண்டறிவது அவ்வளவு இலகுவாக காரியமல்ல என குறிப்பிட்ட அமைச்சர், அதற்கென கடினமாக உழைத்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

காணாமல் போனவர்கள் தொடர்பில் சிறீலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் இதனையொத்த கருத்தையே கூறியிருந்த நிலையில், அது உறவுகளை இழந்தவர்களுக்கு பாதிப்பையும் விசனத்தையும் ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

Top