டெங்கு நோயினால் காத்தான்குடியில் சிறுமி உயிரிழப்பு

டெங்கு காய்ச்சலினால் பீடிக்கப்பட்ட நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த காத்தான்குடி, நூறாணியா பிரதேசத்தை சேர்ந்த ஒன்பது வயது சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நேற்று (வெள்ளிக்கிழமை) அனுமதிக்கப்பட்ட குறித்த சிறுமி, இன்று அதிகாலை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்து காத்தான்குடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி யு.எல்.நஸீர்தீன் தெரிவிக்கையில், காத்தான்குடியில் கடந்த இரு வாரங்களாக டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அதன்படி இதுவரை சுமார் 40 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நோயின் தாக்கத்தை கட்டுப்படுத்த தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதனை முழுமையாக கட்டுப்படுத்த பொதுமக்களின் ஒத்துழைப்பு அத்தியவசியமானதாகும் என அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைப் பிரிவிற்கு உட்பட்ட பாண்டிருப்பு பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரும் அண்மையில் டெங்கு நோயினால் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

Top