கணவர் தனிக்கட்சி தொடங்கியதால் தீபா பேரவை கலைப்பு

தீபாவின் கணவர் மாதவன் தனிக்கட்சி தொடங்கியதால் தீபா பேரவையை கலைத்து ஓ.பி.எஸ். அணியில் இணைய நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளனர். அவர்கள் சென்னை வந்து ஓ.பன்னீர்செல்வத்தை சந்திக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

அ.தி.மு.க. பொதுச்செயலாளராகவும், முதல்- அமைச்சராகவும் இருந்த ஜெயலலிதாவின் திடீர் மரணம் தமிழக அரசியல் களத்தில் அதிரடி மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கிறது.

ஜெயலலிதாவின் மரணத்தை தொடர்ந்து அவரது அண்ணன் மகள் தீபா அரசியலில் குதித்தார். அ.தி.மு.க.வில் ஒரு பிரிவினர் தினமும் தி.நகரில் உள்ள தீபாவின் வீட்டு முன்பு திரண்டு அரசியலுக்கு வரவேண்டும் என்று தொடர்ந்து விடுத்த அழைப்பை ஏற்றே தீபா அரசியல் களத்தில் அடி எடுத்து வைத்தார்.

தீபாவை தேடி தினமும் வீட்டுக்கு வந்த அ.தி.மு.க. தொண்டர்களை அவரது கணவர் மாதவனே சந்தித்து ஆலோசனைகளை கேட்டு வந்தார். தமிழகம் முழுவதிலும் இருந்து திரண்டு வந்த அ.தி.மு.க. தொண்டர்கள், தீபா அரசியலுக்கு வந்தால் நிச்சயமாக வெற்றி பெறுவார் என்று மாதவனிடம் கூறி வந்தனர்.

இதுதொடர்பாக தீபாவுடன் மாதவன் நீண்ட நாட்களாக ஆலோசனையும் நடத்தினார். அதன் பின்னரே தீபாவின் அரசியல் பயணம் தொடங்கியது.

ஜெயலலிதா பிறந்த நாளான பிப்ரவரி 24-ந்தேதி அன்று “எம்.ஜி.ஆர். -அம்மா -தீபா பேரவை” என்ற பெயரில் தனி அமைப்பை தீபா தொடங்கினார்.

ஜெயலலிதா 2 முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் அவர் போட்டியிடுகிறார். இது தொடர்பாக தீபாவின் கணவர் மாதவன் ஆர்.கே.நகர் தொகுதிக்கு சென்று மக்களை சந்தித்து பேசினார்.

அதன்பின்னர் நேற்று முன்தினம் ஆர்.கே.நகரில் நடந்த கூட்டத்தில் தீபா கலந்து கொண்டார். இதில் மாதவனும் பங்கேற்றார்.
ஜெயலலிதாவின் மீது ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் வைத்திருக்கும் பாசம் தீபாவை வெற்றி பெற வைக்கும் என்று அவரது ஆதரவாளர்கள் கூறி வந்தனர்.

இந்நிலையில் தீபாவின் கணவர் மாதவன், திடீரென தீபாவின் அமைப்பில் இருந்து அதிரடியாக விலகியுள்ளார். நேற்று இரவு மெரீனாவில் உள்ள ஜெயலலிதா சமாதிக்கு சென்று வணங்கிய அவர் யாரும் எதிர்பார்க்காத வகையில் தனிக்கட்சி தொடங்கப்போவதாக அறிவித்தார். தீபா தொடங்கியிருப்பது அமைப்பு, நான் தொடங்க இருப்பது கட்சி என்று விளக்கம் அளித்த மாதவன், தீபா பேரவையில் தீய சக்திகள் புகுந்து விட்டதாகவும் கடுமையான குற்றச்சாட்டுகளை கூறினார்.

இது அரசியல் களத்தில் புதிய அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

ஜெயலலிதா மரணம் அடைந்தபோது அவரது அண்ணன் மகளான தீபா அரசியலுக்கு வர வேண்டும் என்று அ.தி.மு.க. முன்னணி நிர்வாகிகள் பலர் அழைப்பு விடுத்தபடியே இருந்தனர்.

அவர்களில் திருச்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. சவுந்தரராஜனும் முதன்மையானராக இருந்தார். தீபா பேரவையில் இருந்து செயல்பட்டு வந்த அவர் பேரவையை கலைக்க முடிவு செய்துள்ளார்.

இது தொடர்பாக நாளை ஆலோசனை கூட்டம் ஒன்றுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

இதுபற்றி சவுந்தரராஜன் நிர்வாகிகளுக்கு அழைப்பு கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார். நாளை நடைபெறும் கூட்டத்தில் தீபா பேரவையினர் கலந்து கொள்ள வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

அந்த கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தீபா தனக்கு முதலில் மக்கள் திரண்டு எழுந்து அளித்த ஆதரவை உரிய முறையில் ஏற்காமலும் அலட்சியப்படுத்தியும், காலம் கடத்தியதால் மக்கள் எழுச்சி மெல்ல மெல்ல குறைந்து விட்டது. தொண்டர்களை அவர் குழப்பி வருகிறார். இந்த நிலையில் தினமும் ஏராளமானோர் என்னை தொடர்பு கொண்டு பேசி வருகிறார்கள். தீபா பேரவையில் ஈடுபட்ட தோழர்களுக்கு பரிகாரம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. எனவே இது தொடர்பாக நாளை நடைபெறும் கூட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து தொண்டர்கள் கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இந்த கடிதம் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நிர்வாகிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

தீபா பேரவையின் ஆலோசனை கூட்டம் நாளை (19-ந்தேதி) திருச்சி திருவானைக்காவல் வெங்கடேஸ்வரா தியேட்டர் எதிரில் உள்ள இ.எம்.எஸ். சர்வீஸ் கட்டிடத்தில் நடக்கிறது.

இதே போல தமிழகம் முழுவதிலும் தீபா பேரவையினர் மாதவனின் புதிய கட்சி தொடக்கத்தால் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளார்கள். தீபாவை பார்ப்பதற்காக தினமும் சென்னைக்கு வந்து நாள் கணக்கில் காத்திருந்து தீபாவின் கணவர் மாதவனை சந்தித்து சென்ற அ.தி.மு.க. முன்னணி நிர்வாகிகள் பலரும் இனி என்ன செய்வது என்கிற கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

தீபாவுடன் இணைந்து செயல்பட முடியாமல் அவரது கணவர் மாதவனே விலகி இருப்பது தீபா ஆதரவாளர்களை கடும் குழப்பத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

திருச்சியில் தீபா பேரவை கலைக்கப்படுவது போல தமிழகம் முழுவதும் பெரும்பாலான மாவட்டங்களில் தீபா பேரவை கலைக்கப்படும் என்றே தெரிகிறது.

இது தொடர்பாக தீபா பேரவையினர் மாவட்டம் வாரியாக ஆலோசனை கூட்டங்களை நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.

சரியான ஒருங்கிணைப்பு இல்லாத காரணத்தாலேயே தீபா பேரவையில் நிர்வாகிகள் நியமிக்கப்பட்ட போதும் குழப்பங்கள் ஏற்பட்டன. மாதவனுக்கும், தீபாவுக்கும் இடையே இருக்கும் மோதலே இதற்கு காரணம் என்று கூறப்பட்டது.

தற்போது அந்த மோதல் முற்றி தீபா பேரவையை கலைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பதாக தீபா பேரவையினர் தெரிவித்தனர்.
ஓ.பி.எஸ். தனி அணியாக செயல்படத் தொடங்கிய போது தீபாவும், அவருடன் கைகோர்த்து செயல்பட போவதாக அறிவித்தார். ஆனால் தனது முடிவில் இருந்து பின்வாங்கி அவர் தனி அமைப்பை தொடங்கினார். இதனை அவரது ஆதரவாளர்கள் பலர் ஏற்றுக்கொள்ளாமல் விலகி சென்று தங்களை ஓ.பி.எஸ். அணியில் இணைத்துக் கொண்டனர்.

தற்போது தீபா பேரவையை கலைக்கும் நிர்வாகிகளும் ஓ.பி.எஸ். அணியில் இணைய திட்டமிட்டுள்ளனர். அவர்கள் சென்னை வந்து ஓ.பன்னீர்செல்வத்தை சந்திக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

இது தீபாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் கணவர் மாதவனும் தீபா பேரவையில் இருந்து விலகி இருப்பது தீபாவின் அரசியல் பயணத்தில் சறுக்கலையும், மேலும் பின்னடைவையும் ஏற்படுத்தி இருக்கிறது.

Related posts

Top