கால அவகாசம் கிடைப்பதை அடுத்து அரசு கதைப்பதை பார்த்தீர்களா?

தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு கண்டு நாட்டில் இன, மத, மொழி பேதங்களைக் களைகின்ற நோக்கம் எதுவும் அவசியமில்லை.

நல்லாட்சி என்று கூறிக்கொண்டாலும் நல்லாட்சியும் முன்னைய ஆட்சியாளர்களைப் போலவே நடந்து கொள்கின்றதே தவிர,

தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் சிங்கள மக்கள் அனுபவிக்கின்ற உரிமைகளை தமிழ் மக்களும் அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணம் துளியளவும் இல்லை என்பதே உண்மை.
தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்தால் பேரினவாதிகள் ஆத்திரமடைவர்.

காணாமல்போனவர்கள் தொடர்பில் விசாரணை மேற்கொண்டால் படையினர் பலர் கம்பி எண்ண வேண்டி வரும்.

தமிழ் மக்களை அவர்களின் சொந்த இடங்களில் குடியமர்த்தினால் இராணுவ ஆக்கிரமிப்பை வாபஸ் பெற வேண்டும்.

ஆகையால் இவை எதனையும் செய்யாமல் காலம் கடத்துவதே ஒரே வழி என்று நல்லாட்சி கருதுகிறது.
இதற்குக் காரணம் என்ன? தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு கண்டால் பேரினவாதிகள் தமக்கு எதிராகக் கிளர்ந்தெழுவர்.

எனவே கிடைத்த ஆட்சிப் பதவியை உரிய காலம் வரைக் கொண்டு செல்வதே ஒரே வழி என்று நல்லாட்சி கருதுகிறது.

தன்னில் எந்தக் குறை குற்றமும் இல்லாமல் இருப்பதற்காக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தருக்கு எதிர்க் கட்சித் தலைவர் பதவியைக் கொடுத்து அவர்களின் எதிர்ப்பையும் சமாளித்து நல்லாட்சி நரியாட்சியாக நகர்ந்து போகிறது.

ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் தீர்மானங்களை அமுல்படுத்துவதற்கு கால அவகாசம் கேட்கின்ற இலங்கை அரசு, கால அவகாசம் கிடைக்கும் என்பதை உறுதி செய்து கொண்டு, தடிப்புக் கதை கதைக்க ஆயத்தமாகிவிட்டது.

சர்வதேச நீதிபதிகளுக்கு அறவே இடமில்லை, கலப்பு நீதிமன்ற பொறிமுறைக்கு நாம் சம்மதிக்கவில்லை, ஐ.நா சபைக்கு எந்த வாக்குறுதிகளையும் நாம் வழங்கவில்லை என்பது போன்ற தடிப்புக் கதைகளை இலங்கை அமைச்சர்கள் கூறத் தலைப்பட்டுள்ளனர்.

உண்மையில் இலங்கையில் தமிழ் சிங்கள விரோதம் நீண்டு செல்வதற்கு அடிப்படைக் காரணம் சிங்கள ஆட்சியாளர்களினதும் பேரினவாதிகளினதும் வாய்ப் பேச்சுக்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.

தமிழினத்துக்கு எதிராக சிங்கள அமைச்சர்களும் பேரினவாதிகளும் கண்டபாட்டில் கதைத்தனர். இவற்றால் இனப் பகைமை இந்த நாட்டில் வேகமாகப் பரவியது.

இதன் விளைவுதான் தமிழ் – சிங்கள மக்களின் உறவு என்பது இன்றுவரை கட்டியெழுப்ப முடியாத விடயமாக இருக்கிறது.

இப்போதுகூட கால அவகாசத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடன் பெற்றுக் கொண்ட நல்லாட்சி, தற்போது கதைப்பதைப் பார்த்தால், அவர்களின் உள்நோக்கம் என்ன என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.
ஐ.நா தீர்மானங்களை அமுல்படுத்துவதற்கு இலங்கை அரசுக்கு கால அவகாசம் தேவையாக உள்ளது.

இக்கால அவகாசத்தை வழங்குவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் சம்மதித்துள்ளது. இது உண்மையில் பாராட்டப்பட வேண்டும்.

தமிழ் மக்களின் பெருந்தன்மையை இது காட்டுகிறது. எனவே நாங்கள் இதய சுத்தியோடு தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்று கூற வேண்டிய நல்லாட்சி,

அதையயல்லாம் விடுத்து தமிழர்களுக்கு – எதிராக ஆத்திரமூட்டக்கூடிய கதைகளைக் கதைக்கிறது எனில் இதை நல்லாட்சி என்று எப்படிக்கூற முடியும்?

Top