கச்சத்தீவு விவகாரம்: தமிழக சட்டசபையில் அமளிதுமிளி

கச்சத்தீவு 1974-ம் ஆண்டு தாரை வார்க்கப்பட்டது என்ற தமிழக அமைச்சர் ஜெயக்குமாரின் பேச்சிற்கு தி.மு.க.வினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து குரல் கொடுத்ததால் தமிழக சட்ட சபையில் அமளிதுமிளி ஏற்பட்டது.

தமிழக சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் தமிழக மீனவர் இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பான கவன ஈர்ப்பை மு.க.ஸ்டாலின் கொண்டு வந்தார்.

அவர் கூறியதாவது,

இந்திய கடல் எல்லைப் பகுதியில் தமிழக மீனவர் பிரிட்ஜோ இலங்கை கடற்படையால் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டார். சரோன் என்ற மற்றொரு மீனவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையால் தாக்கப்பட்டு வருகிறார்கள்.

சமீப காலமாக பல்வேறு சம்பவங்களில் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதும், கைது செய்யப்படுவதும் தொடர்கதையாகி வருகிறது. இராமேசுவரம், புதுக்கோட்டை, அக்கரைப்பட்டு மீனவர்கள் 128 பேர் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் கொடுமைகளை அனுபவித்து வந்தனர்.

சமீபத்தில் 85 பேரை விடுதலை செய்வதாக அறிவித்து 77 மீனவர்கள் விடுதலையாகி வந்திருக்கிறார்கள். படகுகளை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய மத்திய, மாநில அரசுகள் இதற்கு தகுந்த ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

கச்சத்தீவை மீட்பதுதான் இதற்கு நிரந்தர தீர்வாக அமையும். மீனவர்களுக்கு ஏற்பட்ட பிரச்சினைகளை தீர்க்க இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை அமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும், என்றார்.

இதனையடுத்து அமைச்சர் ஜெயக்குமார், கச்சத்தீவு நமது பாரம்பரியத்துக்கு உரியது. இது 1974-ம் ஆண்டு தாரை வார்க்கப்பட்டது. அனைவருக்கும் தெரியும் என்றார்.

இதனையடுத்து, இதற்கு தி.மு.க.வினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து எழுந்து நின்று குரல் கொடுத்தமையால் சபையில் கடும் அமளிதுமிளி ஏற்பட்டது என, தமிழக ஊடகச் செய்திகள் குறிப்பிட்டுள்ளன.

பின்னர், அமைச்சர் வருடத்தை மட்டும்தான் குறிப்பிட்டார். யாரையும் குறிப்பிட்டு பேசவில்லை. எனவே அனைவரும் அமைதியாக இருக்கும்படி கேட்டுக் கொள்கிறேன் என சபாநாயகர் சபையில் கோரினார்.

இதனைத் தொடர்ந்து, மு.க.ஸ்டாலின், நான் அரசியல் கலந்து எதுவும் பேசவில்லை. மீனவர்களுக்கு உரிய உரிமை கிடைக்க வேண்டும். 1974-ல் தி.மு.க. தலைவர் கலைஞர் தலைமையிலான ஆட்சி நடந்தது. எனவே அமைச்சர் குறிப்பிட்டதற்கு விளக்கம் சொல்ல எனக்கு அனுமதி தர வேண்டும் என்றார்.

இதற்கு சபாநாயகர், 1974 என்று வருடத்தை மட்டும்தான் அமைச்சர் குறிப்பிட்டு இருக்கிறார். இதற்கு விளக்கம் தேவையில்லை என்றதும், தி.மு.க.வினர் மீண்டும் எழுந்து நின்று குரல் கொடுத்தனர். இதனால் சபையில் மீண்டும் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது.

பின்னர் பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், வரலாற்று குறிப்பை சொன்னேன். 1974 என்றால் ஏன் உங்களுக்கு கோபம் வருகிறது எனக் கூறியதும், தி.மு.க.வினர் குரல் எழுப்பினார்கள். விளக்கம் அளிக்க மு.க.ஸ்டாலின் அனுமதி கேட்டார். பின்னர் சபாநாயகர் அனுமதி வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து சட்ட சபையில் நடந்த விடயங்கள் வருமாறு,

மு.க.ஸ்டாலின்:- 1974-ம் ஆண்டு கச்சத்தீவு பிரச்சினை வந்தபோது அப்போது முதலமைச்சராக இருந்த கலைஞர் கச்சத்தீவை இலங்கைக்கு விட்டுக் கொடுக்க கூடாது என்று பல்வேறு ஆதாரங்களை காட்டி மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார். கடுமையான எதிர்ப்பையும் பதிவு செய்தார். அதையும் மீறி கச்சத்தீவு உரிமையை மத்திய அரசு இலங்கைக்கு கொடுத்தது.

இதையடுத்து அனைத்து கட்சி கூட்டம் போட்டு அதிலும் கச்சத்தீவை இலங்கைக்கு கொடுக்கக் கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பாராளுமன்றத்தில் தி.மு.க. எம்.பி. செழியன் கச்சத்தீவை இலங்கைக்கு விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று பேசினார். மேல்-சபையிலும் தி.மு.க. சார்பில் குரல் கொடுக்கப்பட்டது. 24-7-74 அன்று தமிழகம் முழுவதும் கச்சத்தீவை இலங்கைக்கு கொடுப்பதற்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டது.

அதுமட்டுமல்ல மீண்டும் 2006-ம் ஆண்டில் தி.மு.க. ஆட்சியின்போது கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எனவே தி.மு.க. மீது வீண் பழி சுமத்தக்கூடாது.

அமைச்சர் ஜெயக்குமார்:- ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது கச்சத்தீவை மீட்க தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை எடுத்து வந்திருக்கிறார். அவருடைய உறுதியான நிலைப்பாடு கச்சத்தீவு மீட்கப்பட வேண்டும் என்பதுதான். 1998-ல் கச்சத்தீவை மீட்க உச்ச நீதிமன்றத்தில் ஜெயலலிதா வழக்கு தொடர்ந்தார். 1974-க்கு பிறகு நீங்கள் வழக்கு தொடுத்தீர்களா?

(இதற்கு எதிராக தி.மு.க.வினர் குரல் கொடுத்தனர். காங்கிரஸ் உறுப்பினர்களும் பேசுவதற்கு அனுமதி கேட்டனர். சபாநாயகர் அதற்கு அனுமதி வழங்கவில்லை)

மு.க.ஸ்டாலின்:- தமிழக மீனவர்களின் பல்வேறு உரிமைகளை அ.தி.மு.க. அரசால்தான் இழக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. 1974-ல் அனைத்து கட்சி கூட்டம் கூட்டி கச்சத்தீவு உரிமை கோரிய போது அதில் கையெழுத்து போட மறுத்தது அ.தி.மு.க.

அமைச்சர் ஜெயக்குமார்:- தமிழக மீனவர்களுக்கு ஜெயலலிதா என்னவெல்லாம் செய்தார் என்பதும் துரோகம் செய்தவர்கள் யார் என்பதும் மக்களுக்கு தெரியும். கடந்த வாரம் டெல்லி சென்று மத்திய அமைச்சரை சந்தித்தோம்.

அப்போது மீனவர்களின் பாதுகாப்பு, பாரம்பரிய உரிமை, எதிர்கால அணுகுமுறை ஆகியவை குறித்து பேச்சுவார்த்தை நடத்தினோம். கடலில் மீன் பிடிக்கும் மீனவர்கள் காற்றின் வேகம் காரணமாக கடல் எல்லையை தாண்டும் நிலை ஏற்படுகிறது. கடல் எல்லை என்பது ஒரு கற்பனை கோடுதான்.

எனவே எல்லை மீறுபவதாக கூறி மீனவர்களை கைது செய்யவோ, தாக்கவோ, துன்புறுத்தவோ கூடாது என்று கோரிக்கை வைத்தோம். அதை நிறைவேற்றுவதாக உறுதி அளித்திருக்கிறார்கள்.

இவ்வாறு விவாதம் தொடர்ந்து சென்றதாக, தமிழக ஊடகமான மாலை மலர் சுட்டிக்காட்டியுள்ளது.

Related posts

Top