இசைஞானியின் வித்தக காய்ச்சலும், பாலசுப்பிரமணியத்தின் ஞானச்செருக்கும்.

பிரபல இசையமைப்பாளர் இசைஞானி இளையராசா, மற்றும் பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் இருவருக்குமிடையில் உண்டாகியிருக்கும் காப்பீட்டு உரிமம் (royalty) சம்பந்தமான சர்ச்சை தமிழகத்து காட்சி ஊடகங்களின் TRP இலக்கை குறிவைத்த பேசுபொருளாக இன்றைய திகதிக்கு மாறியிருக்கிறது.

தமிழகத்து தொலைக்காட்சி விவாதங்களை பார்த்து திகைத்துப்போன இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், மற்றும் தமிழர்கள் வாழும் பல நாடுகளில் இருந்து வெளிவரும் தமிழ் பத்திரிகைகள் சஞ்சிகைகள் அனைத்தும் தமிழக ஊடகங்களின் செய்திகளை பின்பற்றி தாங்களும் முதல்த்தரமான செய்தியாக இளையராசா பாலசுப்பிரமணியம் இருவருக்கும் இடையில் உண்டான சர்ச்சை சம்பந்தமான அந்த செய்தியை முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டிருக்கின்றன.

தனது அனுமதியின்றி தான் இசையமைத்த பாடல்களை வருமானம் ஈட்டும் வகையில் பொதுவெளியில் எவரும் பாடக்கூடாது என்பதும், தனது பாடல்களை பாட விரும்புவோர் அல்லது கச்சேரி செய்து பணம் சம்பாதிக்க விரும்புவர்கள் தன்னிடம் அனுமதி பெற்று( Confirm to royalty ) மட்டுமே பாடவேண்டும் என்பதும் இளையராசா தரப்பு தெரிவிக்ககூடிய கட்டளை என்றும் ஒரு அறிவிக்கையை தமது வழக்கறிஞர்மூலம் அமெரிக்காவில் நிலைகொண்டிருக்கும் எஸ்பி பாலசுப்பிரமணியத்திற்கு இளையராசா தரப்பினர் அனுப்பி வைத்திருக்கின்றனர்.

எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் பாடகராக திரை உலகில் காலடி எடுத்து வைத்த 50 வது ஆண்டு நிறைவை ஒட்டி ஒரு நிகழ்ச்சி நடத்த அமெரிக்காவில் ஆயத்தமாக இருந்ததாகவும் நிகழ்ச்சி தொடங்கியபோது இளையராசாவின் வழக்கறிஞரின் அறிவிக்கை கிடைத்ததாகவும் அதனால் பாலசுப்பிரமணியம் அவர்கள் மிகுந்த அசௌகரியம் அடைந்து அதிர்ச்சிக்குள்ளானதாகவும் தெரிகிறது.

ஆயத்தம் செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் இளையராசா இசையமைத்து பாலசுப்பிரமணியம் பாடிய பாடல்களை ரசிகர்கள் எதிர்பார்ப்பார்கள் என்பதால் ஏற்படப்போகும் ஏமாற்ற நிலமையை சரி செய்ய பாலசுப்பிரமணியம் அவர்கள் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் விடயத்தை வெளிப்படுத்தி இனிமேல் இளையராசா இசையமைத்த பாடல்களை தான் மேடையில் பாடப்போவதில்லை என்று ஒரு செய்தி அறிவித்தலை பதிவாக ஆங்கிலத்தில் வெளியிட்டிருந்தார் என்றும் சொல்லப்படுகிறது.

பாலசுப்பிரமணியம் அவர்கள் இசை நிகழ்ச்சி நடத்த மேடை போடப்பட்டிருந்த அமெரிக்கா வாழ் மக்களிடையே எந்த வாதப்பிரதிவாதங்களோ கூச்சல் கூப்பாடுகளோ இருக்கவில்லை.

மாறாக தமிழக ரசிகர்கள் ஏமாற்றமடைந்து கொதிநிலையில் தள்ளப்பட்டு இருப்பதுபோல தமிழக பத்திரிகை ஊடகங்கள் தொலைக்காட்சிகள் சுனாமிக்கு முன், சுனாமிக்குப்பின் என்பதுபோன்ற கருத்தரங்குகளையும் விவாத அரங்குகளையும் திறந்துவிட்டு இளையராசா பாலசுப்பிரமிணியம் இருவருக்குமிடையில் எரியும் நெருப்பை அணைந்துவிடாமல் எண்ணெய் வார்த்துகொண்டிருக்கின்றன.

போதாக்குறைக்கு ஆர் கே நகர் பாஜக வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டிருந்த இளையராசா அவர்களின் இளைய சகோதரர் கங்கை அமரன் அவர்களை அரசியல் நேர்காணல் என்று நிர்ணயம் செய்யப்பட்டு அழைத்த ஒரு தொலைக்காட்சி ஊடகம் இளையராசா பாலசுப்பிரமணியம் சம்பந்தமான சர்ச்சையை இடைச்சொருகலாக சொருவி கேள்வியாக்கி அண்ணன் தம்பிக்குள்ளும் விரிசல் ஏற்பட வைக்கப்பட்டிருக்கிறது.

சாதாரணமாகவே ஒலிவாங்கி கிடைத்தால் கேட்போர் காதுகளில் இரத்தம் வரும்வரை பேசி தீர்க்கவல்ல கங்கை அமரனும் தன்னுள் அடங்கிக்கிடந்த நீண்ட நாளைய பழைய வெப்பம் அனைத்தையும் சந்தற்பம் கிடைத்தபோது கக்கி உமிழ்ந்து இசைஞானியாரின் நிம்மதிக்குள் ருத்திர தாண்டவம் ஆடி முடித்திருக்கிறார். நிலமையை புரிந்துகொண்ட இசைஞானி எந்த எதிர்மறையையும் இதுவரை வெளிப்படுத்தவில்லை.

இசைஞானி இளையராசா அவர்களுக்குள் இரண்டு பக்கம் இருப்பதாக நீண்டகாலமாக பொதுவெளியில் பேசப்படுவதுண்டு.

இசையில் அவர் அரசர், மெட்டு கட்டுவதில் வித்தகர், இசையை கோர்த்து கானமாக தருவதில் அவர் ஞானி.

ராகதேவன், இசைஞானி என்ற பட்டங்களுக்கு அப்பழுக்கு இல்லாத மெத்தப்பொருத்தமான ஒரு பல்கலை கழகம் இளையராசா என்பதில் எவருக்கும் மாறுபாடு இருக்கமுடியாது. அதேநேரம் சக கலைஞர்களை மதிக்கத்தெரியாதவர் தலைக்கனம் கொண்டவர் விட்டுக்கொடுப்பு இல்லாத பிடிவாதக்காரர் என்றும் அவருக்கு பெயர் உண்டு.

அது ஞானச்செருக்காகவும் வித்தகக்காய்ச்சலாகவும் பிறவிக்குணமாகவும் இருக்கலாம்.

ஆனால் இளையராசா அவர்கள் தனது தலைக்கனத்தால் ஆரம்ப காலங்களில் தான் மென் மேலும் வளர்ச்சியடைய காரணமாக இருந்த சக கலைஞர்களான பாரதிராஜா, வைரமுத்து, கே ஜே ஜேசுதாஸ் போன்றவர்களைக்கூட அனுசரித்துப்போகாத தன்மையுடன் இருந்து வருவதாகவே சொல்லப்படுகிறது.

பாலசுப்பிரமணியம் அவர்களை பொறுத்தவரை தாழ்வு மனப்பாண்மைக்கு அப்பாற்பட்டவர், மிகவும் பணிவானவர் முரண்டு பிடிக்காதவர் அனுசரித்துப்போவதில் எந்த முரண்பாடும் இல்லாதவர் என்பதே பரவலான நம்பிக்கையாக இருந்துவருகிறது.

இளையராசா அவர்கள் இன்று நேற்று மட்டுமல்ல பல வருடங்களுக்கு முன்பிருந்தே Royalty எனப்படும் தனது இசையில் உருவான பாடல்களுக்கான காப்புரிமையை தனது சினிமா தயாரிப்பாளர்களிடம் பெற்று வைத்திருப்பதாகவே சொல்லப்படுகிறது. அந்த வகையில் அவர் தனது உரிமத்துக்குட்பட்டு அவரது அனுமதியை பெற்று வணிகரீதியான நிகழ்ச்சிகளை நடத்தவேண்டும் என்பதில் தவறு இருக்கமுடியாது.

எழுத்து ரீதியான புத்தக பதிப்புகளுக்கும், சினிமா சம்பந்தமான ஒளிநாடா பதிப்புகளுக்கும், இந்தியாவில் காப்புரிமை நடைமுறையில் உண்டு. எழுத்து மூலமான பாடல்களுக்கும் உரிமம் உண்டு. அவைகளை எழுந்தமானத்தில் எவரும் மறு பதிப்பு செய்வதற்கு உரிமையில்லை.

இசை பாடல்களுக்கான உரிம சட்டம் 1960 களுக்கு முன்னிருந்து இந்தியாவில் நடைமுறையில் இருந்தாலும் அவற்றை நடைமுறைப்படுத்தும் அலகுகளை கடைப்பிடிப்பதில் பல நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதால், சட்டப்படி உரிமம் இருந்தாலும் பெரும்பாலும் பாடல்களை பாடும் உரிமம் கண்காணிக்கப்படுவது கடைப்பிடிக்கப்படாமலே இருந்து வருகிறது.

பாலசுப்பிரமணியம் அவர்கள் இந்திய திரைப்படங்களில் அறிமுகமாகி இந்திய ரசிகர்களாலேயே அதிகமாக ஆராதிக்கப்படுபவர். தெலுங்கை தாய்மொழியாக கொண்டிருந்தாலும் விஷேடமாக தமிழ்ப்பாடகராகவே அறியப்பட்டவர் அவர் 50, வது ஆண்டு நிறைவை கொண்டாடவேண்டுமென்றால் அதற்கான இடம் அமெரிக்கா அல்ல தமிழ்நாடுதான்.

தெலுங்கு சினிமாவில்த்தான் அவர் முதல் முதலில் பாடியிருந்தாலும் தமிழ்ப்படமான சாந்திநிலையம் (இயற்கையென்னும் இளைய கன்னி) அவரை அறிமுகம் காட்டிய பாடலாகும் அடுத்து எம்ஜீ ஆர் அவர்களின் அடிமைப்பெண் படத்தில் இடம்பெற்ற “ஆயிரம் நிலவே வா” பாடல்தான் பாலசுப்பிரமணியம் அவர்களை ஒரு நட்சத்திர பாடகராக இனங்காட்டியது. அந்த வகையில் பாலசுப்பிரமணியம் அவர்கள் 50, வது ஆண்டு விழாவை தமிழ்நாட்டில் கொண்டாடியிருந்தால் இளையராசா அவர்கழும் நிகழ்ச்சியில் இணைந்திருக்கக்கூடும் சர்ச்சையும் வந்திருக்க வாய்ப்பில்லை.

50, வது ஆண்டு விழா என்ற பெயரில் பெரும் வருமான நோக்கோடு நிர்ணயிக்கப்பட்ட விழா என்பதால் இசைஞானியும் பொருமியிருக்கிறார். பாலசுப்பிரமணியம் அவர்களும் அவசரப்பட்டு முகநூலில் பதிவு செய்யாமல் இளையராசாவை தொலைபேசி மூலம் அணுகியிருக்கலாம்.

பழம்பெரும் இசையமைப்பாளர்களான எம் எஸ் விஸ்வநாதன், கேவீ மஹாதேவன் அவர்களின் காலத்தால் அழியாத கானங்கள் ஒன்றும் இசைஞானி இளையராசாவின் கானங்களுக்கு குறைந்தவை அல்ல. ரி எம் சௌந்தரராஜன், சீர்காழி கோவிந்தராசன் பிவி ஸ்ரீனிவாஸ் அவர்கள் பாடிய பல பாடல்கள் யாரால் இசை அமைக்கப்பெற்றது என்பது தெரியாமலே பாடகர்களின் பெயரில் பிரபலமாகி இருக்கின்றன. அதேபோல இளையராசா அவர்களின் இசையில் பாலசுப்பிரமணியம், மற்றும் ஜேசுதாஸ் ஆகியோரால் பாடப்பட்ட பாடல்கள் பல பாடகர்களின் பெயராலேயே போற்றப்படுகின்றன.

இசைஞானி இளையராசா நிச்சியம் ராகதேவன்தான் அவர் கொஞ்சம் அவசரப்பட்டிருக்க தேவையில்லை.

ஈழதேசம் செய்திகளுக்காக.
கனகதரன்.

Top