இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது அதிமுகவினருக்கு தற்போதைக்கு இலாபமே.

தமிழக மக்கள் தொகையில் ஆகக்கூடிய பொதுமக்கள் ஆதரவை பெற்றிருந்த மாபெரும் அரசியற் கட்சியான அஇஅதிமுக என்ற கட்சியின் இலச்சினை சின்னமான இரட்டை இலை பாவனைக்கில்லாதவாறு தற்காலிகமாக முடக்கப்பட்டுவதாக 22/03/2017 இன்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.

இரட்டை இலை சின்னத்திற்கு மட்டும் தடைவிதித்ததோடல்லாமல் அந்த சின்னத்தை தன்னகத்தே கொண்டிருந்த அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றகழகம் என்ற கட்சி பெயரையும் மறு அறிவித்தல் வரும்வரை எவரும் பாவிக்க முடியாதபடி இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்குட்பட்டு முடக்கம் செய்யப்படுவதாகவும் தேர்தல் ஆணையத்தினால் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சசிகலா தரப்பு பிரிவினரும், பன்னீர்ச்செல்வம் தரப்பினரான இரு தரப்பினரும் இரட்டை இலையும் அதிமுக என்ற கட்சியும் தமக்குத்தான் சொந்தம் என்று பல்வேறுபட்ட நியாயப்பாடுகளை எடுத்து வைத்து கடந்த ஒரு மாதமாக பொதுவெளியில் பஞ்சாயத்து செய்து வருகின்றனர். ஆகக்கூடிய சட்டமன்ற உறுப்பினர்களையும், நாடாளுமன்ற உறுப்பினர்களையும் தன்னகத்தே கொண்டுள்ள சசிகலா தரப்பினர் பொதுவெளியில் குறிப்பிட்டதுபோல எதுவும் நம்பத்தகுந்ததாக இல்லை என்பதை கருதி தேர்தல் ஆணையம் சின்னத்தை தற்காலிகமாக தடை செய்திருக்கிறது.

கட்சி தமக்குத்தான் சொந்தம் என்பதை நிருபணப்படுத்தும் வகையில் இருதரப்பினரும் பல நூற்றுக்கணக்கான ஆவணங்களை இரு பெரும் வாகனங்களில் எடுத்துச்சென்று தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிமுக என்ற கட்சி தன்பால் கொண்டிருக்கும் மூல யாப்பு அடிப்படை அனுமான சட்ட விதி நடைமுறைகளை ஜெயலலிதாவின் மறைவுக்குப்பின்னர் எவரும் பின்பற்றவில்லை கட்சியின் உப விதிகள் தத்தமது சுதநலத்துக்கு சாதகமாக பயன்படுத்தப்பட்டு வருவதாக பொதுவான கருத்துக்கள் ஊடகங்களில் விவாதிக்கப்பட்டு வந்தன. ஜெயலலிதாவின் மறைவின் பின்னர் சசிகலா தரப்பினர் தாம்தான் அதிமுகவின் தலைமைக்கு உரிமையுடையவர்கள் என்றும், மாறாக ஜெயலலிதாவால் இனங்காணப்பட்ட தாம்தான் உருத்துடையவர்கள் என்று பன்னீர்செல்வம் தரப்பினரும் பொதுவெளியில் பஞ்சாயத்து செய்து வந்தனர்.

சட்ட நியாய அனுமான அடிப்படையை புறந்தள்ளிவிட்டு யதார்த்த நிலையில் ஆராய்ந்து பார்த்தால் ஜெயலலிதாவின் மறைவுக்குப்பின் நடந்த ஒவ்வொரு நிகழ்வுகளுக்குள்ளும் சம்பந்தப்பட்ட அனைவரும் சந்தற்பவாதிகள் என்பதை மிக எளிதாக உணர்ந்துகொள்ளமுடிகிறது. சசிகலா நட்புக்கு இலக்கணமும் இல்லை பன்னீர்செல்வம் புனிதரும் இல்லை என்பது வெள்ளிடை மலையாக தெரிகிறது. இறுதி தீர்வாக மக்கள் தீர்ப்பை தவிர வேறு எதையும் ஏற்றுக்கொள்ள முடியாமல் இருந்தாலும் அராஜக போக்கு கொண்ட தனிமனித துதிபாடும் கட்சிகளுக்கு இன்றைய தேர்தல் ஆணையத்தின் முடிவு மக்களிடையே ஒரு செய்தியை சொல்லுவதாகவே உணரமுடிகிறது.

தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தை முடக்கியதால் அந்த நடவடிக்கை பன்னீர்செல்வம் அணிக்கு தற்போதைக்கு அரசியல் செய்வதற்கு சாதகமாக இருக்கும் என்பது மறுப்பதற்கில்லை. இருந்தும் நடக்கவிருக்கும் ராதாகிருஷ்ணன் நகர் தேர்தலில் அதிமுகவின் வாக்கு வங்கி உடைவுபெற்றிருப்பதால் நிச்சியம் திராவிட முன்னேற்ற கழகம் அந்த தொகுதியில் வெற்றிபெறுவதற்கான சாத்தியங்கள் அதிகமாக இருப்பதாகவே கொள்ளமுடியும்.

அதை உறுதிப்படுத்தும் வகையில் திருமாவளவன் முன்னின்று நிறுவிய மக்கள் நலகூட்டணி ஆர்கே நகரில் போட்டியிடுவதிலிருந்து விலகி இருக்கிறது. மதவாத சக்திகளுக்கு எதிரான ஒரு அணியை கட்டி எழுப்பும் வேலைத்திட்டத்தில் இருப்பதால் தாம் போட்டியிடவில்லை என்று ஒரு நேர்காணலின்போது திருமா பேட்டியளித்திருக்கிறார் மக்கள்நல கூட்டணியின் பின்வாங்கல் மறைமுகமாக திமுக காங்கிரஸ் கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் தம்மை இணைத்துக்கொள்ளும் முன்னோட்டமாக இருக்கும் என்பதும் பின்னர் புரிந்துகொள்ளமுடியும்.

இரட்டை இலை சின்னம் தடைசெய்யப்படாமல் இருந்தாலும் அதிமுகவின் துணை பொதுச்செயலாளர் ரி ரி வி தினகரன் நிச்சியம் ஆர்கே நகர் இடைத்தேர்தலில் தோல்வியை தழுவுவார் என்பது தவிர்க்கமுடியாமல் இருக்கும். அந்த வகையில் இரட்டை இலை சின்னம் தடை செய்யப்பட்டதுதான் தமது தோல்விக்கு காரணம் என்பதை மக்கள் அரங்கில் எடுத்து வைத்து பிரச்சாரம் செய்து தப்பிப்பதற்கு சசிகலா தரப்பிற்கு உதவியாக அமையலாம். எனவே அதிமுகவின் இரு அணியினருக்கும் சின்னம் முடக்கத்துக்குள்ளாகியிருப்பது தற்சமயத்துக்கு நன்மை பயப்பதாகவே இருக்கும்.

இங்கு சசிகலா பன்னீர் தரப்புகளுக்க்கிடையே மத்திய பாஜக அரசின் சதி நிறையவே இருக்கிறது என்பதை அதிமுகவுக்குள் எதிராளிகளாக இருக்கும் சசி பன்னீர் தரப்பினர் பல்வேறு காரணங்களின் அடிப்படையில் வெளியில் சொல்லாவிட்டாலும் மோடி அரசு தமிழக அரசை டிஸ்மிஸ் செய்வதற்கான அனைத்து தந்திரோபாயங்களையும் ஜெயலலிதாவின் மறைவுக்குப்பின் நிழலாக தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறது என்பது காலப்போக்கில் அனைவரும் உணரலாம்.

சுருக்கமாக சொல்லப்போனால் அதிமுக என்ற கட்சி தனது வீரியத்தை முற்றாக இழந்துவிட்டது என்பதே மறுக்கமுடியாத யதார்த்தமாகும்.

ஈழதேசம் செய்திகளுக்காக.
கனகதரன்.

Related posts

Top