“வட போச்சே”… – அடுத்தடுத்து பல்பு வாங்கும் திமுக… அசராத அதிமுக…

அதிமுகவின் பிளவுகளை அடுத்து திமுகவும் பல்வேறு விஷயங்களில் முட்டி மோதித்தான் பார்க்கிறது. ஆனால் இறுதியில் திமுகவுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது.ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக சசிகலா அணி ஒ.பி.எஸ் அணி என இரண்டாக பிரிந்தது. சசிகலாவுக்கு எதிராக ஒ.பி.எஸ் போர்க்கொடி தூக்கியதையடுத்து சசிகலா மீது பல குற்றசாட்டுகளை முன்வைத்தார். இதனால் சசிகலாவுக்கும் ஒ.பி.எஸ்க்கும் போட்டா போட்டி நிலவியது.

ஊரு ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பது போல, அதிமுகவின் பிளவு திமுகவினரிடையே படு குஷியை ஏற்படுத்தியது.

இதைதொடர்ந்து ஜெயலலிதா மரணம் குறித்த சந்தேகங்களை தெளிவு படுத்த வேண்டும் என ஒ.பி.எஸ் முழக்கமிட்டு வந்தார்.

சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கும்வரை தமிழக முதலமைச்சராக ஒ.பி.எஸ் பதவி வகித்து வந்தார் என்பது அனைவரும் அறிந்ததே…

அதுவரை ஒ.பி.எஸ்ஸின் செயல்பாடுகள் குறித்து விமர்சித்து வந்த திமுக செயல்தலைவர் ஸ்டாலின் அதன்பின்பு அப்படியே ஜால்ரா தட்ட ஆரம்பித்துவிட்டார்.

ஒ.பி.எஸ் நன்றாகதான் ஆட்சி புரிந்தார், மேகதாது அணை பிரச்சனை, ஜல்லிக்கட்டு போராட்டம் உள்ளிட்ட விஷயங்களில் சிறப்பாக செயல்பட்டார், அவரை ஏன் அவசர அவசரமாக பதவி விலக செய்ய வேண்டும் என ஒ.பி.எஸ்க்கு ஆதரவாக பல வாதங்களை முன்வைத்தார்.

இதையடுத்து சசிகலா தரப்பில் ஒ.பி.எஸ் திமுகவுடன் சேர்ந்து கூட்டு சதியில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டினர்.

ஆனால் ஒ.பி.எஸ் எதற்கும் பிடிகொடுக்க வில்லை. திமுகவை அவர் கண்டு கொள்ளவே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

இதில் திமுக முதல் முதலில் பல்பு வாங்க ஆரம்பித்தது. இதைதொடர்ந்து எம்.எல்.ஏக்கள் கூவத்தூரில் அடைத்து வைக்கப்பட்டது தொடர்பாக ஒ.பி.எஸ் கேள்வி எழுப்பினார். ஆளுநரிடமும் நேரில் சென்று புகார் அளித்தார்.

இதற்கு சப்போர்ட் செய்யும் வகையில் ஸ்டாலினும் ஆளுநர் மற்றும் குடியரசு தலைவரிடம் புகார் அளித்தார்.

ஆனால் ஆட்சியை ஏற்க போதுமான அளவு எம்.எல்.ஏக்களின் ஆதரவு இருந்ததால் எடப்பாடி பழனிச்சாமியை முதலமைச்சராக பதவி வகிக்க செய்தாலும் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட்டார்.

இதற்காக எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையை கூட்டியபோது எப்படியாவது அமளியில் ஈடுபட்டு எடப்பாடி ஆட்சியை கலைக்க வேண்டும் என்பதில் ஸ்டாலின் குறியாக இருந்தார்.

ஆனால் எடுபடவில்லை. சபாநாயகர் தனபால் திமுகவினர் அனைவரையும் வெளியேற்றிவிட்டு பேரவையை நடத்தினார். இதையடுத்து முதலமைச்சர் பதவியை எடப்பாடி தக்கவைத்து கொண்டார்.

இதில் இரண்டாவது முறையாக திமுக பல்பு வாங்கியது.

அடுத்த கட்டமாக ஜெயலலிதா மறைவையடுத்து காலியாக உள்ள ஆர்.கே.நகர் தொகுதியில் வரும் ஏப்ரல் 12 ஆம் தேதி இடைத்தேர்தல் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

அப்போது ஆர்.கே.நகர் தேர்தல் சட்டப்படியும், முறையாகவும் நடைபெற வேண்டுமென்றால் காவல் ஆணையர் ஜார்ஜை இடமாற்றம் செய்யவேண்டும் என திமுக சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

ஆனால் அதுகுறித்து இதுவரை நடவடிக்கை ஏதும் மேற்கொள்ளபடததால் இந்த விஷயத்திலும் திமுக பின்னடைவை சந்தித்தது.

இதையடுத்து ஆர்.கே.நகரில் போட்டியிட வேட்பு மனுதாக்கல் தேதி அறிவிக்கபட்டது.

அதில் சசிகலா தரப்பில் டி.டி.வி தினகரனும், ஒ.பி.எஸ் தரப்பில் மதுசூதனனும், திமுக சார்பில் மருதுகணேஷும் உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சியினர் வேட்பு மனுதாக்கல் செய்தனர்.

வேட்பு மனுதாக்கலுக்கான தேதி நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், இன்று வேட்பு மனு மீதான பரிசீலனை நடைபெற்றது.

அப்போது ஒ.பி.எஸ் தரப்பு வேட்பாளர் மதுசூதனன், திமுக வேட்பாளர் மருதுகணேஷ், பா.ஜ.க வேட்பாளர் கங்கை அமரன் ஆகியோரின் வேட்பு மனுவை ஏற்பதாக தேர்தல் அதிகாரி பிரவீன் நாயர் தெரிவித்தார்.

இதையடுத்து சசிகலா தரப்பு வேட்பாளர் டி.டி.வி தினகரன் மீதான வழக்குகள் நீதிமன்றத்தில் உள்ளதால் அவரின் மனுவை ஏற்க கூடாது என திமுக வேட்பாளர் மருதுகணேஷ் தேர்தல் அதிகாரி பிரவீன் நாயரிடம் புகார் மனு அளித்தார்.

இதனால் டி.டி.வி தினகரனின் வேட்பு மனு வெயிட்டிங்கில் வைக்கப்பட்டது.

என்னடா ரகளை கூட்டம் அமைதியாக தேர்தல் வேலைபாடுகளை மட்டும் பார்கிறதே என்று நினைக்கும் தருவாயில் திமுக வேட்பாளராக போட்டியிடும் மருது கணேஷ் தினகரனுக்கு ஆப்பு வைக்க பார்த்தார்.

ஆனால் அங்கேயும் திமுகவின் சாமர்த்தியம் பலிக்கவில்லை. 3 மணி நேர தாமதத்திற்கு பிறகு தினகரனின் வேட்பு மனுவை ஏற்பதாக தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.

இவ்வாறு அடுத்தடுத்து திமுக பல்பு வாங்கினாலும் அதை வெளிக்காட்டாமல் தொடர்ந்து சிக்கலை உண்டு பண்ண தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருவதாக அதிமுகவினர் வசை பாடி வருகின்றனர்.

Related posts

Top