நடிகர் ரஜனிகாந்த் யாழ் செல்வது சர்வதேச அரசியலில் இன்னொரு கரும்புள்ளி.

லண்டனை தலைமையகமாக கொண்டு ஐரோப்பாவில் இயங்கிவரும் “லைகா” என்ற நிறுவனம் தமது தாய் நிறுவனமான ஞானம் அறக்கட்டளை அமைப்பின் பெயரில் இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்களுக்கு 150 வீடுகளை வவுனியா சின்ன அடம்பன் மற்றும் புளியங்குளம் பகுதியில் நிர்மாணித்திருக்கிறது.

வரவிருக்கும் ஏப்ரல் மாதம் ஏழாம் அல்லது ஒன்பதாம் திகதிகளில் குறித்த குடியிருப்பு வீடுகளை போரினால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு லைகா நிறுவனம் வழங்க இருக்கிறது. அதற்கான நிகழ்வு யாழ்ப்பாணத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. பிரதம விருந்தினராக தென் இந்திய சினிமா பிரபலம் ரஜனிகாந்த் பங்குபற்றுவார் என்றும் அறியப்படுகிறது.

இந் நிகழ்வில் பங்குபற்றுவதாக இருந்த வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்கள் தனது பிரசன்மத்தை மறு ஆய்வுக்கு உட்படுத்தியிருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. ரஜனிகாந்த் வருகை தருவது சர்வதேச அரசியலில் விரும்பத்தகாத செயலாக்கத்தை ஈழத்தமிழர்பால் தோற்றுவிக்க கூடும் என்பதால் முதலமைச்சர் விக்னேஸ்வரன் இந்த நிலைப்பாட்டை எடுத்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

Lyca என்ற நிறுவனம் முன்னாள் ஸ்ரீலங்காவின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ அவர்களை பங்குதாரராக கொண்டுள்ளது என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து இருந்து வருகிறது. அந்த குற்றச்சாட்டின் காரணமாக லைகா நிறுவனம் தயாரித்து நடிகர் விஜய் நடித்திருந்த கத்தி படம் வெளியிட இருந்தபோது புலம்பெயர் தமிழர்கள் மத்தியிலும், இன்னும் அதிகமாக தமிழகத்திலும் பெரிய எதிர்ப்பு உண்டாகி ஒரு போராட்டமே நடந்தது. அப்போது லைகா நிறுவனம் பல நியாயப்பாடுகளை எடுத்து வைத்து ஒரு சமரசம் செய்யப்பட்ட பின் கத்தி படப்பிரச்சினை கண்டனங்களுடன் தீர்வுக்கு வந்தது.

அப்படிப்பட்ட லைகா நிறுவனம் அமைத்து வழங்கவிருக்கும் வீடுகளை பெற்றுக்கொள்ள வேண்டாம் என்று யாரும் இன்று எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

காரணம் ஸ்ரீலங்காவுக்குள் டக்ளஸ் தேவானந்தா, மற்றும் புளொட் சித்தாத்தன், கருணா, பிள்ளையான் போன்ற மக்கள் விரோத ஆயுத குழுக்களின் அமைப்புக்களின் தலைவர்கள் காலாகாலமாக சிங்கள அரசுகளோடு இணங்கி அரசியல் செய்யும்போது, ஈழத்தமிழர்களின் தேசிய அடிப்படை கொள்கைகளை தாண்டி செயற்பட்டாலும் அவர்கள் செய்யும் அரசியல் மூலம் கிடைக்கும் சில நன்மைகளை தவிர்க்க முடியாமல் கையறு நிலையில் உள்ள மக்கள் பெற்றுக்கொண்டும் இருக்கிறார்கள்.

அந்த வகையில் போர்க்காலத்தில் அனைத்தையும் இழந்து நிர்க்கதியாக இருக்கும் மக்களுக்கு கிடைக்கவிருக்கும் லைகா நிறுவனத்தின் வீடுகளை பெற்றுக்கொள்வதற்கு கொள்கை ரீதியாக எவரும் எதிர்க்கவில்லை.

சிங்கள அரசாக இருந்தாலும் சரி ஈழ தேசியத்திற்கு எதிராக அரசியல் செய்பவர்களாக இருந்தாலும் சரி எவர்மூலமாக இருந்தாலும் இன்றைய நிச்சியமற்ற ஒரு நிலையில் பாதிப்புக்குள்ளான மக்களுக்கு கிடைக்கும் நன்மைகள் சம்பந்தமாக விமர்சிக்க வேண்டாம் என்பதே பலரது பொதுவான கருத்து. அவை அனைத்தும் உள்ளக அரசியல் சம்பந்தப்பட்ட ஒரு விடையமாகவே உணரப்பட்டு வருகிறது.

லைகா நிறுவனம் வீடுகள் கையளிக்கவிருக்கும் நிகழ்ச்சியை சர்வதேச அரசியல் வெளியில் பட்டு தெறிக்க வைக்கும் ஒரு திட்டமிடப்பட்ட தந்திரமாக, வீடுகளை கையளிக்கும் நிகழ்வுக்கு தென் இந்திய திரைப்பட நடிகர் ரஜனிகாந்த் அவர்களை வரவழைக்கும் முயற்சிகள் நடைபெற்று முடிவு செய்திருக்கின்றனர்.

போர் முடிவுக்கு வந்து எட்டு வருடங்கள் முடிந்தபோதும் அமெரிக்கா கொண்டுவந்த அற்ப சொற்ப முடிவுகளை பெற்றுதரவல்ல தீர்மானம் கூட நடைமுறைப்படுத்தப்படவில்லை. மனித உரிமை மீறல் போர்க்குற்றம், காணாமல் போனோர், விடுவிக்கப்படாத போராளிகள், போன்ற விடயங்கள் சம்பந்தமாக எந்த தீர்வையும் ஐநா முதற்கொண்டு சர்வதேசம் முடிவுக்கு கொண்டுவரவில்லை.

முன்னாள் ஐநா செயலாளர் பான் கீ மூன் அவர்களால் அமைக்கப்பட்ட மூவர் கொண்ட நிபுணர்கள் குழுவின் அறிக்கை சம்பந்தமான நகர்வு, போர்க்குற்றம் சம்பந்தமாக சர்வதேச விசாரணை நடத்தப்படவேண்டுமென்ற கோரிக்கை, காணாமல் போனோர் பற்றிய விளக்கம் எதுவும் ஜெனீவாவில் தற்போது நடந்து முடிந்த அமர்வில்க்கூட முடிவெடுக்கப்படவில்லை.

நடந்து முடிந்த ஐநா மனித உரிமை கவுன்ஸ்லில் மீண்டும் இரண்டு வருடம் வாய்தா வாங்கியிருக்கும் ஸ்ரீலங்கா ஆட்சியாளர்கள் இலங்கையில் நிலமை சுமூகமாக இருக்கிறது மக்கள் சகசமான வாழ்வுக்கு திரும்பியிருக்கிறார்கள் என்பதை காட்டுவதற்கான ஆவணங்களை திரட்டும் முகமாக அப்பப்போ இந்தியாவிலிருந்து பிரபலங்களை இறக்கி சர்வதேச அரங்கில் போர்க்குற்ற விசாரணையை மழுங்கடித்து வருகின்றனர்.

இப்பேற்பட்ட துரோகத்தனமான செயலில் இந்திய மத்திய மாநில அரசியற்கட்சிகள் பல்வேறு பிரபலங்களையும் திரைப்பட நடிகர்கர்களையும் இலங்கைக்கு அனுப்பி பெரும் துரோகமிழைத்து வருகிறது.

2009 ல் போர் முடிவுக்கு வந்த சில மாதங்களில் அன்றைய காங்கிரஸுன் கட்டளைக்கமைய காங்கிரஸின் கூட்டாளி கருணாநிதி தனது மகள் கனிமொழியையும் தனது அறசியற் கூட்டாளி திருமாவையும் ஸ்ரீலங்காவுக்கு அனுப்பி நிலமை மிகவும் சீராக இருப்பதாக கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டு சர்வதேச நெருக்கடியிலிருந்து ராஜபக்‌ஷவை காப்பாற்றினார். அடுத்து கருணாநிதி சோனியா குழுவினர் நடிகை அசினை ராஜபக்‌ஷவின் துணைவியுடன் யாழ்ப்பாணம் வரை அனுப்பி வைத்து தமிழர்களின் சர்வதேச அரசியலில் மண் அள்ளிப்போட்டனர்.

அடுத்து வெளிவந்த சனல்4 தொலைக்காட்சி சின்னாபின்னமான ஈழ நிலவரத்தையும் போரில் நடந்த கொடூரத்தையும் படம்பிடித்து சர்வதேசத்திற்கு பகிரங்கப்படுத்தியது. அப்போ எதிர்வினையாற்ற சர்வதேசம் முனைப்பு காட்டியபோது காங்கிரஸ் அரசு முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமை சமாதான தூதுவராக ஸ்ரீலங்காவுக்கு அனுப்பி திசை திருப்பியது.

அதன் பின் சிங்கள அரசின் நிழல் அரசியல்வாதிகளான தமிழர் தேசிய கூட்டமைப்பின் அனுசரணையுடன் சினிமா டைரக்ரர் பாரதிராஜா, சினிமா பாடலாசிரியர் வைரமுத்து போன்றோர் இலங்கை யாழ்ப்பாணம் வரை அனுப்பி வைக்கப்பட்டு ஸ்ரீலங்கா அரசுக்கான நற்சான்று ஆவணங்களை சேகரித்து கொண்டனர். அதன்பின் எஸ்பி பாலசுப்ரமணியம் யாழ்ப்பாணம் சென்று கலை நிகழ்ச்சி நடத்தி வந்தார்.

போரினார் பாதிக்கப்பட்ட மக்களை மகிழ்ச்சி படுத்தவேண்டாம் என்பது நமது கருத்து அல்ல அரசியல் ரீதியாக சர்வதேச குற்றவியல் நீதி விசாரணைக்கு ஸ்ரீலங்கா ஆட்சியாளர்களை உட்படுத்த முனைந்து மிகப்பெரிய இராசதந்திர முயற்சியில் ஈடுபட்டிருக்கும் வேளையில் குளத்தை கலக்காதீர்கள் என்பதே எமது கோரிக்கையாக தொடர்ந்து கேட்டுவருகிறோம்.

பெரும்பான்மையான பொதுமக்களும் ஈழ மக்களுக்கான ஆதரவு அமைப்புக்களும் அரிய பங்காற்றி வேலை செய்துகொண்டிருக்கும் தருணத்தில் நரகத்து முட்கள்போல இந்திய பிரபலங்கள் தாளியை உடைப்பதிலேயே குறியாக இருக்கின்றன.

இப்போ சினிமா நடிகர் ரஜனிகாந்த் இலங்கைக்கு போக தயாராக இருக்கிறார் இதனால் லைகா நிறுவனம் மகிழலாம், இந்திய பிரதமர் மோடியும் பாரதிய ஜனதா கட்சியும் பேரானந்தம் அடையலாம், ஈழத்தமிழர்களுக்கு என்றைக்கும்போல தரித்திரமே விஞ்சி நிற்கும் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் மனச்சாட்சியுடன் உணர்ந்து கொள்ளவேண்டும்.

ரஜனிகாந்த் இலங்கைக்கு போகவேண்டாம் என்று மே17 இயக்கம் உட்பட பல அமைப்புக்கள் கண்டனம் வெளியிட்டு இருக்கின்றன, இதற்குள் நானும்கூட என்பதுபோல விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் அவர்களும் கும்பலில் கோவிந்தா என்பதுபோல எதிர்ப்பு தெரிவித்திருப்பது நகைப்புக்குள்ளாகியிருக்கிறது.

திரு ரஜனிகாந்த் அவர்களுக்கு நாமும் ரசிகர்களாக இருக்கிறோம் தயவு செய்து அதை தக்க வைத்துக்கொள்ளுங்கள் என்பதே சுப்பஸ்ரார் ரஜனிகாந்த் அவர்களுக்கு எமது பணிவான வேண்டுகோள்.

ஈழதேசம் செய்திகளுக்காக.
கனகதரன்.

Related posts

Top