இந்தோனேசியாவிலிருந்து நாடுகடத்தப்படும் சூழலில் 22 இலங்கை தமிழ் அகதிகள்

கடந்தாண்டு இந்தோனேசிய கடலில் தத்தளித்த 44 இலங்கை தமிழ் அகதிகள் பல்வேறு அழுத்தங்களுக்கு பின்னர் அந்நாட்டில் தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட செய்தி நினைவிருக்கக்கூடும். அவர்கள் தமிழகத்திலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முயற்சித்ததாக கூறப்பட்டது. தற்பொழுது இந்தோனேசியாவில் உள்ள அவர்களின் நிலை பற்றி கிடைத்துள்ள தகவலின் படி, 44 அகதிகளில் ஐந்து அகதிகளுக்கு அகதி அந்துஸ்து வழங்கப்பட்டுள்ளதாகவும் 17 அகதிகள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகவும் மீதமுள்ள 22 அகதிகளும் நாடுகடத்தப்படக்கூடும் என அஞ்சப்படுகிறது.

இவர்களுள் ஒருவரான சிவரஞ்சனி இந்தோனேசியாவின் Lhokseumawe என்ற அகதிகள் மையத்தில் வசித்து வருகிறார். சிவரஞ்சனிக்கு அறுவைச் சிகிச்சை வழியே ஆண்குழந்தை பிறந்துள்ள தற்போதைய நிலையில், மூன்றே நாட்களில் அகதிகள் மையத்திற்கு அவர் வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்டு இருக்கின்றார். அவரும் அவரது கணவருமான பகிதரம் கந்தசாமி தங்கள் சூழ்நிலை பற்றி நியூசிலாந்து ஊடகம் ஒன்றிடம் பேசியுள்ளனர்.

அதன்படி, கடந்த வருடம் ஜூன் மாதம் இந்தோனேசிய கடலில் தத்தளித்த அவர்கள் நியூசிலாந்து செல்ல முயற்சித்தாக கூறியுள்ளனர். ஆனால் ஐநா அகதிகள் முகமை தங்களைப் பேட்டி எடுத்த பொழுது நாங்கள் ஆஸ்திரேலியா செல்ல முயற்சித்ததாக தவறாக பதியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். அத்துடன் அகதிகள் படகுகளை ஆஸ்திரேலியா திருப்பி அனுப்பிவரும் செய்தியினை நாங்கள் அறிந்திருந்ததால் நியூசிலாந்து செல்லவே முயற்சித்தோம் என்கின்றனர்.

விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்ததற்காக தாம் எட்டு ஆண்டுகள் இலங்கைச் சிறையில் இருந்ததாகவும், நகங்கள் பிடுங்கப்பட்டு சிஐடியினரால் தொடர்ந்து சித்ரவதைக்கு உள்ளனாதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

44 அகதிகளும் தலா ஒன்றரை லட்சம் ரூபாய்(இந்திய மதிப்பு) கொடுத்து வேதாரண்யத்திலிருந்து படகில் வந்ததாகவும் தெரிவித்துள்ளனர். நியூசிலாந்தில் கரை சேர்ப்பதாக சொன்ன ஆட்கடத்தல்காரர்கள், எரிப்பொருள் தீர்ந்ததும் வேறு படகில் தப்பிவிட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ள நிலையில், தன்னால் உட்கார, நிற்கக்கூட முடியவில்லை என கலங்கியுள்ளார் சிவரஞ்சனி.

கெளரவமான வாழ்க்கையை எதிர்ப்பார்த்துள்ள இந்த அகதிகள், இலங்கைக்கே மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டால் கடும் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுவோம் என அஞ்சுகின்றனர்.

படம்: Reuters

நன்றி

Top