அன்னை பூபதியின் நினைவு தினம் நாளை அனுஷ்டிக்கப்படவுள்ளது

தமிழர்களின் உரிமைக்காக போராடி, உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தமிழகத்தின் தாய் எனப் போற்றப்படும் அன்னை பூபதியின் 29ஆவது ஆண்டு நினைவு தினம் மட்டக்களப்பு நாவலடியில் அமைந்துள்ள அவரது கல்லறையில் நாளை (புதன்கிழமை) மாலை 3 மணிக்கு இடம்பெறவுள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தலைமையில் இந் நிகழ்வு நடைபெறவுள்ளது.

இதன்போது, அன்னை பூபதியின் உறவினர்கள் மற்றும் ஏனைய முக்கியஸ்தர்களால் சமாதிக்கு மாலையணிவிப்பு, மலரஞ்சலி, நினைவுச் சுடரேற்றல், அகவணக்கம் மற்றும் நினைவுரைகள் என்பன இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தழிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்ட காலத்தில் தமிழர் உரிமையை வலியுறுத்தியும் இந்திய அமைதிகாக்கும் படையினரின் மனித உரிமை மீறல்களைக் கண்டித்தும் மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய வளாகத்தில் நீராகாரம் மட்டும் அருந்தி சுமார் 4 வார காலம் உண்ணாவிரத போராட்டம் நடத்திய அன்னை பூபதி, கடந்த 1988ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19 ஆம் திகதி உயிர்நீத்தார்.

Related posts

Top