இரணைமடு சிறீதரனுக்கு:மருதங்கேணி சுமந்திரனுக்காம்?

வடமராட்சி, மருதங்கேணி கடல்நீரை நன்னீராக்கும் திட்டத்தால் வடமராட்சி கிழக்கு மீன்பிடி விசேட முறைகள் பாதிக்கப்படும் என்ற சந்தேகம் ஆராய்ச்சியின் பெறுபேறுகளில் இருந்து உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வெளியிட்ட கருத்து பொய்யானதென ஆய்வுகளை மேற்கொண்ட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

மருதங்கேணி கடல்நீரை நன்னீராக்கும் திட்டத்திற்கு ஒருபோதும் அனுமதி வழங்க முடியாது என த.தே.கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன், யாழ். குடாநாட்டு மக்களின் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்ய வேண்டுமென்றால் மாற்றுவழியை கண்டறியுங்கள் எனவும் தெரிவித்திருந்தார்.

வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் சமாசம் கேட்டுக்கொண்டதற்கிணங்க மருதங்கேணி கடல் நீரை நன்னீராக்கும் திட்டம் தொடர்பில் ஆய்வாளர்களால் விளக்கமளிக்கும் நிகழ்வு யாழ் மாவட்ட அரச அதிபர் நா. வேத நாயகன் தலைமையில் நேற்றைய தினம் யாழ்.மாவட்டச்செயலகத்தில் நடைபெற்றது.
குறித்த கலந்துரையாடலில் வடமராட்சி கிழக்கு கடற்தொழிலாளர் சமாசத்தினருடன் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், வடமாகாண சபை உறுப்பினர் சுகிர்தன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

கலந்துரையாடலின் முடிவில் ஊடகங்களு க்கு கருத்து தெரிவிக்கையினில் மருதங்கேணி பிரதேசத்தில் கடல் நீரை நன்னீராக்கும் திட்டம் மேற்கொள்வது தொடர்பில் சில வருடங்களாக முன்மொழிவு இருந்து வந்தது. அத்திட்டத்தை அமுல்படுத்தினால் அப்பகுதியில் உள்ள விசேட மீன்பிடி முறைகளில் பாதிப்பு ஏற்படும் என ஆரம்பத்தில் இருந்து எதிர்ப்புக்கள் இருந்து வந்தது.

ஆனால் விஞ்ஞான ரீதியில் விளக்கம் கொடுப்பதாக அதிகாரிகள் உத்தரவாதம் அளித்து ஆராய்ச்சி செய்து அதன் பெறுபேறுகள் அடிப்படையில் தீர்மானம் எடுப்பதற்கு தயார் என எதிர்ப்பு தெரிவித்த பகுதியினர் தெரிவித்திருந்தனர்.
நீர் பிரச்சினையை தீர்ப்பதற்கு ஆராய்ச்சி செய்யும் போது ஏனைய பகுதியினருக்கும் பாதிப்பு இல்லாமல் இருந்தால்தான் அத்திட்டத்தை செய்ய அனுமதி கொடுப்பதாக முடிவெடுத்திருந்தோம்.

ஆனால் வடமராட்சி கிழக்கு மீன்பிடி விசேட முறைகள் பாதிக்கப்படும் என்ற சந்தேகம் மேற்குறித்த ஆராய்ச்சியின் பெறுபேறுகளில் இருந்து உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மீன்பிடி தொழிலை இத்திட்டம் பாதிக்கும் என்ற தீர்மானத்துக்கு வரக்கூடியதாக உள்ளது. இச் செயற்பாடு நிச்சயமாக கடற்தொழிலாளரின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் என திடமாக எமக்கு தெரியவருகிறது.

நாம் கேட்டுக்கொண்டதன் படி நன்னீரை பெறுவதற்கு வேறு ஒரு இடத்தில் சம்பந்தப்பட்டவர்கள் ஆராய்ச்சி செய்யவில்லை. எனவே மருதங்கேணி பிரதேசத்தில் கடல் நீரை நன்னீராக்கும் திட்டத்தை முற்று முழுதாக கைவிடுமாறு அரச அதிபருக்கு நாம் அறிவித்துள்ளோமென தெரிவித்திருந்தார்.
எனினும் சுமந்திரனின் இக்கருத்தை முற்றாக நிராகரித்துள்ள கலாநிதி கே.அருளானந்தம் அவ்வாறு அறிக்கையினில் மீன்பிடி முறைமைகளிற்கு பாதிப்பு ஏற்படுமென தாம் சொல்லியிருக்கவில்லையெனவும் தெரிவித்திருந்தார்.

ஏற்கனவே இரணைமடு குளத்தில் இருந்து நன்னீர் பெறும் திட்டத்தில் மற்றொரு கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அரசியல் செய்ய மாற்றீடாக மருதங்கேணி கடலில் இருந்து நன்னீரை பெறும் திட்டத்தை மேற்கொள்வதற்கு நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினர் முன்மொழிந்திருந்தனர். அதன் அடிப்படையில் குறித்த திட்டத்தினை மேற்கொள்வதற்கு பௌதிகவியல் சார் காரணிகளை ஆராய்வதற்கு அமெரிக்காவில் இருந்து நிபுணர் குழுவினரை வரவழைத்து ஒரு மாத காலமாக ஆராய்ச்சியும் மேற்கொள்ளப்பட்டது.

அதன் அடிப்படையில் குறித்த பகுதியில் மேற்குறித்த திட்டத்தினை ஆரம்பிக்க முடியும் என்றும் யாழ்.குடாநாட்டுக்கு இலகுவான முறையிலும் விரைவாகவும் குடிநீரை வழங்க முடியும் என்ற அறிக்கை முடிவின் பிரகாரம் மத்திய அரசால் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையினில் மருதங்கேணியை வைத்து அரசியலில் குதித்துள்ள எம்.ஏ.சுமந்திரன் அங்கு கடல் நீரை நன்னீராக்குவதற்கு தடைபோட தொடங்கியுள்ளார்.

Related posts

Top