கேப்பாபுலவை தொடர்ந்து வட்டுவாகலும் போராட்ட களமாகின்றது!

இறுதி யுத்த சாட்சியமாகவுள்ள முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் வட்டுவாகல்பகுதிகளில் அமைந்துள்ள கடற்படையினரின் கோத்தாபடைத்தளம் முன்பதாக மக்கள் போராட்டம் இன்று புதன்கிழமை காலை முதல் ஆரம்பமாகியுள்ளது. 2009 மே முதல் இலங்கை கடற்படைவசமுள்ள தமது காணிகளை விடுவிக்கக்கோரியே இன்றையதினம் காணிகளது உரிமையாளர்களான பூர்வீக குடிகள் கவனயீர்ப்புப்போராட்டத்தினை முன்னெடுத்துள்ளன.
முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் பொதுமக்களுக்குச் சொந்தமான 397 ஏக்கர்காணி மற்றும் அரச காணிகள் உட்பட 617 ஏக்கர் வரையான காணியை கடந்த 2009ம் ஆண்டு முதல் கடற்படையினர் ஆக்கிரமித்து வைத்துள்ளதுடன் குறித்த கட்டுப்பாட்டு பகுதிக்குள் பொதுமக்களுக்கு சொந்தமான கால்நடைகளும் அகப்பட்ட நிலையிலுள்ளன.

குறித்த காணிகளை விடுவிக்குமாறும் கால்நடைகளை மீட்டுத்தருமாறும் அதன் உரிமையாளர்கள் அரசிற்கு கால அவகாசங்களை வழங்கியிருந்தனர்.எனினும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை விடுவிப்பதற்கு பதிலாக புதிய முட்கம்பி வேலிகள்,காவலரண்கள் என கடற்படை ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பகுதிகளை பாதுகாப்பதில் முழு கவனம் செலுத்திவந்திருந்தனர்.

அத்துடன் இருதடவைகளாக குறித்த காணிகளை கையகப்படுத்த ஏதுவாக நில அளவைப்பணிகளிலும் குதித்திருந்தனர்.எனினும் மக்கள் போராட்டங்களையடுத்து அது தடைப்பட்டிருந்தது.இந்நிலையினிலேயே காணிகளை விடுக்க இந்த கவனயீர்ப்பு போராட்டத்தினை ஆரம்பித்துள்ளனர்.

Top