ஊழல் ராஜ்ஜியத்தை ஒருங்கிணைந்து நடத்த மீண்டும் சதித் திட்டம் : மு.க.ஸ்டாலின்

அதிமுக அமைச்சர்களின் ஊழல்களை வெளிச்சத்திற்கு கொண்டுவரும் பணியில் ஈடுபட்டுள்ள வருமான வரித்துறை, அமலாக்கத்துறை ஆகிய அமைப்புகள் சுதந்திரமாக செயல்பட உறுதுணையாக இருக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஹைவேஸ் புகழ் எடப்பாடி பழனிச்சாமியும், மணல் மாஃபியா சேகர் ரெட்டி வழிகாட்டும் ஓ.பன்னீர்செல்வமும் மீண்டும் ஊழல் ராஜ்யத்தை ஒருங்கிணைந்து நடத்த சதி திட்டம் போடுவதாக குற்றஞ்சாட்டியுள்ளார். கரூர் அன்புநாதன் வீட்டில் நடந்த சோதனையின்போது சிக்கிய ஆவணங்களில் அதிமுக அமைச்சர்களுக்கு தொடர்பு இருப்பதாகவும், அதை தேர்தல் ஆணையமே சுட்டிகாட்டியபோதும், சோதனை வளராமல் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார். முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், சைதை துரைசாமி வீடுகளில் நடந்த வருமான வரித்துறை சோதனை என்ன ஆனது என்பது தெரியவில்லை என்றும் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழக இயற்கை வளங்களை சுரண்டும் பொறுப்பை சேகர் ரெட்டிக்கு தாரை வார்த்துக் கொடுத்தது ஓ.பன்னீர்செல்வம்தான் என்பது ஊருக்கே தெரியும் என்று கூறியுள்ள மு.க.ஸ்டாலின், சேகர் ரெட்டியை தாண்டி அதிமுக அமைச்சர்கள் பக்கம் விசாரணை செல்வது தடுக்கப்பட்டுள்ளதா என்று கேள்வி எழுந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்பட்டதாக கூறப்படும் 89 கோடி ரூபாய்க்கு அமைச்சர் விஜயபாஸ்கர் மட்டுமே சொந்தக்காரர? அல்லது அதிமுகவின் ஊழல் நிதியின் ஒரு பகுதியா என்ற கேள்விகளுக்கு பதில் கிடைக்கவில்லை என்றும் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தினகரன், சசிகலா குடும்பத்தை ஒதுக்கி வைப்போம் என்று அதிமுகவினர் கூறியதை சுட்டிக்காட்டியுள்ள மு.க.ஸ்டாலின், ஒரு ஊழலை வெளியேற்றிவிட்டால், மற்றவர்களின் ஊழல்கள் மறைக்கப்படும் என்றும் அவர்கள் காப்பாற்றப்படுவார்கள் என்றும் உத்தரவாதம் கொடுத்தது யார் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதிமுக அமைச்சர்களின் ஊழல்களை கூண்டோடு வெளிச்சத்திற்கு கொண்டு வரும் புனிதப் பணியில் வருமான வரித்துறை, அமலாக்கத்துறை ஆகிய அமைப்புகள் ஈடுபட்டுள்ளதாகவும், அந்த அமைப்புகள் சுதந்திரமாக செயல்பட மத்திய அரசு உறுதுணையாக நிற்க வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Related posts

Top