காப்பாளர்களுக்கு பொலிஸ் அச்சுறுத்தல்!

வவுனியாவில் புகையிரத கடவை காப்பாளர்கள் தங்களுக்கு பொலிஸாரால் உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து வவுனியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்திற்கு முன்பாக நேற்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டதுடன் வவுனியா மனித உரிமை ஆணைக்குழுவிலும் முறைப்பாடு செய்துள்ளனர்.இப்போராட்டமானது வடக்கு, கிழக்கு புகையிரதக் கடவை காப்பாளர் ஒன்றியத்தின் தலைவர் எஸ்.ஜே.றொகான் ராஸ்குமார் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பொலிஸார் தங்களை அச்சுறுத்தியதாக தெரிவித்து முறைப்பாடு ஒன்றையும் பதிவு செய்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட வடக்கு, கிழக்கு புகையிரதக் கடவை காப்பாளர் ஒன்றியத்தின் தலைவர் எஸ்.ஜே.றொகான் ராஸ்குமார் கருத்து தெரிவிக்கையில்,

இலங்கை முழுவதும் 3 ஆயிரத்து 500 ஊழியர்களும் வடமாகாணத்தில் 450 ஊழியர்களும் புகையிரதக் கடவை காப்பாளர்களாக கடந்த நான்கு வருடங்களாக பொலிஸாரின் கட்டுப்பாட்டின் கீழ் நாளொன்றுக்கு 250 ரூபா கூலிக்கு கடமையாற்றிவரும் நிலையில், புகையிரதக் கடவை காப்பாளர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கட ந்த 10 ஆம் திகதி முதல் ஒன்பது நாட்களாக பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளோம்.

வவுனியா மாவட்டத்தில் எங்களுக்கு பொறுப்பாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரே உள்ளார். அதனால் நாங்கள் பொலிஸ் மா அதிபர் ஊடாக ஜனாதிபதியை சந்திப்பதற்கு ஏற்பாடு செய்து தரும்படி கோரியிருந் தோம். ஆனால் பொலிஸார் வீடு வீடாக வந்து எங்களுக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கின்றனர்.

எங்களுக்கும் மக்களுக்கும் பாதுகாப்பாக இருக்க வேண்டிய பொலிஸார் எம்மை காணாமல் போய் விடுவீர்கள் என மிரட்டுகின்றனர். எமக்கோ அல்லது எமது குடும்பத்திற்கோ ஏதாவது அநியாயம் நடந்தால் அதற்கு பொலிஸாரே காரணம். நாம் வேலையை நிரந்தரமாக்க கோருவது தவறா? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Top