மன்னாரில் கண்டன பேரணி

மன்னார் மாவட்டத்தில் கடற்படையினரின் வசமுள்ள முள்ளிக்குளம் மக்களின் குடியிருப்பு நிலங்கள் உட்பட மன்னார் மாவட்டத்தில் படையினரினால் அபகரிக்கப்பட்டுள்ள மக்களின் நிலங்களை விட்டு படையினரை வெளியேறக் கோரியும் மன்னார் ஆயர் இல்லத்தின் ஏற்பாட்டில் மன்னாரில் கண்டன பேரணி நடைபெற்றுள்ளது.

இந் நிகழ்வு நேற்று புதன்கிழமை காலை 10 மணியளவில் மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் இருந்து பேரணி ஆரம்பமானது.மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் ஆயர் ஜோசப் கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை தலைமையில் இந்த பேரணி ஆரம்பமானது.

இதன்போது மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை, அருட்தந்தையர்கள், மன்னார் மறைமாவட்டத்தில் உள்ள அனைத்து மதகுருமார்களையும் சேர்ந்த மக்கள் என பல நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, சி.சிறீதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன் வடக்கு. மாகாண சபை உறுப்பினர்களான வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன், சட்டத்தரணி எஸ். பிரிமூஸ் சிறாய்வா, மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய பிரதிநிதிகள், ரொலோ அமைப்பின் மாவட்ட அமைப்பாளர் பற்றிக் வினோ உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த கண்டன பேரணியானது மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் ஆரம்ப மாகி மன்னார் பிரதான வீதியூடாக மன்னார் நகரப் பகுதியை சென்றடைந்து பின்னர் மன் னார் மாவட்டச் செயலக நுழைவாயிலை சென்றடைந்தது.

இதன் போது கண்டன பேரணியில் கலந்து கொண்ட மக்கள் பல்வேறு கோசங்களைத் தாங்கிய பதாதைகளை ஏந்தியவாறும் கோசங்களை எழுப்பியவாறும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
குறிப்பாக கடற்படையினரின் கட்டுப்பாட்டியில் உள்ள முள்ளிக்குளம் கிராம மக்களின் நிலங்களை விட்டு உடனடியாக கடற்படையினர் வெளியேற்றப்பட்டு இடம் பெயர்ந்து இன்னல்களை அனுபவித்து வருகின்ற முள்ளிக்குளம் மக்கள் தமது சொந்த நிலங்களில் குடி யேற்றம் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன் வைக்கப்பட்டது.

பின்னர் முள்ளிக்குளம் மக்கள் சார்பாக சிறீலங்கா ஜனாதிபதிக்கு எழுதப்பட்ட மகஜரை மன்னார் ஆயர் இல்லத்தினூடாக ஜனாதிபதிக்கு வழங்கும் வகையில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரியவிடம் மகஜர் கையளிக்கப்பட்டது.

Related posts

Top