யுத்தம் முடிந்து 7 வருடங்களாகியும் தமிழர் வாழ்வில் முன்னேற்றம் இல்லை..செல்வராசா கஜேந்திரன் குற்றச்சாட்டு

தமிழர் தாயகப் பிரதேசங்களில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக பல்வேறு போராட்டங்கள் இடம்பெற்றுவரும் நிலையில், அரசாங்கத்தின் இரண்டு பெரிய கட்சிகளும் மிகப்பெரிய மேதினக் கூட்டங்களை நடத்தியுள்ளதாக தமிழ்த் தேசியக மக்கள் முன்னணி சுட்டிக்காட்டியுள்ளது.

ஸ்ரீலங்கா அரசாங்கம், தமிழ் மக்களின் ஒருசில காணிகளை வெறும் கண்துடைப்பு நாடகத்திற்காக விடுவித்து, சர்வதேச சமூகத்தை ஏமாற்றி தங்களுடைய காரியங்களை நகர்த்திச் செல்வதாகவும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தொழிலாளர் தின நிகழ்வு யாழ்ப்பாணம் – சாவகச்சேரியிலுள்ள வார்வனநாதர் சிவன் கோவில் முன்றலில் இடம்பெற்றுள்ளது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அக்கட்சியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

யுத்தம் முடிவடைந்து 07 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், தமிழர்களுடைய வாழ்வில் எந்தவிதமான முன்னேற்றங்களும் ஏற்படாத நிலையில், தமிழ் பிரதிநிதிகளின் ஆலோசனையோடு, ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை ஸ்ரீலங்கா அரசாங்கம் பெற்றுள்ளதாகவும் செல்வராசா கஜேந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழர் தாயகத்தில் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பல்லாயிரக்கணக்கான உறவினர்கள் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

கேப்பாபுலவு உட்பட பல்வேறு பகுதிகளின் தங்களின் சொந்த இடங்களை மீட்பதற்காக மக்கள் தொடர் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆனால், அரசாங்கமோ மக்களின் போராட்டங்கள் மற்றும் கோரிக்கைகளுக்கு மதிப்பளிக்காமல், மேதினக் கூட்டங்களை நடாத்தி வருகின்றனர்.

வடக்கு கிழக்கில் தொழிலாளர்கள் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில், கடன்கட்ட முடியாத சூழ்நிலையில், தற்கொலை செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இதேவேளை, தென்னிலங்கை மீனவர்களின் ஆக்கிரமிப்புக்களால் வட மாகாண மீனர்வகள் தங்களுடைய தொழிலை சுதந்திரமாகச் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழர் தாயக்கத்தின் இரு தூண்களான கடல்சார் பொருளாதாரம், விவசாயம் ஆகியன முழுமையாக அழிக்கப்பட்டு வருகின்றனது.

கடற்தொழிலை விட்டு தமிழ் மீனவர்கள் நாளாந்தம் வெளியேறிக் கொண்டிருக்கின்ற நிலையில், விவசாய பொருளாதாரம் எந்தவிதமான ஊக்குவிப்பும் இன்றி அழிந்து கொண்டிருப்பதாகவும் செல்வராசா கஜேந்தரன் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

Top