பிரான்ஸ் நாட்டின் வேலையின்மையை எதிர்கொள்ள ஜெர்மன் உதவி

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரான்ஸ் அதிபர் மக்ரானுக்கு வாழ்த்து தெரிவித்த ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கெல் அந்நாட்டின் வேலையின்மையை எதிர்கொள்ள உதவி செய்வதாக உறுதியளித்துள்ளார்.

பிரான்ஸ் அதிபர் தேர்தலில் 65 சதவிகித வாக்குகளுடன் வெற்றி பெற்றிருக்கும் இம்மானுவேல் மக்ரானுக்கு பல்வேறு உலக தலைவர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கெல் மக்ரானுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இத்துடன் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிலைத்ததன்மையை மேம்படுத்த இணைந்து பணியாற்ற உள்ளதாகவும் மெர்கல் தெரிவித்தார். “மக்ரான் இலட்சக்கணக்கான பிரான்ஸ் மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ளார். அதே போல ஜெர்மனியிலும், ஐரோப்பா முழுவதிலும் ஆதரவினைப் பெற்றுள்ளார்.

மக்ரான் துணிச்சலாக ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஆதரவான பிரச்சாரத்தை மேற்கொண்டார், வெளிப்படையான உலகத்திற்காக குரல் கொடுக்கிறார், இத்தோடு சமத்துவ சந்தை பொருளாதாரத்தை வளர்ப்பதாக உறுதியளித்துள்ளார்.

பிரான்ஸ்-ஜெர்மன் ஒத்துழைப்பு என்பது ஜெர்மனியின் அயலுறவு கொள்கையின் முக்கியப் பகுதி. அதே சமயத்தில் மக்ரானின் வெற்றியினால் ஜெர்மன் தனது பொருளாதாரப் போக்கினை மாற்றிக்கொள்ள வேண்டிய தேவையில்லை என மெர்கெல் தெரிவித்துள்ளார்

Top