இனப்படுகொலையை மூடி மறைக்கவே வடக்கில் வெசாக் கொண்டாட்டங்கள்! கஜேந்திரன்.

இலங்கை இராணுவத்தினால் தமிழின படுகொலை நிகழ்த்தப்பட்டு எட்டு வருடங்களாகியும் நீதி கிடைக்காத நிலையில், அதனை மூடி மறைப்பதற்கும் சிங்கள மயமாக்கலுக்காககவுமே வடக்கில் இராணுவத்தின் பெரும் எடுப்பில் வெசாக் கொண்டாட்டங்கள் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டுள்ளது என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

ஈழத்தில் மிக மோசமான இனப் படுகொலை நடைபெற்ற மாதமாக மேமாதம் காணப்படுகின்றது. இந்த மாதத்தை தமிழ் மக்கள் அனைவரும் துக்க தினமாக அனுஷ்டித்து வருகின்றனர். ஒவ்வொரு மேமாதம் 12 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை முள்ளிவாய்க்கால் படுகொலை வாரமாக அனுஸ்டிக்கபட்டு வருகின்றது. இந்த வாரத்தின் இறுதி நாளான பதினெட்டாம் திகதியை தமிழ் மக்கள் அனைவரும் கரி நாளாக அனுஸ்டிப்பதற்கு முன்வரல் வேண்டும்.

இந்த நிலையில் தமிழ் மக்களுடைய உணர்வுகளை சிதைப்பதற்கும் சிங்கள தேசத்தின் ஆதிக்கத்தை தமிழர் தாயகமான வடக்கு கிழக்கில் காட்டுவதற்குமே வெசாக் தினம் இராணுவத்தினரால் பெரும் எடுப்பில் கொண்டாடடப்பட்டு வருகின்றது. பௌத்தர்களே இல்லாத இடங்களில் பௌத்த கொடிகளை கட்டியும், புத்த கோவில்களை கட்டியும் பெரும் எடுப்பில் வெசாக் தினம் கொண்டாடப்படுவது எதற்காக? தமிழ் தாயகத்தில் சத்தமின்றி சிங்கள, பௌத்த மயமாக்கல் இராணுவ தரப்பால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தமிழர் தேசம் கண்ணீரில் மூழ்கி இருக்கும் போது சிங்கள தேசம் வெசாக் பண்டிகையை தமிழர் தாயகத்தில் பெரும் எடுப்பில் கொண்டாடுவது தமிழ் மக்களுடைய மனங்களை காயப்படுத்தி ஆத்திரத்தை ஏற்படுத்தி வன்முறைக்குள் தள்ளும் நடவடிக்கையாக கருதுகின்றோம். ஆகவே கறுப்பு கோடிகளுக்கு பதிலாக சிங்கள தேசத்தின் கொடிகள் பறக்கவிடப்படுவதை கைவிட வேண்டும். இது தவிர துக்கநாளான பதினெட்டம் திகதி அன்று ஜனாதிபதி முல்லைத்தீவு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அவர் தனது வருகையை உடனடியாக நிறுத்த வேண்டும். தமிழ் மக்களுடைய வறுமையையும், இழப்புக்களையும் பயன்படுத்தி இனப்படுகொலையை மூடி மறைக்கும் செயற்பாடாக தான் ஜனாதிபதியின் வருகையை பார்க்கின்றோம். அவரது வருகையை கடுமையாக கண்டிக்கின்றோம். மேலும் முள்ளிவாய்க்கால் நினைவு தினம் என்ற பெயரில் விளையாட்டு நிகழ்வுகள், களியாட்ட நிகழ்வுகளை நடாத்துவதை தவிர்க்க வேண்டும். மே பதினெட்டு தமிழர்களின் கரிநாள் என்பதை அனைவரும் மனதில் நிறுத்தி முள்ளிவாய்க்காலில் ஒன்று திரள்வோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

Top