மலையக மக்களுக்கு மேலும் 10,000 வீடுகள்! – பிரதமர் மோடி உறுதி

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில் மலையக மக்களுக்கு மேலும் 10,000 வீடுகள் நிர்மாணித்துக் கொடுக்கப்படும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.

ஹட்டன் – நோர்வூட் மைதானத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் சிறப்புரை நிகழ்த்துகையில், ஆயிரக்கணக்கான மலையக மக்களுக்கு முன்னிலையில் இந்திய பிரதமர் இவ் வாக்குறுதியை வழங்கியுள்ளார். இதன்போது பிரதமர் தொடர்ந்து உரையாற்றுகையில்-

”மலையக மக்களை சந்திப்பதற்கு சந்தர்ப்பம் கிடைத்தமை எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கின்றது. முதல் தடவையாக இலங்கையில் மலையகம் சார்ந்த ஒரு அழகிய பிரதேசத்திற்கு வருவதற்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. ஏராளமான மக்கள் ஒன்றுதிரண்டு ஆரவாரம் செய்து என்னை வரவேற்றமை, எனக்கு கிடைத்த மிகப் பெரிய கௌரவமாகும்.

உலகில் தேயிலை ஏற்றுமதி செய்யும் மூன்றாவது மிகப்பெரிய நாடாக இலங்கை விளங்குகிறது. உலகின் தேயிலை தேவையில் 17 வீதத்தை இலங்கை பூர்த்தி செய்கின்றது. இதன்மூலம் 150 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான அந்நிய செலாவணியை இலங்கை சம்பாதிக்கின்றது. இதற்காக, மலையக மக்களின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பிற்கு பாராட்டை தெரிவிக்கின்றேன்.

மேலும், மலையக மக்களின் முன்னோர்கள் பழங்காலத்தில் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு இடம்பெயர்ந்து இன்னல்கள், போராட்டங்களை கடந்து மன தைரியத்தோடு வாழ்ந்ததன் காரணமாகவே மலையக மக்கள் இங்குள்ளனர். ஆகவே இம் மக்களது முன்னோர்களின் மனோநிலையை பாராட்ட வேண்டும்.

மலையக மக்களின் ஒளிமயமான எதிர்காலத்திற்கு இந்தியா எப்போதும் துணைநிற்கும். நல்லாட்சி அரசு பல சிறந்த திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. அவற்றிற்கு உறுதுணையாகவும் பக்கபலமாகவும் இந்தியா எப்போதும் இருக்கும்.

இந்த மலையக மக்கள் பாரத பூமியின் மக்கள். இம் மக்களை இந்தியா ஒருபோதும் கைவிடாது. இம் மக்கள் பொருளாதாரம் மற்றும் சகல வழிகளிலும் முன்னேறுவதற்கு இந்தியா துணைநிற்கும்.

இந்திய அரசாங்கத்தின் முக்கியமான தலைவர்களுள் ஒருவரான எம்.ஜி.ஆர். இலங்கையில் பிறந்தவர். அத்தோடு, இந்தியாவின் மருமகனான முத்தையா முரளிதரன் போன்ற தலைசிறந்த விளையாட்டு வீரர்களும் இலங்கையில் பிறந்தவர்கள். அதனால் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் நெருங்கிய தொடர்புள்ளது.

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான இணைப்புப் பாலமாக மலையக மக்கள் உள்ளனர். இம் மக்கள் தொடர்ச்சியாக முன்னேற வேண்டும். அந்தவகையில் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள 4,000 வீட்டுத்திட்டத்திற்கு மேலதிகமாக இம் மக்களுக்கு நில உறுதியுடன் கூடிய மேலும் 10,000 வீடுகளை வழங்குவதாக இன்று உறுதியளிக்கின்றேன். அது மட்டுமன்றி இம் மக்களின் அடையாளத்தை மேம்படுத்த தேவையான சகல உதவிகளையும் நாம் தொடர்ந்து மேற்கொள்வோம்” என மேலும் குறிப்பிட்டார்.

Related posts

Top