இலங்கைக்கு சென்று திரும்பினார் நரேந்திர மோடி?..

தொடர்ச்சியான உலக சுற்றுப்பயணங்களை முடித்துக்கொண்டு அடுத்து எந்த நாட்டுக்கு சுற்றுலா செய்யலாம் என்ற கவலையில் காத்திருந்த இந்திய பிரதமர் மோடி அவர்களுக்கு ஸ்ரீலங்காவின் பௌத்த சிங்கள அரசு புத்தனின் பெயரால் ஒரு சுற்றுப்பயணத்திற்கான சந்தற்பத்தை உண்டுபண்ணி உதவியிருக்கிறது.

பத்தோடு பதினொன்றாக, ஆயிரத்துடன் ஆயிரத்து ஒன்றாக மட்டுமே இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை பயணத்தின் பரிமாணம் பலனளிக்கும் என்றால் அது எனது கற்பனையோ மிகையோ அல்ல.

கூப்பிட்டவுடன் குழந்தைபோல் ஓடி வந்தார், குனிந்து வணங்கினார், வாழ்த்தினார், வெறுப்பேத்தாமல் திரும்பிப் போனார் எனறு இலங்கை அரசு நெஞ்சு நிமிர்ந்து உட்கார்ந்திருக்கிறது.

சக்திவாய்ந்த நம்ம இந்திய பிரதமர் இலங்கைக்கு போகிறார் தமிழக மீனவர்களின் பிரச்சினை பற்றி பேசி ஸ்ரீலங்கா அரசை நிச்சியம் கண்டிப்பார், ஈழதமிழர்களின் வாழ்க்கையிலும் மாறுதல் கிடைக்க வழி செய்து திரும்புவார் அதன்பின்தான் உறுதிமிக்க இந்தியபிரதமரின் அருமை குறிப்பாக தமிழகத்துக்கும் அகில உலகத்துக்கும் தெரியப்போகிறது என்று நெஞ்சு உயர்த்தி நின்ற பாஜகவின் தொண்டர்கள்கூட மோடியின் உண்மையான மார்பு அகலம் என்னவென்று தெரிந்தபின்னர் மாற்றி யோசித்து நியாயப்படுத்தலுக்கு தயாராகவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றனர்.

வெசாக் பண்டிகைக்கான ஸ்ரீலங்காவின் விஷேட அழைப்பின்பேரில் மோடியின் பயணம் அமைந்திருந்தாலும், போரினால் பாதிக்கப்பட்டு நீதியை எதிர்பார்த்து காத்திருக்கும் தமிழ் மக்களுக்கு மோடியின் இலங்கை பயணம் அரசியல் பொருளாதார ரீதியாக எப்பேற்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை அரசியல் ஆய்வாளர்களும் மனித உரிமைவாதிகளும் பொருளாதார வல்லுனர்களும் வெவ்வேறு பிரமாண்டமான வர்ணனைகளை கூறினாலும், நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் தமிழர் தரப்பு பிரச்சினை என்பது மோடியின் பயணத்தின் பின் இன்னும் ஒரு சாண் புதை நிலைக்கு செல்லுமே தவிர மேம்படுவதற்கான குறியீடு எதுவும் நிகழப்போவதில்லை என்பது இப்போதைக்கு வெளிப்பட்டிருக்கிறது.

யதார்த்த நிலையில் விபரிப்பதாயின் சீனாவை இலங்கையிலிருந்து தள்ளிவைப்பது போன்ற மாயை ஒன்றை உள்ளூரில் தோற்றுவிப்பதற்கான ஒரு கலர் படம் மட்டுமே மோடியின் இலங்கை பயணம்.

உள்நாட்டில் பாஜக வின் எதிர்கால அரசியல் மற்றும் ஆட்சி அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்வதற்கான கவனயீர்ப்பு வியூகத்திற்கான ஒரு மேடை என்பதுடன், கிழக்கு ஆசிய பிராந்தியத்தின் புதுப்பிக்கப்படாத வெளியுறவு கொள்கையின் தொடர்ச்சியான (update Strategy) நடவடிக்கை என்பது தவிர வேறு தெளிவு காணக்கிடைக்கவில்லை.

வருங்காலங்களில் அரசியல் மேடைகளிலும் இந்திய தொலைக்காட்சி விவாதங்களிலும் பேசுபொருளாக கையாள இப்போதைக்கு ஒரு கருப்பொருளாக மோடியின் பயணம் கிடைக்கப்பெற்றிருக்கிறது அவ்வளவே.

அடிப்படையில் மதரீதியாக கலாச்சார ரீதியாக இன்னும் பொருளாதார ரீதியாக மிக நெருக்கமான நிலையில் சிங்களவர்களும் ஸ்ரீலங்கா அரசும் சீனாவும் பிரிக்கமுடியாத நட்பு நாடுகளாக இருந்து வருகிறது.

சீனாவின் செறிவை ஸ்ரீலங்காவுக்குள் குறைத்து காட்டுவது போன்ற தோற்றத்தை உள்ளூரில் கட்டமைப்பதற்கான ஒரு தந்திரோபாயம் மோடி அவர்களின் பயணத்தில் முக்கியத்துவம் பெறுகிறது, மிரட்டல் மூலம் ஸ்ரீலங்காவை சீனாவிடமிருந்து பிரிக்க முயன்றால் பேராபத்தாக முடியும் என்பதால் நலத்திட்டங்களுக்கான உதவி வழங்கல் மூலம் பெரியண்ணன் தொனியில் தன்முனைப்பாகவேனும் ஸ்ரீலங்காவை ஓரளவேனும் கட்டுக்குள் வைத்திருக்கலாம் என்பதே ஸ்ரீலங்காவுக்கான வெளியுறவுக்கொள்கையாக (காங்கிரஸ்- பாஜக அரசுகள்) இந்தியா தொடர்ந்து பேணிவருகிறது.

பட்டு கம்பளம் விரித்து சீனாவை மெத்தையில் படுக்க வைத்தால் நாங்கள் புளக்கடையில் பத்து பாத்திரங்களையாவது கழுவி சுத்தம் செய்துவிட்டு போகிறோம் என்ற கணக்கில் மட்டுமே இலங்கை விடயத்தில் இந்தியாவின் நிலை கவலைக்கிடமாக இருந்து வருகிறது.

ஈராக்மீது அமெரிக்கா மீண்டும் போர் தொடுக்குமாக இருந்தால் 24 மணித்தியாலங்களில் ஈராக் இருந்த இடம் தெரியாமல் மண்மேடாக மாறும் என்றுதான் சர்வதேச ஊடகங்களும், அரசியல் போர் பற்றிய நிபுணத்துவ ஆய்வாளர்களும் ஈராக்மீது அமெரிக்கா இறுதியாக 2003 ல் போர் தொடுப்பதற்கு முதல்நாள்வரை, எதிர்வு கூறிக்கொண்டிருந்தனர்,

2003, மார்ச் 17, ஈராக்கை விட்டு 48 மணி நேரத்திற்குள் சதாம் வெளியேற வேண்டும் என அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் கெடு விதித்ததுடன் மார்ச் 20, ஈராக் மீது அமெரிக்க படைகளுடன் சர்வ சக்தி படைத்த வல்லரசு நாடுகளான பிரிட்டன்,பிரான்ஸ் உட்பட 40 வரையிலான நாடுகள் தாக்குதலைத் தொடுத்து இறுதியாக
டிசம்பர் 13: திக்ரித்தில் சதாம் உசேன் பிடிபடும்வரை ஒன்பது மாதங்கள் போர் நடந்தது, ஊடகங்களினதும் நிபுணர்களினதும் கணிப்பு அதிகார வர்க்கங்களை திருப்திப்படுத்தவல்லது என்பதுதவிர உண்மையாகாது என்பதை காலம் நிரூபித்தே வந்திருக்கிறது.

முடிவில் அமெரிக்க அதிபர் கூறியதுபோல ஈராக்கில் எந்தவிதமான ஆபத்தான ஆயுதங்களும் இல்லை என்ற விடையுடன் சாதாரண ட்றைபிள் துப்பாக்கியுடன் எதிர்கொண்ட ஈராக் படையினரை எதிர்கொண்டு சதாம் உஷைனை பிடிப்பதற்கு அமெரிக்கா தலைமையிலானாலான உலகப்பெரிய வல்லரசுகளின் கூட்டு படையணிக்கு கிட்டத்தட்ட ஒரு ஆண்டுகள் காலம் எடுத்தது.

ஒன்றை பரிசோதித்து பார்ப்பதற்கு முன் மனதில் பட்ட அனுமான சங்கு சக்கரம் சல்லரிகளின் சலசலப்பு காரியமாற்றுவதில்லை என்பது உலக வரலாற்றில் பலமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

அவற்றை நன்கு உணர்ந்தோ என்னவோ மோடி மட்டுமல்ல இந்தியாவை ஆளக்கூடிய காங்கிரஸ், பாஜக அரசுகள் எவ்வளவுபேரை சுட்டுக்கொன்றாலும் இலங்கைமீது கண்டனம்கூட தெரிவிக்க விரும்புவதில்லை, தற்கொலை படையாக வந்தாலும்சரி தலையை கொய்து கொண்டுவந்து வைத்துவிட்டுப்போனாலும் சரி பாகிஸ்தான் பக்கம் திரும்பார்க்காமல் பாராளுமன்றத்தில் சூழுரைத்து திருப்திப்படுவதோடு முடித்துக்கொள்வதுண்டு, அர்ணாசல் பிரதேசத்தில் எவ்வளவு நிலத்தை சீனா ஆக்கிரமித்தாலும் நோகாததுபோல சுப்பிரமணியன் சுவாமியிடம் பழியை கொடுத்துவிட்டு சீன பிரதமரை அழைத்து விருந்து கொடுத்து கவலையை தீர்த்துக்கொண்டு வாக்குக்கான அரசியலில் முன்னுக்கு வருவது எப்படி என்ற தேடலில் இந்திய கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன.

குறிப்பிட்ட யதார்த்த நெறிமுறைகளை பின்பற்றி இலங்கை பயணத்தை முடித்துக்கொண்டு மிகவும் பௌவ்யமாக தாயகம் திரும்பிவிட்டார் பாரத பிரதமர்.

மே 11 ம் திகதி இலங்கை புறப்பட்டு சென்ற மோடி இலங்கையில் நடைபெறும் வெசாக் பண்டிகையில் கலந்துகொண்டு பின்னர் நுவரெலிய மாவட்டத்திலுள்ள டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையைத் திறந்து வைத்து நோர்வூட் மைதானத்தில் மலையக மக்கள் மத்தியில் எழுதி வைத்திருந்த கவர்ச்சியான உரையை நிகழ்தியபின் வழமைபோல மலையக மக்களுக்கு சில நலத்திட்டங்களை சம்பிரதாயமாக அறிவித்துவிட்டு இந்தியாவுக்கு திரும்பியிருக்கிறார்.

வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு சென்று அங்கு போரினால் பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிட்டு ஸ்ரீலங்காவின் கோபத்திற்கு ஆளாக அவர் விரும்பவில்லை.

மோடியின் பாதுகாப்பு வாகன அணி கட்டுநாயக்க விமானநிலையம் புறப்பட்டபோது தொடர்ந்து இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை ஏற்றிக்கொண்டு இன்னொரு வாகன அணி விமானநிலையம் சென்றது, இந்திய பிரதமர் இந்தியாவை நோக்கி பயணப்பட்டார், சீனாவின் அதிவேக விமானம் ஒன்று இலங்கை பிரதமர் விக்கிரமசிங்கவையும் இந்திய பிரதமர் மோடியின் விஜயத்தின் தகவல்களையும் சுமந்துகொண்டு சீனாவுக்கு பயணமாகியிருக்கிறது. அந்த அளவுக்குத்தான் இலங்கையின் வெளியுறவுக்கொள்கை பின்பற்றப்படுகிறது.

சுதந்திரத்தின் பின்னர் இந்தியாவின் பிரதமரான ஜவஹர்லால் நேரு 1957 ம் ஆண்டு மே மாதம் 17 ம் திகதி தனது மகள் இந்திராவுடன் இலங்கைக்கு பயணம் ஒன்றை மேற்கொண் டிருந்தார். அப்பொழுதும் புத்த ஜயந்தியின் 2500 ஆண்டைக் கொண் டாடும் முகமாக வெசாக் பண்டிகைக்கு நேருவுக்கு இலங்கை அரசு அழைப்பு விடுத்திருந்தது.

1957 ம் ஆண்டு நேரு இலங்கை சென்றிருந்தபோது இந்தியாமீது ஒருவிதமான பிருமாண்டமான பார்வையும் சிங்களவர், ஈழத் தமிழர்கள் ஆகிய இரு தரப்பினரும் பாகுபாடு அற்ற வரவேற்பையும் அன்றைய இந்தியாவுக்கு (பிரதமருக்கு) வழங்கப்பட்டது, இன்றைய நிலையில் இந்தியாமீது அப்படியான பார்வையில் சிங்களவரும் இல்லை, தமிழ்த்தரப்பும் இல்லை.

உள்ளே வேறொன்று இருந்தாலும் வெளியே இன்னொரு விதமாக முகமன் செய்து சம்பிரதாய சடங்காக காலத்தை கடத்தி முடித்துவிடும் மனநிலையில்தான் இலங்கையில் வாழும் தமிழர் சிங்களவர் மனநிலை இருந்துகொண்டிருக்கிறது.

தமிழகத்தின் அரசியல் விமர்சனங்களை எதிர்கொண்டு அரசியல் ரீதியாக நியாயப்படுத்திக்கொள்ளும் வகையில் திட்டமிட்டு மலையகத்திற்கு சென்று இந்திய வம்சாவழி தமிழர்களை பார்த்து சில உதவிகளையும் மோடி அறிவித்திருக்கிறார்.

இலங்கை அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று இலங்கை வருகை தந்துள்ள மோடி மலையக விஜயம் ஓரளவு வரவேற்பையும் பெற்றிருக்கிறது. நேரு காலத்தின் பின்னர் 60 வருடங்களின் பின் இந்திய பிரதமர் ஒருவர் மலையகத்துக்கு சென்றது அம் மக்களுக்கு மகிழ்ச்சியே பிரதமர் நரேந்திரமோடியின் மலையக விஜயம் வரலாற்று முக்கியத்துவம் பெறுவதாக ஊடகங்கள் பிரமாண்டப்படுத்துகின்றன.

தமிழகத்தின் ஈழ ஆதரவு அரசியற் கட்சிகள் மற்றும் தமிழகத்து மக்களுக்கு மோடி வடக்கு கிழக்கு பகுதிகளுக்கு செல்லாமல் திரும்பியது வெறுப்பையும் கோபத்தையும் உண்டு பண்ணியிருக்கிறது.

இலங்கைக்கு பயணம் செய்த மோடி ஸ்ரீலங்கா ஆட்சியாளர்கள் மத்தியில் பேசும்போது மறைமுகமாக பேசிய பேச்சும் விமர்சனத்துக்குள்ளாகியிருக்கிறது. அவர் பேசிய சில வரிகளின் சரியான தமிழாக்கம் கீழே தரப்படுகிறது.

உலக அமைதியை நிலை நிறுத்துவதே தற்போதுள்ள சவால்.

அதில் நான் மானிலங்களுக்கிடையிலான விடையங்களை குறிப்பிடவில்லை?

சமூகநீதியும் உலக அமைதியுமே இந் நல்நாளின் கருப்பொருட்களாகும்??

இப்படியான சிந்தனைகளை பின்பற்றாதவர்களே சோகமான முடிவுகளை அடைவார்கள்!!

அமைதியை விரும்பாத விளைவின் முடிவே பயங்கரவாதம்!!!

இப்படியான சிந்தனைகளை பின்பற்றாதவர்களே சோகமான முடிவுகளை அடைவார்கள்.

அவை மோடி பேசிய வார்த்தைகளில் சில.

நான் மானிலங்களுக்கிடையிலான விடயங்களை குறிப்பிடவில்லை. என்பதன் அர்த்தம் விடுதலைப்புலிகளுடன் இலங்கை அரசு செய்த யுத்தம் சரியானதே என்பதாக அவர் குறிப்பிட்டதாக கொள்ளமுடியும்.

அமைதியான சிந்தனைகளை பின்பற்றாதவர்களே சோகமான முடிவுகளை அடைவார்கள் என்பது தேசியத்தலைவர் பிரபாகரனை குறித்ததாக கொள்ள முடிகிறது,

பிரபாகரன் அவர்களை மட்டுமல்லாமல் இனப்படுகொலையில் இறந்தவர்கள் அனைவரும் இலங்கை அரசின் அடக்குமுறைக்குள் அடங்கி கிடக்காததன் விளைவே சோகமான முடிவை அடைந்தனர் என்பதாகவே அவரது கருத்தை எடுத்துக்கொள்ள முடியும்.

“அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம் கடுத்தது காட்டும் முகம்” என்ற பழமொழிக்கேற்ப மோடியின் ஆழ்மனதின் உள்ளக்கிடக்கை வெளிவந்திருக்கிறது.

மோடி தமிழர்களுக்கான தீர்வை தேடித்தருவார், இந்தியா பாதுகாவலனாக நிற்கும் என்று நம்பிவர்களின் வாயில் மண்ணை போடுவதை தவிர வேறொன்றையும் இந்தியா செய்யப்போவதில்லை, தேசியத் தலைவர் அதிமேதகு வே பிரபாகரன் அவர்களைப்போன்று மாற்றி யோசிக்காதவரை தொடர்கதைதான்.

ஈழதேசம் செய்திகளுக்காக,
கனகதரன்.

Related posts

Top