தமிழ் நாட்டுத் தமிழர்களின் கண்களை மூடி நடத்தப்பட்ட தமிழினப் படுகொலை! – இரா.நிஷாந்தன்!

இறுதியுத்தம் நடந்த அந்த தினங்களில் தமிழக மக்களின் உண்மை மன நிலை என்னவென்று உங்களுக்கு தெரியுமா?

ஈழத்தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டதை ஆதாரங்களுடன் பல காட்சி உடகங்கள் வெளியிட்டாலும், எத்தனையோ போராட்டங்களை நடத்தியும், போர்க்குற்றவாளியாக அறிவிக்க தயங்கும் உலக அரசியலையும், நம் புலிகளின் வரலாற்றையும் அறியாத தமிழர்கள் இந்த உலகில் இருக்க மாட்டார்கள்.

இந்திய கடலோர தமிழர்களின் இன்னொரு பக்கம் என்னவென்று உங்களுக்கு நிட்சயம் தெரிந்திருக்க வாப்பில்லை. மேலும் இது ஈழ யுத்தத்தில் இந்திய நாட்டின் நேரடி சாட்சியமும் கூட. அந்த தினங்களில் தமிழகத்தின் கடலோர கிராமங்கள் பட்ட மன வேதனையும், ஆபத்தான வேளையில் தன் இனத்திற்கு கை கொடுக்க முடியாத நிலையையும், துணிகர செயல்களையும், சில சாட்சியங்களையும் உங்களிடம் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

திக்.. திக்.. நிமிடங்கள்.

இறுதியுத்தம் நடந்துகொண்டிருந்த அந்த வேளையில் இந்தியாவில் நடந்த அரசியலை உலக நாடுகள் உமிழ்ந்து துப்பிய அந்த கேவலமான நிகழ்வுகள் அனைவரும் அறிந்த ஒன்றே. அந்த இறுதி தினங்களில் அதாவது மே 2 வது வாரத்தில் எந்த ஒரு காட்சி ஊடகமோ அல்லது அரசு சார்ந்த தகவல் தொடர்பு அமைப்புகளோ ஈழத்தமிழர் படுகொலை பற்றிய செய்தி துணுக்குகளை கூட தமிழக மக்களுக்கு தெரிவிக்கவில்லை.

யுத்தம் நடைபெறுகிறது.. இதுவே இறுதியுத்தமாக இருக்கலாம் என்றெல்லாம் சில விமர்சகர்கள் வானொலிகளில் விமர்சித்து கொண்டிருந்தனர். தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட பகுதிக்கும் தமிழக கடற்கரையோர பகுதிகளுக்கும் இடையேயான தொலைவு வெறும் 30 கிலோமீட்டகளுக்கும் குறைவு. சாதாரணமாக காலை பொழுதில் கோடியக்கரையில் ஒருவன் துப்பாக்கியால் மானை சுட்டால் 40 கிலோமீட்டர் தூரத்திலுள்ள முத்துப்பேட்டை வனபகுதியில்கூட அந்த சப்தத்தை துல்லியமாக கேட்க முடியும்.

ஏன் இன்றும் கூட இலங்கையின் கைபேசி மற்றும் வானொலி அலைவரிசைகளை எங்களால் துல்லியமாக பெற முடிகிறது. அப்படி இருக்க இலங்கையின் கடலோர பகுதிகளில் வாய் பிளந்த பிரங்கிகளின் சத்தத்தையும், தாழ்வாக பறந்து குண்டு மழை தூவிய விமானங்களின் இரைச்சல்களையும், குண்டுகள் விழுந்து வெடித்த சத்தமும், அதனால் ஏற்பட்ட அதிர்வுகளையும் கேட்க முடியாத என்ன…? தினம் தினம் கேட்டுணர்ந்தோம் நாம்.

அதோடு மட்டுமல்லாமல் காலை 5 லிருந்து 6,7( தெற்கில் இருந்து வடக்கு நோக்கி கடற்காற்று வீசும் நேரம் ) மணிவரை அழுகிய முட்டை மற்றும் மனித உடல்களை எரிப்பது, மாத்திரை கழிவுகளை எரிப்பது போன்ற முச்சு திணறும் அளவுக்கு அடர்த்தியான காற்றை சுவாசித்தோம் நாம்.

கோடியக்கரையில் இருந்து முத்துபேட்டை வரை கடற்கரை ஓரத்தில் உடைந்த தோனியின் பாகங்களும், ராக்கெட் போன்ற எதோ ஒன்றை பாதுகாக்க பயன்படுத்திய இரு பிளவுகளை கொண்ட பல பிளாஸ்டிக் போன்ற கழிவுகளும், குவியல் குவியலாக ஆடைகளும் கரை ஒதுங்கின.

இரவு நேரங்களில் காது கிழியும் அளவுக்கு கடற்கரை ஓரத்தில் தாழ்வாக பறந்த விமானங்கள், இடைவிடாது கேட்ட பட்டாசு போன்ற சப்தங்கள், விமானத்தில் இருந்து இந்திய நாட்டின் எல்லை பகுதிகளில் இடியென இறங்கிய குண்டுகள் இவையனைத்தையும் வைத்து முடிவு செய்தோம் நம் இனம் காக்க புலிப்படைகள் ஒன்று திரண்டு யுத்தம் நடத்திக்கொண்டு இருக்கிறார்கள், இந்த வாரமே ஈழம் மலர்ந்துவிடும் என்ற நம்பிக்கையுடன் யுத்தத்தில் நம் உறவுகளுக்கு ஒன்றும் ஆகிவிடக்கூடாது என்றெல்லாம் இறைவனை வேண்டிக்கொண்டு இருந்தோம். அதே வேளையில் திடிரென தோணிகளில் அகதிகளாய் வந்திறங்கிய என் இனத்தை கண்டே அங்கே நடப்பதை உணர்தோம்.

அடக்கு முறைகள் நடுவேயும் சட்டத்தை துட்சமென நினைத்த தமிழர்கள்!

இந்திய நாட்டு எல்லைக்குள்ளாகவே வந்த தோணிகளை சிங்கள நாய்கள் வான்வழியே குண்டு பொழிந்து அதில் உயிர்தப்பி வந்த தமிழர்களை விரட்டி விரட்டிப் படுகொலை செய்திருக்கிறார்கள். சத்தம் இல்லாமல் அலையாத்தி காட்டுப் பகுதியில் புள்ளிகளாய் தெரிந்த வெளிச்சங்கள் இந்திய கடற்பகுதிக்குள் வந்திருந்த ஈழத்தமிழ் மக்களை கொன்ற சம்பவத்தின் ஆதாரங்கள்( நடு கடல் பகுதியில் நடந்தமையால் இவைகளை பலராலும் சாட்சியத்தில் கொண்டுவர முடியவில்லை).

இவை அனைத்தையும் இந்தியா வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்ததை பின்பே உணர்ந்தோம். இருப்பினும் அரசுக்கு தெரிவிப்பதற்கு முன்பாகவே சில முன் உதவிகளை செய்துவிட்டே முறைப்படி பின்னர் அரசுக்கு தெரியப்படுத்தியதுடன் அவர்கள் பாதுகாப்பாக உள்ளதை உறுதி செய்தபின்னர் வீடு திரும்பிய தமிழர்கள் ஏராளம். இதனால் சிறை சென்ற தமிழர்களும் உள்ளனர். ராமன் கட்டிய பாலம் இருந்திருந்தால் அன்று வேல் கம்பெய்தினும் போருக்கு புறப்பட்டிருப்பார்கள் இங்குள்ள தமிழர்கள்.

விக்கிபீடியாவுக்கும் விக்கல் வரும் வேளை வரும்!

எங்கள் தேசியத் தலைவர் பற்றி இணையத்தில் தேடினால் முதலில் நான்தான் உலகில் தலை சிறந்த தகவல் பரிமாற்ற ஊடகமென திழைத்து தலைவன் இறந்துவிட்டான் என மார்தட்டுகிறது விக்கிபீடியா. இதில் மயிரிழையின் நுனியளவு கூட உண்மையில்லை.

புலிகளை அழித்துவிட்டோம் புகழிடம் பிடித்துவிட்டோம் என்று தூக்கு கயிற்றை தலையில் மாட்டிக்கொண்டு, மறு முனையை வேங்கை மரத்தின் கிளையில் கட்டிவிட்டு நீர் பாய்ச்சி கொண்டிருக்கிறது இலங்கை அரசு. பயிருக்கே உயிரில்லை வேலிக்கு உரம் எதற்கு? என்று தமிழரின் உதிரம் நனைந்த கம்பளத்தில் நாம் மறந்துவிட்டோம் என்று நினைத்து ராஜ நடை போடுகிறது இந்திய அரசு.

ரொட்டி துண்டுக்கு வால் ஆட்டுகிறது உலக அரசுகள். இத்தனையும் தெரிந்த ஊடகங்கள் உண்மைக்கு மாறாக செய்திகளை தினம் தந்துகொண்டுதான் இருக்கின்றன. அதனை நம்பும் நீங்கள், ஏன் தலைவன் உயிருடன் இருக்கிறார் என்றுரைப்போரை மட்டும் கேளிக்கையாக பார்க்கிறீர்கள் என்பதுதான் இன்னும் விளங்கவில்லை!

வெளியே தெரியாத வேங்கைகள் வெளிப்படும் காலம் விரைவில் வரும்!

எப்படி ஊடக அரசியலை வைத்து தமிழக மக்களுக்கு உண்மை தெரியாமல் அன்று என் இனத்தை கொன்று குவித்தீர்களோ.. அதே ஊடகத்தில் வரும் பொய்யான செய்திகளை கண்டு நீங்கள் பெரு மூச்சு விடும் அதே வேளையில் தமிழக அரசியலுக்கு அப்பாற்பட்டு உணர்வுகளால் ஒன்று திரண்ட பெரும் புலிக்கூட்டம் ஒன்று உருவாகி வருகிறது. அந்த புலிக்கூட்டம் ஒருநாள் அடையாளத்துடன் வெளிவரும் காலம் தொலைவில் இல்லை.

காவியத்தலைவன் காலடி பட்ட மண்ணில் முத்தமிட்டு சொல்கிறேன், மே 18 எங்கள் உறுதியேற்பு தினம். மாவீரர்களின் ஆசியுடன் ஈழம் மீட்க உறுதியேற்போம். நம் இனம்காக்க உயிர் தியாகம் செய்த மாவீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்துவதுடன் படுகொலை செய்யப்பட்ட ஈழத்தமிழ் மக்களுக்காகவும் மௌனித்து நின்று வணக்கம் செலுத்துவோம்.

என்றும் தலைவன் வழியில் தமிழகத்தில் இருந்து ஈழதேசம் இணையத்திற்காக இரா.நிஷாந்தன்.
(17/05/2017)

Top