நாம் ஒன்றும் ஜெயலலிதா அல்ல: நடராஜன்

அரசு நிர்வாகத்தில் ஜெயலலிதாவுக்கு பயந்து வேலை செய்தவர்கள் எல்லாம் தற்போது ரிலாக்ஸ் ஆக இருப்பதாகப்படுகிறது என சசிகலா கணவர் நடராஜன் கருத்துத் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு கிட்டத்தட்ட ஐந்து ஆறு மாதங்களாக ஏற்ற இறக்கங்கள் இருந்து வந்தன. இப்போது சரியான நிலையிலேயே அரசு சென்றுகொண்டிருக்கிறது. அதில் ஒன்றும் தொய்வு இல்லை. ஜெயலலிதா வழியிலேயே அரசாங்கத்தை தொடர்ந்து வழி நடத்திச் செல்கின்றனர். யாரும் தன்னிச்சையாக முடிவு எடுப்பதில்லை. ஒன்றுகூடி முடிவு எடுக்கிறார்கள். அதனால் அது சரியாக இருக்கிறது.

மற்றவர்கள் பற்றி கவலைப்படாமல் அரசாங்கம் தன்னுடைய கடமையை செய்து கொண்டிருக்கிறது. இன்னும் சற்று சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும். உதாரணத்திற்கு, மாவட்ட ஆட்சியர் எல்லாம் கிட்டத்தட்ட 6 அல்லது 7 வருடங்களாக ஒரே இடத்தில் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களை எல்லாம் மாற்ற வேண்டும். நாம் ஒன்றும் ஜெயலலிதா அல்ல. அவரின் கண் அசைவுக்கு பயந்து வேலை செய்தவர்கள் எல்லாரும் தற்போது சற்று ரிலாக்ஸாக இருப்பதாகப்படுகிறது. அதனை எல்லாம் வேகப்படுத்த ஒரு இடத்தில் ஆறு ஏழு வருடங்களாக இருக்கும் மாவட்ட ஆட்சியர்கள் உடனடியாக மாற்றப்பட வேண்டும். அதன்மூலம் புதிய நிர்வாகத்தை கொண்டு வர வேண்டும்.

மத்திய அரசு மானியம் எல்லாவற்றையும் நிறுத்தி விட்டது. அப்படியிருக்க மாநில அரசு நிதி ஆதாரத்திற்குச் சிரமப்பட்டு கொண்டிருக்கிறது. தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்றுவதன் மூலம், மாநிலத்தின் பொருளாதாரம் மேலும் குறைந்திருக்கிறது. மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் ஆட்சி நிர்வாகம் சிறப்பாக இருக்கிறது. சட்டம் ஒழுங்கு பிரச்னை இல்லை. தமிழக அரசு அடுத்த 4 ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்யும். தமிழக மக்களும் அதனைத்தான் எதிர்பார்க்கிறார்கள். மத்திய அரசும் அதற்கு ஆதரவு கரம் நீட்ட முன்வந்திருப்பதற்கான சில சமிக்ஞைகள் தெரிவதாக கூறினார்.

Top