த.தே.ம.முன்னணியின் ஏற்பாட்டில் இ​னவழிப்புநாள் 8ஆம் ஆண்டு நினைவேந்தல் வாகரை

தமிழ் மக்கள் மீதான சிறீலங்கா அரசின் திட்டமிட்ட இனவழிப்பின் நினைவேந்தல் நிகழ்வு இன்று காலை 10.30 மணிக்கு மட்டக்களப்பு மாவட்டம் வாகரை பிரதேசத்தில் இறுதியுத்தம் நடைபெற்ற மாணிக்கபுரம் வாவிக் கரையில் நடைபெற்றது. மேற்படி நிகழ்வுக்கு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் அவர்கள் தலைமை தாங்கினார்.

போர்க்காலத்தில் சிறீலங்கா அரசினால் திட்டமிட்டுப் படுகொலை செய்யப்பட்ட அப்பாவிப் பொது மக்களுக்கு வணக்கம் செலுத்தும் முகமாக தியாகச் சுடர்கள் ஏற்றப்பட்டு வணக்கம் செலுத்தப்பட்டது.

பிரதான சுடரினை கட்சியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் திரு .இராமநாதன் ஸ்ரீஞானேஸ்வரன் அவர்கள் ஏற்றிவைத்தார். தொடர்ந்து கட்சியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் பொது மக்களும் கட்சியின் அங்கத்தவர்களும் சுடரேற்றி வணக்கம் செலுத்தினர்.
தொடர்ந்து கட்சியின் மாவட்ட அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தலைமை உரை ஆற்றியதை தொடர்ந்து, திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் ஸ்ரீஞானேஸ்வரன், கட்சியின் செயற்குழு உறுப்பினர் தங்கேஸ்வரன் சிசிதரன் மற்றும் கட்சியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் உரையாற்றினர்.

உரைகள் நிறைவடைந்த பின்னர் யுத்த காலத்தில் மக்கள் மீது ஸ்ரீலங்கா அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டிருந்த கொடிய பொருளாதாரத் தடை காரணமாக இறுதி யுத்த காலத்தில் அதனை மக்கள் உயிர்வாழ்வதற்காக தண்ணீரில் அரிசிக் குருணல்களை போட்டு கொதிக்க வைத்து குழந்தைகளுக்கும் உணவாகக் கொடுத்து தாமும் அதனை உண்டு உயிர் பிழைத்தனர். அந்த கொடிய வாழ்க்கையை மீளவும் நினைவுபடுத்தும் வகையில் தண்ணீரில் அவிக்கப்பட்ட அரிசிக் கஞ்சி வழங்கப்பட்டது. உளவுத் துறையினரது அதி உச்ச கண்காணிப்புக்கள், புகைப்படம் எடுப்புக்கள், மரணப்பார்வைகள் மத்தியில் உணர்வுபூர்வமாக நினைவேந்தல் நிகழ்வு நடந்தேறியது.

Related posts

Top