சுவிஸ் பேர்ண் பாராளுமன்றம் முன்றலில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற மே 18 – தமிழின அழிப்பு நாள்!!!

ஈழத்தமிழர் வரலாற்றில் மறக்கமுடியாத வலியாக மாறியதும்;, சிறிலங்கா அரசினால் மிகவும் திட்டமிடப்பட்டும், சர்வதேச நாடுகளின் அனுசரணையுடனும் தமிழர்கள் மீது நடாத்தப்பட்ட இருபத்தியோராம் நூற்றாண்டின் அதியுச்ச இனப்பேரழிப்பு நடந்ததுமான தமிழீழத்தில், இறுதிவரை மண்டியிடாது போராடிய மாவீரர்களுக்கும், மக்களுக்குமான எட்டாம் ஆண்டு நினைவுகள் சுமந்த கவனயீர்ப்பு நிகழ்வான, மே 18 – தமிழின அழிப்பு நாள் பேர்ண் பாராளுமன்றம் முன்றலில் 18.05.2017 வியாழக்கிழமை அன்று நடைபெற்றது. இதில் பல நூற்றுக்கணக்கில் சுவிஸ் வாழ் தமிழ்மக்கள் மிகவும் கனத்த இதயங்களுடன் வலி சுமந்த நினைவுகளை நெஞ்சினில் சுமந்து மிகவும் உணர்வுபூர்வமாக கலந்து கொண்டிருந்தனர்.

சுவிஸ் ஈழத்தமிழரவை, தமிழ் இளையோர், தமிழ்ப் பெண்கள் அமைப்புக்களின் கூட்டிணைவில் நடைபெற்ற கவனயீர்ப்பு நிகழ்வானது பொதுச்சுடரேற்றலுடன், சுவிஸ் மற்றும் தமிழீழத் தேசியக்கொடிகள் ஏற்றி வைக்கப்பட்டதனைத் தொடர்ந்து ஈகைச்சுடரேற்றல்இ அகவணக்கத்துடன் சுடர், மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.

நிகழ்வில் முள்ளிவாய்க்கால் இறுதிநாட்களில் எமது உறவுகள் பல சிரமங்களுக்கு மத்தியிலும் தமது பசியாற ஒருநேர உணவுக்கு வழியின்றி உப்பு, பால் இல்லாத கஞ்சி உண்டு பசியாறியதை நினைவுகூரும் அடையாளமாக கலந்து கொண்டவர்களுக்கு கஞ்சி வழங்கப்பட்டதுடன்; சுவிசின் கட்சிகளிலிருந்து பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்புரைகளாற்றியதுடன் சமகால அரசியல் தொடர்பான எழுச்சியுரையுடன், இளையோர்களால் வேற்றின மக்களும் புரிந்து கொள்ளக் கூடிய வகையில் ஜேர்மன், பிரெஞ்சு, இத்தாலி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில்; பேச்சுக்கள் இடம்பெற்றிருந்ததுடன் இன அழிப்பு சார்ந்த துண்டுப்பிரசுரங்களும் வேற்றினத்தவர்களுக்கு இளையோர்களால் வழங்கப்பட்டதுடன் இனஅழிப்பு சார்ந்து விளங்கப்படுத்தப்பட்டது.

நிகழ்வில் தமிழின அழிப்பு சார்ந்த, தமிழின அழிப்பிற்கு நீதி கேட்கும் வகையிலான பதாதைகளைத் தாங்கிய சுவிஸ் வாழ் தமிழ்மக்கள்; தமது உணர்வுகளை ஆற்றாமையோடு வெளிப்படுத்தியதோடு நாம் அனைவரும் ஒற்றுமையாக தாயகம் நோக்கி தொடர்ந்து பயணிப்போம் என்ற உறுதிமொழியுடன் நம்புங்கள் தமிழீழம் பாடலைத் தொடர்ந்து சுவிஸ் நாட்டின் கொடியுடன் தமிழீழத் தேசியக்கொடியும் இறக்கப்பட்டு, தமிழர்களின் தாரக மந்திரத்துடன் ஷவலிகளிலிருந்து வலிமை பெறுவோம்! உறுதி கொள்வோம்! உரிமை மீட்போம்!| என்ற உணர்வுடன் நிகழ்வுகள் எழுச்சியுடன் நிறைவுபெற்றது.
சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு

Related posts

Top