வரும் ஆனால் வராது தந்திரன் ரஜனியின் ரசிகர் மாநாடு.

சினிமா நடிகர் ரஜனிகாந்த் எட்டு பத்துவருட நீண்ட இடைவெளிக்கு பின்னர் தனது ரசிகர்களை சந்தித்திருக்கிறார். இந்த நிகழ்வு என்றுமில்லாதவாறு ஐந்து தினங்கள் தொடர்ச்சியாக ரஜனிகாந்த் அவர்களின் திருமண மண்டபமான ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

குறிப்பிட்ட இந்த நாட்கள் ஈழத்தமிழர்கள் பல இலட்சம்பேர் முள்ளிவாய்க்கால் என்ற இடத்தில் வைத்து இனப்படுகொலை செய்யப்பட்ட நாட்கள் என்று பூமி பந்தில் உள்ள உலக நாடுகளில் வாழும் தமிழர்கள் மட்டுமல்லாது வேற்று மொழி பேசும் மக்களும் துக்க நாட்களாக அனுசரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

ரஜனிகாந்த் அவர்கள் தனது திரைப்படம் ஒன்று வெளிவரும் காலங்களில் அரசியலுக்கு இதோ வருகிறேன் அதோ வருகிறேன் என்று சுமார் கால் நூற்றாண்டுகளுக்கு மேலாக சொல்லிவருவதை அனைவரும் அறிவோம்,

இப்போதும் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் பெரும் பொருட் செலவில் அவர் நடித்து வெளிவரவிருக்கும் திரைப்படமான 2.0 வெளிவரவிருக்கிறது, படத்தின் தயாரிப்பு செலவு 400, கோடிகளுக்கும் அதிகம் என்று சொல்லப்படுகிறது அதன் முன்னோட்டமாகத்தான் அவர் ரசிகர்களை சந்தித்து அரசியலுக்கு வருவதுபோன்ற குளப்பமான சில கருத்துக்களை சொல்லி ரசிகர்களையும் குளப்பி, சேர்த்தே மக்களையும் குளப்பிவிட்டிருக்கிறாரோ என்ற கருத்து ஒருபுறம் இருந்தாலும்.

தமிழகத்தின் தற்போது உண்டாகியிருக்கும் அரசியற் சூழ்நிலைகூட ரஜனிகாந்த் போன்ற பிரபலங்கள் அரசியலில் பிரவேசிக்க வாய்ப்பான கால வெளியாகவும் காணப்படுகிறது.

ஜெயலலிதாவின் மறைவு, கருணாநிதியின் வெற்றிடம், விஜயகாந்தின் உடல் நலக்குறைவு, அதிமுக கட்சிக்குள் உண்டாகியிருக்கும் உடைவு , சசிகலா தினகரன் ஆகியோரின் சிறைவாசம் போன்ற காரணிகளால் தொடர்ச்சியாக தமிழகத்தில் உண்டாகிவரும் அரசியல் தொய்வு நிலையை மனதில்க்கொண்டு பெரு நோக்குடன் அரசியலில் இறங்கி மக்கள் சேவை செய்ய ரஜனிகாந்த் நினைக்கிறாரா, அல்லது அந்த வெற்றிடத்தை கைப்பற்ற நினைக்கும் பாஜக வின் திட்டத்துக்கு பலியாகியிருக்கிறாரா என்ற வினா நாடளாவிய கேள்வியாக அரசியலரங்கில் வியாபித்து நிற்கிறது.

1975 ம் ஆண்டு டைரக்டர் கே பாலச்சந்தர் அவர்களின் அபூர்வராகங்கள் படத்தில் நடித்தது முதல், மிகப்பெரிய உச்ச நட்சத்திரமாக வளர்ந்து அவரது 161 வது திரைப்படமான 2.0 படம்வரை, அவரது 67 வயதிலும் யாராலும் அசைக்க முடியாத உச்ச நடிகராக ரஜனிகாந்த் இருந்து வருகிறார்.

ரஜனிகாந்த் அவர்களுக்கு தமிழகம் கடந்து உலக அளவில் ரசிக அறிமுகம் இருக்கிறது என்பதும் எவரும் மறுக்கமுடியாது. தமிழ்நாட்டை பொறுத்தளவில் ஓருகாலத்தில் அவருக்கு அதிகமான ரசிகர்கள் கூட்டம் இருந்தது உண்மையே, இன்றைக்கும் அவரை ஓரளவுக்கு விரும்புவபர்களும், அதிகளவுக்கு விமர்சித்து புறக்கணிப்பவர்களும் இருந்தாலும் அதிர்ஷ்ட்ட தேவதையின் பார்வையிலிருந்து அவர் விடுபடவில்லை என்பது நிச்சியமான உண்மை.

பத்திரிகை மற்றும் காட்சி ஊடகங்கள் ரஜனிகாந்த் பற்றிய செய்திகளை முக்கியத்துவப்படுத்தி வெளியிடும்போது பெருவாரியான மக்கள் மத்தியில் முகச்சுளிப்பு இருந்தாலும் அவர் பற்றிய செய்தியை வெளியிடுவதற்கு ஊடகங்கள் மத்தியில் பெரும் போட்டி நிலவுகிறது. இப்பேற்பட்ட ஒரு நிலையை நினைத்தமட்டில் ஒருவரால் தக்கவைத்து கொள்ளக்கூடியதல்ல.

ரஜனிகாந்த் அவர்கள் குறித்த 42 ஆண்டுகால சினிமா வரலாற்றில் மக்கள் மத்தியில் பேசும்போதெல்லம் பண்பட்ட அரசியல்வாதிபோல மக்களையும் ரசிகர்களையும் முகமன் செய்து “என்னை வாழவைத்த தெய்வங்கள்” என்று போற்றி புகழ மறந்ததில்லை. அதே நேரத்தில் சூழ்நிலை கட்டாயத்தின் பேரில் மக்களுக்கு சில நன்கொடைகளை அவர் செய்திருந்ந்தாலும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு பெரு உதவிக்கொடைகளை அவர் தமிழக மக்களுக்கு செய்தத்தாக பதிவு எதுவும் இல்லை.

1999ம் ஆண்டு அக்டோபர் 29ம் தேதியன்று, தன்னுடைய ராகவேந்திரா திருமண மண்டபத்தை மக்களுக்காக எழுதி வைக்கிறேன் என்று சொன்னவர் தான் இந்த ரஜனிகாந்த் இது நாள் வரை அந்த மண்டபத்தில் இலவசமாக ஒரு திருமணத்திற்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

அவரை வாழவைத்த தெய்வங்களான தமிழக மக்கள் அரசியல் ரீதியாக உரிமைகள் மறுக்கப்பட்டு நெருக்குதல்களுக்கு உள்ளாகும் நேரத்தில் அதிகார வர்க்கத்தை ஆட்சியாளர்களை நோக்கி கண்டனம் தெரிவிப்பதையோ குறைந்தபட்ஷம் குரல்கொடுப்பதை ரஜனிகாந்த் அவர்கள் தவிர்த்தே வந்திருக்கிறார், அல்லது அந்தக்காலங்களில் அவர் ஊரில் இருப்பதை மிக தந்தரமாக தவிர்த்திருக்கிறார்.

தானுண்டு தன் தொழில் உண்டு என்பதில் அவர் கவனமாக காய் நகர்த்தி காலத்தை கடத்தியிருக்கிறார். தனது தொழில் போட்டியாளர்களான கமலஹாசன், அஜித், விஜய், அர்ஜூன் போன்றவர்களை மேடைகளில் வைத்து வானளாவ புகழ்ந்து அடுத்த சுப்பஸ்ரார் நீங்கள்தான் என்று ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையும் நடிகர்களையும் குப்புற வீழ்த்தி அத்தனை ரசிகர்களும் தன்னையும் நோக்கி திருப்பக்கூடிய தந்தரத்தை மந்திரமாக பாவிக்கக்கூடிய வல்லமை உள்ளவராக திரு ரஜினிகாந்த் திகழ்ந்தார் என்றால் மிகைப்படுத்தல் கிடையாது.

முன்னாள் முதலமைச்சர் திரு மு கருணாநிதி அவர்களும் இதேபோன்ற தந்திரத்தை கையாண்டு தனது கடைசிக்காலம்வரை அரசியல் செய்து வந்தவர் என்பது மிகச்சரியான ஒற்றுமையாக காணலாம்.

1995 காலகட்டங்களில் புகழின் உச்சியை நோக்கி சென்றபோது தன்னுடைய சொந்த காரணங்களுக்காக ஜெயலலிதாவை எதிர்த்த அவர் அதனால் மிகுந்த சங்கடங்களை சந்தித்து மீண்டும் தானாக சென்று ஜெயலலிதாவை சந்தித்து சமாதானம் செய்துகொண்டார், அதன் பின்னர் தனக்கு பிடித்தமான கருணாநிதியை போய் பார்க்க நேர்ந்தால் மறுநாள் ஜெயலலிதாவை சந்தித்து சமன் செய்துகொள்ளும் தந்திரோபாயத்தை பின்பற்றி ஒருவிதமான நிலைப்பாடற்ற நிலையில் சுப்பர்ஸ்ரார் பட்டத்தையும் தனது தொழிலையும் காத்து வந்திருக்கிறார்.

தொடர்ந்து இன்றைக்கும் ரஜனிகாந்த் அவர்கள் தனது ரசிகர்களை கூட்டி நிலைப்பாடு இல்லாத ஒரு நிலைப்பாட்டை விவாதப்பொருளாக்கி பெரும் குளப்பமான விவாதம் ஒன்றுக்கு வித்திட்டிருக்கிறார் இந்த நிகழ்வின்போது எதிர்வினை ஆற்றக்கூடிய ஊடக சந்திப்பை அவர் நடத்தியிருக்கவில்லை.

தன்னை நேரடியாக கேள்விக்குள்ளாகும் பத்திரிகையளர் சந்திப்புக்களை எதிர்கொள்ள அவர் விரும்பவில்லை, ஆனால் எப்படி ஒரு பண்பட்ட அரசியல்வாதி தனது செயல்த்திட்டங்களை ஊடகங்களில் இடம்பெற செய்வதற்காக மாநாடு மற்றும் விழாக்களை நிறுவி செய்திகளை சொல்லுவார்களோ அதேபாணியில் மிக சாமர்த்தியமாக ரசிகர்கள் சந்திப்பு என்ற போர்வையில் சில செய்திகளை நாட்டு மக்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் ரஜனிகாந்த சொல்லியிருக்கிறார்.

ரஜனிகாந்த் அவர்கள் தொழில் மற்றும் பொருளாதர அரசியலில் மெச்சத்தக்க சாணக்கியராக திகழ்ந்து வருகிறார் என்பதற்கு ரசிகர்கள் சந்திப்பு மாநாடு மிகச்சிறந்த சான்றாகும்.

ரஜினிகாந் அரசியலுக்கு வரப்போவதாக அறுதியிட்டு வெளிப்படையாக எந்த இடத்திலும் சொல்லவில்லை, அதேபோல அவர் தான் அரசியலுக்கு வரப்போவதில்லை என்பதையும் வெளிப்படுத்தவுமில்லை, ரசிகர்களுடன் படம்பிடித்துக்கொண்டபோது அவர் கூறிய கிரந்தமான கருத்துக்களை திருக்குறளை மொழிபெயர்ப்பதுபோல மொழிபெயர்த்துப்பார்த்தால் ஏதோ ஒன்று மங்கலாக தெரிகிறது.

ரஜனிகாந்த் அவர்கள் தன்னை பச்சை தமிழன் என்று விளித்து அதற்கான வியாக்கியானங்கள் கூறியதாக இருக்கட்டும் நான் அரசியலுக்கு வரமாட்டேன் என்று நினைத்தால் நீங்க ஏமாந்துபோவீங்க என்று சுற்றி வளைத்து மூக்கை தொட்டதாக இருக்கட்டும் அவர் ஏதோ ஒன்றில் தெளிவாக இருக்கிறார் அது அரசியலாகவும் இருக்கலாம் 2.0 சினிமா வியாபாரமாகவும் இருக்கலாம்.

“வரும் ஆனால் வாராது” ( அரசியல்) என்ற சிரிப்பு நடிகர் என்னத்தே கன்னையாவின் அந்த வசனம் ரஜனிகாந்தின் பேச்சிலும் வெளிப்பட்டு நிற்கிறது. ஆனால் ரஜனிகாந்த் அவர்கள் ரசிகர்கள் முன்றலில் பேசிய புரியாத கிரந்தத்திற்கு பல்லாயிரம் பொருள் பொருத்தி காட்சி ஊடகங்கள் காலையும் மாலையும் விவாத அரங்குகளை மிகுந்த கவலையுடன் நடத்திக்கொண்டிருக்கின்றன.

ரஜனிகாந்த் அவர்கள் கைக்காசைப்போட்டு கட்சி தொடங்குவார் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை, அவரது உடல்நிலையும் அதற்கு இடம் கொடுக்கும் என்பதுபோலவும் தெரியவில்லை. மக்கள் சேவை செய்யவேண்டுமென்ற எண்ணம் அவருக்கு அடி மனதில் இருந்திருக்குமானால் அது எங்காவது ஒரு பொது இடத்தில் கருத்தாக வெளிப்பட்டிருக்கவேண்டும் அரசுகள் பல்வேறு நேரங்களில் மக்கள்முன் திணிக்கும் விரோத நடவடிக்கைகளை பார்த்து அவருக்கு கோபம் வந்திருகவேண்டும்.

வாழ்க்கையில் தற்காப்புக்காக சமரசங்களை நம்பியே பயணப்பட்டுக்கொண்டிருக்கும் ஒருவர் இன்றைய காலச்சூழலில் நிச்சியம் அரசியல் செய்ய முடியாது. ஒருவேளை வயதாகிவிட்டதால் இனி சினிமாவில் தாக்கிப்பிடிக்கமுடியாது அரசியல் தலைவன் ஆகிவிடலாம் என்று நம்பினாலும் அது இலேசான காரியமில்லை என்பதும் ரஜனிகாந்த் புரியாதவர் என்றும் கணக்கிட முடியாது.

காவிர் நீர் பங்கீடு காரணமாக கர்நாடகாவுடன் தமிழகம் என்றைக்கும் முரண்பாட்டிலேயே இருந்து வருகிறது. இலங்கையில் சிங்களவர் தமிழர் பிரச்சினையை ஒத்ததாகவே காவிரி விடயத்தில் தமிழ்நாடும் கர்நாடகாவும் இருந்துவருகிறது எக்காரணம் கொண்டும் தமிழர்கள் கர்நாடகாவை விமர்சிப்பதை ரஜனிகாந்த் ரசிக்கவுமில்லை அவரால் அடக்கிக்கொள்ளவும் முடியவில்லை. அதன் வெளிப்பாடே தமிழ் விரோதம் பாராட்டும் சோ ராமசாமியின் நட்பு இப்போது இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் கருத்தியலுக்கு உடன்பாடுகொண்ட கொள்கையை பின்பற்றிக்கொள்ளும் தன்மை ஆகியவற்றை கொள்ளலாம்.

சல்லிக்கட்டு விடயத்தில் தமிழ்நாடு பல வருடங்களாக போராடிக்கொண்டிருக்க ரஜனிகாந்த் அவர்களின் குடும்பம் பீட்டா அமைப்பை வரவேற்று பீட்டாவின் உறுப்பினர்களாக இணைந்திருந்தனர், மோடியின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது தமிழ்நாடு பெரும் எதிர்ப்பை காட்டியபோது முதலாவது ஆளாக ரஜனிகாந்த் தலை வணங்குகிறேன் என்று மோடி அரசுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

நரேந்திரமோடி, சோ ராமசாமி, தமிழ்தேசிய எதிர்ப்பாளரும் தேசியகட்சிகளின் கூட்டாளியான கருணாநிதி போன்றோரை ரஜனிகாந்த் நட்பாக கொண்டு வந்திருக்கிறார் தமிழ் எதிரியான மகராஷ்ட்ரா அரசியல்வாதி போல் தக்ரேயை கடவுளாக மதிப்பதாக வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.

திராவிட கட்சிகள் தவிர்ந்த தமிழ் கட்சிகளான பாட்டாளி மக்கள் கட்சி, நாம் தமிழர் கட்சி, தமிழர் வாழ்வுரிமை கட்சி, விடுதலை சிறுத்தைகள் இப்படியான தமிழ் தேசிய கொள்கையுடைய கட்சிகள் ரஜனிகாந்த்தின் குணமறிந்து தொடர்ந்து ரஜனிக்கு எதிராக கருத்து சொல்லி வருகின்றன இந்த கட்சிகள் நேரடியாக மோடியையும் எதிர்பவையாகவே இருக்கின்றன.

இவை அனைத்தையும் கணக்கிட்டுப் பார்க்கும்போது தமிழ் தேசிய கருத்துக்களை தமிழகத்தில் வளரவிடக்கூடாது என்ற எண்ணம் மோடிக்கு இருக்கிறது. கருணாநிதியின் செயற்படாமை ஜெயலலிதாவின் வெற்றிடம் அதிமுகவின் உடைவு இவைகளை கருத்தில் கொண்டு பாஜகவின் பின்புலத்துடன் ரஜனியை முன்னிறுத்தி ஒரு கட்சியை தொடங்கினால் கணிசமான வாக்குக்களை பெறலாம் என்ற எண்ணமும் உடைந்துபோன அதிமுக இரு அணிகளையும் ஊழல்களை காரணம் காட்டி மிரட்டி ஒரு அணியையாவது ரஜனி தலைமையிலான கட்சியுடன் இணைத்துக்கொள்ள முடியும் என்று பாஜக நிச்சியமாக நம்புகிறது.

அப்படி கட்சி ஒன்று நிச்சியமாக தொடங்கப்படுமானால் வருவேன் வந்துவிட்டேன் என்பதுபோல் மக்கள் எதித்பார்ப்பை தூண்டுவதுபோல நிகழ்ச்சிகள் கட்டமைக்கப்படும் தேர்தல் காலம் நிர்ணயிக்கபட்டவுடன் வாத விவாதங்களுக்கு இடமளிக்காமல் கட்சி தொடங்கப்படலாம்.

ரஜினிகாந்த் கழுவிய மீனில் நழுவிய மீனாக இருப்பதால் மோடி விரித்த வலையில் விழுவதுபோல கிரந்தம் பேசி தப்பி செல்லமாட்டார் என்பதும் மறுப்பதற்கில்லை. வரும் ஆனால் வராது என்ற வாக்கியம் திருக்குறள்போல தீர்க்கமாக நிமிர்ந்து நிற்கிறது.

ஈழதேசம் செய்திகளுக்காக,
கனகதரன்.

Related posts

Top