பன்னீர்செல்வத்தின் ஆட்டம் முடிகிறதா? கூவத்தூரில் இருந்து தப்பி ஓபிஎஸ் பக்கம் சாய்ந்த எம்எல்ஏ மீண்டும் எடப்பாடி அணியில் தஞ்சம்

மதுரை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. சரவணன் கூவத்தூர் ரிசார்ட்ஸ் முகாமில் இருந்து மாறுவேடத்தில் தப்பி வந்து ஓபிஎஸ் அணியில் இணைந்தார். தன்னை அடைத்து வைத்ததாக சசிகலா, எடப்பாடி பழனிச்சாமி போலீசில் புகார் கொடுத்தார். இப்போது அவரே முன்னாள் மதுரை மேயரும் எம்எல்ஏவுமான ராஜன் செல்லப்பா முன்னிலையில் மீண்டும் எடப்பாடி பழனிசாமி அணியிலேயே இணைந்துள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு முதல்வரானார் ஓபிஎஸ். அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா, முதல்வராக ஆசைப்படவே, பதவியை அரைமனதோடு ராஜினாமா செய்தார் ஓபிஎஸ்.

ஜெயலலிதா நினைவிடத்தில் ஓபிஎஸ் தியானம் இருந்து சசிகலாவிற்கு எதிராக பேட்டி கொடுத்தார். அன்று இரவு முதல் சசிகலா அணி, பன்னீர் அணி என இரண்டாக அதிமுக உடைந்தது. உடனடியாக அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தை கூட்டினார் சசிகலா.

கூவத்தூர் கூத்து

எம்எல்ஏக்கள் கூட்டத்திற்கு வந்தவர்களை அப்படியே சொசுகு பேருந்தில் கொண்ட சென்றனர். தனக்கு பெரும்பான்மை எம்எல்ஏக்கள் ஆதரவு இருக்கிறது என்பதை ஆளுநர் முன்னிலையில் நிரூபிப்பதற்காக 123 அதிமுக எம்எல்ஏக்களைக் கூவத்தூர் ரிசார்ட்டில் அடைத்தார். சிலர் பேருந்தில் செல்லும் போதே ஓபிஎஸ்சிடம் தஞ்சமடைந்தனர்.

11 எம்எல்ஏக்கள்

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்குச் செல்ல நேர்ந்ததால் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கினார். ஆதரவு தரும் எம்எல்ஏக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளும் அளிக்கப்பட்டது. எனினும் சமூக வலைத்தளங்களில் தொகுதிவாசிகள் விடுத்த கோரிக்கையை ஏற்று 11 எம்எல்ஏக்கள், எம்பிக்கள் ஓபிஎஸ் பக்கம் சென்றனர்.

சரவணன் எம்எல்ஏ

அப்போது கூவத்தூர் சொகுசு விடுதியில் அடைக்கப்பட்டிருந்த எம்எல்ஏக்கள் கூட்டத்திலிருந்து, மதுரை தெற்கு தொகுதி எம்எல்ஏ சரவணன் கடந்த பிப்ரவரி மாதம் 13ஆம் தேதி தப்பி ஓடி வந்தார். கூவத்தூரிலிருந்து மாறுவேடத்தில் தப்பி வந்ததாகவும், அங்கு தன்னை அடைத்து வைத்ததால் மனதளவிலும், உடலளவிலும் பாதிக்கப்பட்டதாகவும் புகார் கூறிய அவர் இதுகுறித்து டிஜிபியிடம் புகார் மனுவும் அளித்தார்.

எடப்பாடி பழனிச்சாமியிடம் தஞ்சம்

அதையடுத்து ஓபிஎஸ் அணியில் இணைந்தார். தொகுதிக்கு சென்ற சரவணனுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். 3 மாதமானநிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை. ஒபிஎஸ் அணியில் தனக்கு போதிய வரவேற்பு இல்லாததைக்கண்டு, அமைதியாக இருந்து வந்தார். இந்த நிலையில் மீண்டும் எடப்பாடி பழனிசாமி அணியிலேயே இணைந்துள்ளார். அவரை பாக்கெட் போட்டு கூட்டி சென்றது ராஜன் செல்லப்பாவாம். இப்போது ஓபிஎஸ் அணியின் எம்எல்ஏகள் எண்ணிக்கை 11 ஆகக் குறைந்துள்ளது.

கதவு திறந்தே இருக்கு

எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் மீண்டும் தங்கள் பக்கம் வருவார்கள், கதவு திறந்தே இருக்கிறது. எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்று கூவி கூவி அழைக்கிறார் அமைச்சர் ஜெயக்குமார். எடப்பாடி பழனிச்சாமி அணிக்கு எப்படியாவது ஓபிஎஸ் ஐ தனிமை படுத்த வேண்டும் என்பதே இப்போதைய டார்கெட் ஆக உள்ளது. இன்னும் எத்தனை பேர் இங்கிட்டு வரப்போறாங்களோ!

Related posts

Top