தினகரன் மீழ் வருகையுடன் மூன்று அணிகளாகிய அதிமுக! – விசேட ஆய்வு!

உறுதியான இரும்புக் கோட்டையாக கட்சியையும் ஆட்சியையும் காத்துவந்த ஜெயலலிதா அவர்கள் சென்னை அப்பலோ மருத்துவமனையில் உடல் நலக்குறைவின் காரணமாக அனுமதிக்கப்பட்ட நாள் முதல் கட்சியும் ஆட்சியும் பலவீனமான நிலையை அடைந்துள்ளதை நடக்கும் நிகழ்வுகள் வெளிப்படுத்தி நிற்கின்றது.

அப்பலோ மர்மம் விலகாத மர்மமாகவே நீடித்துவரும் நிலையில் ஆட்சியும் கட்சியும் குழப்பங்கள் நிறைந்த நிலையில் ஒவ்வொரு நாளையும் கடந்துகொண்டிருக்கிறது. அந்தவகையில் அதிமுக கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் அவர்கள் கையூட்டு வழக்கில் இருந்து பிணையில் வெளிவந்துள்ள நிலையில் குழப்பங்கள் மேலும் அதிகரித்துள்ளது.

முன்னாள் முதல்வராக இருந்த பன்னீர்ச்செல்வம் தலைமையிலான அணி அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா சார்ந்தவர்களின் தலையீடுகளை ஏற்க முடியாது என்று கூறி தனி அணி கண்டது. இந்திய மத்திய அரசின் மறைமுக ஆதரவு பன்னீர்ச்செல்வம் அணிக்கு காணப்படுவதான ஏதுநிலை வெளிப்படையாகவே உணரப்பட்டுவந்த நிலையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியிருந்தது.

இந்த குழப்பங்களின் அடிப்படையில் அதிமுக கட்சியின் அடையாளமாக விளங்கிய இரட்டை இலை சின்னம் தேர்தல் ஆணையகத்தால் முடக்கப்பட்டது. வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதாக கூறப்பட்டு ஆர்.கே.நகர் இடைத்தேர்தலும் இடைநிறுத்தி வைக்கப்பட்டது.

இரட்டை இலை சின்னத்தை பெற்று தாம் தான் உண்மையான அதிமுக என நிரூபிக்க இரு அணிகளும் தீவிரமாக செயற்பட்டுவந்த நிலையில் இரட்டை இலை சின்னத்தை தமது அணிக்கு பெறுவதற்காக தேர்தல் ஆணையக அதிகாரிக்கு கையூட்டு கொடுக்க முயன்றதாக கூறி டிடிவி தினகரன் கைதுசெய்யப்பட்டார்.

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டதையடுத்து அவர் பெங்களூர் பரப்பன அக்கரகார சிறையில் சிறைவைக்கப்பட்டுள்ளார். இதையடுத்து கட்சியையும் ஆட்சியையும் வழிநடத்தும் பொருட்டு டிடிவி தினகரன் துணைப்பொதுச் செயலாளர் ஆக்கப்பட்டிருந்த நிலையில் கையூட்டு வழக்கில் சிறைசெல்லும் முன்னரே ஆட்சி-அதிகாரத்தில் இருந்து ஒதுங்குவதாக அவரே அறிவிக்கும் அளவிற்கு உட்கட்சிக் குழப்பங்கள் உச்சம் தொட்டது.

பன்னீர்செல்வம் பழனிச்சாமி அணிகள் இணைப்பு எட்டிவிடாத நிலையில், நாடும் நாட்டு மக்களும் எப்படி இருந்தால் தமக்கென்ன என்ற போக்கில் எடப்பாடி அரசு செயல்பட்டுவந்த நிலையில் கையூட்டு வழக்கின் பலவீனமான நிலைகாரணமாக டிடிவி தினகரன் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

சிறையில் இருந்து வெளியே வந்ததும் வராததுமாக சென்னை திரும்பியதும் கட்சிப் பணிகளை மேற்கொள்ள இருப்பதாக தினகரன் கூறியதும் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. மேற்கொண்டு பேசிய தினகரன் பொதுச்செயலாருக்கு மட்டுமே தன்னை கட்சியில் இருந்து நீக்கும் அதிகாரம் உள்ளதாகவும் கூறியிருந்தமை தன்னை எதிர்ப்பவர்களுக்கான செய்தியாகவே பார்க்கவேண்டும்.

இந்த பரபரப்புகளுக்கு மத்தியில் இன்று திங்கட்கிழமை அமைச்சர் உள்ளிட்ட பத்து சட்டமன்ற உறுப்பினர்களுடன் சசிகலாவை பார்ப்பதற்காக பெங்களூர் சென்றார் தினகரன். சசிகலாவும் தினகரனும் சந்தித்த சமநேரத்தில் நிதியமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் அமைச்சர்கள் திடீர் ஆலோசனையில் ஈடுபட்டமை தமிழக அரசியலை சூடேற்றியது.

அமைச்சர்களுடனான ஆலோசனையின் நிறைவில் ஊடகவியலாளர்களைச் சந்தித்த ஜெயக்குமார் தீர்க்கமாக சொன்ன விடயமாக ஏப்ரல்-17 இல் கட்சி செயற்பாடுகளில் இருந்து ஒதுங்குவதாக சொன்ன நிலையிலேயே தினகரன் தொடரவேண்டும் என்பதாகும்.

ஜெயக்குமார் இவ்வாறு கூறியதன் மூலம் அதிமுக அணிகள் இணைப்பு குறித்த நிலையின் ஆயுளை நீடித்திருந்தார் என்றே கூறவேண்டும். அதனை வழிமொழிவதாகவே சசிகலாவுடனான சந்திப்பின் பின்னர் தினகரனது பேச்சும் அமைந்திருந்தது.

அதைவிட அதிமுக அணிகள் இணைப்பு குறித்த கண்ணாம்பூச்சி விளையாட்டிற்கு ஒரு காலவரையறை நிர்ணயித்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாக பார்க்கப்படுகிறது. அதிமுக கட்சியின் ஒன்றிணைவிற்கு தான் தடையாக இருப்பதாக கருதியதால் கட்சிப் பணிகளில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்துவிட்டு சிறைசென்றிருந்தார் தினகரன்.

பிணையில் விடுதலையாகி வெளியே வரும்வரையான 42 நாட்களில் அணிகள் இணைப்பு குறித்து எதுவித முன்னேற்றமும் இல்லாத நிலையில் கட்சியையும் ஆட்சியையும் காப்பாற்றவே கட்சிப்பணியை தொடரப்போவதாக கூறியிருந்த தினகரன் சசிகலாவுடனான ஆலோசனையின் பின்னர் மேலும் 60 நாட்கள் அவகாசத்தினை கொடுத்து அமைதியாக இருக்கப்போவதாக அறிவித்துள்ளார்.

அத்துடன் அமைதியாக இருந்து கட்சி ஆட்சியின் போக்கு குறித்தும் அணிகளின் இணைப்பு குறித்த நடவடிக்கைகளையும் உன்னிப்பாக அவதானிக்கப்போவதாகவும் குறித்த 60 நாட்களுக்குள் எதுவித முன்னேற்றமும் ஏற்படாதவிடத்து கட்சியையும் ஆட்சியையும் காப்பாற்றும் நடவடிக்கையில் இறங்கப்போவதாகவும் அறிவித்து பரபரப்பிற்கு தற்காலிக முற்றுப்புள்ளி வைத்துள்ளார் தினகரன்.

இந்த அமைதியான போக்கை யாரும் எதிர்பார்க்கவில்லை. குறிப்பாக சொல்லப்போனால் குட்டையை குழப்பி அரசியல் ஆதாயம் தேட நினைக்கும் திமுக உள்ளிட்ட கட்சிகளின் கனவை கனவாகவே தொடர்வதற்கான ஏதுநிலையை தினகரன் தரப்பின் அமைதி ஏற்படுத்தியுள்ளது.

தற்போதைய நிலையில் அதிமுக என்ற கட்சி மூன்று அணிகளாக சிதறியுள்ளது. எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சி அதிகாரத்தை கொண்டு நடத்தும் அணியினர் முதன்மை அணியாகவும், மத்திய அரசின் கடைக்கண் பார்வையின் பலத்துடன் போட்டி அதிமுக வாக வலம்வரும் பன்னீர்செல்வம் அணி இரண்டாவதாகவும் இருந்த நிலையில் தினகரனின் மீள்வருகையும் அதன் பின்னரான நிகழ்வுகளும் மூன்றாவது அணியை பிரசவித்துள்ளது.

தற்போதைய நிலையில் இருபதிற்கு மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் தினகரன் ஆதரவு நிலையில் இருப்பதாகவும் பழனிச்சாமி அணியில் இருக்கும் முக்கிய அமைச்சர்கள் சிலரும் ஆதரவு மனநிலையில் இருப்பதாகவும் உறுதியாக அறியமுடிகிறது. மத்தியில் ஆட்சி செய்துவரும் மோடி தலைமையிலான பாரதிய சனதா ஆட்சியின் தமிழர் விரோதப்போக்கும் பழனிச்சாமி அரசின் நழுவல் போக்கு அரசியலும் கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் முனுமுனுப்பாக கேட்டுக்கொண்டிருக்கிறது.

இந்த முனுமுனுப்புக் குரல்கள் வலுப்பெற்று எதிர்ப்புக் குரல்களாக மாறும்தறுவாயில் தினகரன் அதிரடியாக கட்சியையும் ஆட்சியையும் பொறுப்பேற்கும் சூழல் ஏற்படுமாயின் பெரும்பாண்மையான கட்சியினரின் ஆதரவு கிடைக்கும் என்பது உறுதி.

திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு நடத்தப்பட்ட விழாவானது திமுக செயல் தலைவராக விளங்கும் இசுடாலின் தனது அரசியல் செல்வாக்கை நிலைநிறுத்துவதற்காக மேற்கொண்ட முயற்சி என்பதை சாதாரண மக்களாலும் ஊகித்தறிய முடியும் நிலையில் அந்த விழாவில் பங்கேற்றவர்களது அடிப்படையில் எதிர்காலக் கூட்டணி அமையும் சூழலையும் மறுப்பதற்கில்லை.

ஆகவே எதிர்த்தளத்தில் வலுவான ஒருங்கிணைவானது நடைமுறையில் உள்ள அதிமுக அரசின் ஆயுளை பலவீனப்படுத்திவிடும் என்பதை உணர்ந்து வலுவான தலைமையின் கீழ் கட்சியும் ஆட்சியும் செல்வது ஒன்றே சரியாக இருக்கும் என்ற மனநிலைக்கு கட்சியின் முக்கிய தலைவர்களும் தொண்டர்களும் வரும்போது மேலே கூறியவாறு பெரும்பாண்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் தினகரன் கட்சியையும் ஆட்சியையும் தலைமையேற்பது தவிர்க்கமுடியாததாகிவிடும்.

‘தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்’

ஈழதேசம் இணையத்திற்காக இரா.மயூதரன்.
(05/06/2017)

Related posts

Top