வடக்கு முதல்வருடன் த.தே.கூட்டமைப்பின் பங்காளி கட்சியினர் சந்திப்பு!

முதலமைச்சருக்கான தங்கள் ஆதரவை தமிழ் தேசம் தெளிவாக வெளிப்படுத்திய பிற்பாடும் தமிழரசுக்கட்சியினர் ஒரு பிரிவினர் முதலமைச்சரை தாங்கள் வெளியேற்றியே தீருவோமென வாதிட்டுவருகின்றனர்.

இந்நிலையினில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் தமிழரசு கட்சி தவிர்ந்த ஏனைய கட்சிகளின் தலைமைகளுடன் பேச்சுக்களை நடத்தி எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தனின் கடிதத்திற்கு பதில் கடிதத்தை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உடனடியாகவே அனுப்பிவைத்துள்ளார்.

முதலமைச்சர் தனது வாசஸ்தலத்தில் இன்று மாலை தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளான ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், புளெட் அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன் மற்றும் ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடினார்.

அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பினில் இரா.சம்பந்தனுக்கு பதில் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அனுப்பப்பட்ட கடிதத்திற்கான பதிலின் ஊடாகவே அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பில் முடிவெடுக்க முடியுமெனவும் இரு அமைச்சர்கள் தொடர்பில் எழுத்து மூல உறுதி மொழியினை தந்தால் அதனை ஏற்க தயாராக உள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே சமரசங்களினை தாண்டி நம்பிக்கையில்லாத்தீர்மானம் வடமாகாணசபையில் கொண்டுவரப்படுமானால் அன்றைய நாளன்று எந்தவொரு உறுப்பினரையும் சபைக்குள் நுழையவிடாது மாகாணசபையை முற்றுகையிட்டு அகிம்சைவழியில் சபை அமர்வுகளை நடத்தாதவாறு போராட அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பினில் சிவில் சமூக அமைப்புக்கள்,தமிழ் மக்கள் பேரவையென்பவை சந்திப்புக்களினை மேற்கொண்டுவருகின்றன.

Related posts

Top