மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் தமிழ் அரசியல்வாதிகள் செயற்படவேண்டும்!

வடமாகாணசபையின் முதலமைச்சர் திரு. க. வி. விக்னேஸ்வரனை பதவியிலிருந்து அகற்றுவதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகளுக்கு தமிழ் மக்கள் திரண்டு வந்து தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தி வருகிறார்கள். இவற்றைக் கருத்திற்கொண்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் செயற்படவேண்டும் என தமிழ் அரசியல்வாதிகளை லண்டனைத் தலைமையகமாகக் கொண்டியங்கும் தமிழ் பொது சமூக அமையம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பில் தமிழ் பொது சமூக அமையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

வட மாகாணசபை அமைச்சர்கள் மீது நடாத்தப்பட்ட விசாரணை அறிக்கையின் பிரகாரம் முதலமைச்சர் மேற்கொண்ட ஓழுக்காற்று நடவடிக்கைக்கு பதிலடியாக மேற்படி சபையில் ஆட்சியில் உள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள் சிலர் எதிர்க்கட்சியினருடன் இணைந்து முதலமைச்சர் மீது நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவர முயற்சிப்பதாகத் தெரியவருகிறது. இம்முடிவினை எதிர்த்து அங்குள்ள தமிழ் அரசியல், சமூக அமைப்புகளும் பொதுமக்களும் அமைதி வழியில் போராடி வருகின்றனர். மக்களால் பெருமளவு விருப்பு வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட முதலமைச்சர் அவர்களை அரசியற் காரணங்களுக்காக மக்களின் எதிர்ப்பிற்கு மத்தியில் பதவியிலிருந்து அகற்ற எடுக்கும் முயற்சிகளை தமிழர் பொது சமூக அமையம் வன்மையாகக் கண்டிக்கிறது.

தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலை தொடர்பில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியதன் மூலம் சிறிலங்கா அரசாங்கமும், அதற்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்கி வரும் தமிழரசுக் கட்சியின் தலைமையும் அவர் மீது அதிருப்தி கொண்டிருப்பதும், அவரைச் சமயம் பார்த்து பதவியிலிருந்து அகற்றத் தயாராயிருப்பதும் தமிழ் மக்கள் அறிந்த விடயங்களே. தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளுக்கேற்ப மேற்கொள்ளப்பட்ட அரசியல் நகர்வுகளுக்காகவே அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பதனால் மக்கள் மத்தியில் இது பலத்த விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாரிய இனவழிப்பை எதிர்கொண்ட தேசம் என்ற வகையில் தமிழ் அரசியற் கட்சிகளின் செயற்பாடுகள் விடுதலையை நோக்கியதாக அமைந்திருக்க வேண்டும். மக்களின் எதிர்பார்ப்புக்களுக்கு மாறாக, வெறுமனே வாக்கு வங்கி அரசியற்கட்சி போன்று செயற்பட்டு தமிழ் மக்களை பலவீனப்படுத்தவதனை விடுத்து, தமிழரசுக்கட்சி மக்களுக்கு வழங்கிய உறுதி மொழிகளுக்கு ஏற்ப செயற்பட முன்வரவேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.

Top