முல்லைத்தீவு துணுக்காய் பாலங்குளத்தின் கீழ் வயல் நிலங்களில் தொடர்ச்சியாக மணல் அகழ்வு நடைபெறுவதாக முறைப்பாடு

முல்லைத்தீவு துணுக்காய் பாலங்குளத்தின் கீழ் வயல் நிலங்களில் தொடர்ச்சியாக மணல் அகழ்வு நடைபெறுவதாக ஆரோக்கியபுரம் கிராம மக்களினால் துணுக்காய் பிரதேச செயலாளரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

வயல் நிலங்களில் மணல் அகழ்வு நடைபெறுவதன் காரணமாக எதிர்காலத்தில் விவசாய முயற்சிகள் பாதிக்கப்படும் எனவும் மணல் அகழ்வினால் ஆரோக்கியபுரம் கிராமத்தில் இருந்து கிளிநொச்சி ஸ்கந்தபுரம் கிராமத்திற்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் வீதியினைக் குறுக்கறுத்து மணல் அகழ்வு நடைபெற்றுள்ளதாகவும் ஸ்கந்தபுரம் மணியங்குளத்தின் பின்பகுதியிலும் பாலங்குளத்தின் வயல் நிலங்களிலும் கடந்த ஐந்தாண்டுகளுக்கு மேலாக மணல் அகழ்வு நடைபெறுகின்றது எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இப்பகுதியில் அகழப்படும் மணல் அக்கராயன் சுபாஸ் குடியிருப்பு ஊடாக முக்கொம்பன் பூநகரி ஊடாக யாழ்ப்பாணத்திற்கும் அக்கராயன் திருமுறிகண்டி ஊடாக டிப்பர்களில் மணல் வெளியிடங்களுக்குக் கொண்டு செல்லப்படுவதாகவும் இதனைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் துணுக்காய் பிரதேச செயலாளரிடம் ஆரோக்கியபுரம் மக்கள் முறைப்பாடு செய்து உள்ளனர்.

Top