முதல்வர் விழாவில் தினகரன், சசிகலா பேனர்… அதிமுகவினர் மத்தியில் பரபரப்பு

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்ற போரூர் மேம்பாலம் திறப்பு விழாவுக்கு வைக்கப்பட்டிருந்த வரவேற்பு பேனர்களில் சசிகலா மற்றும் டிடிவி தினகரன் படங்கள் இடம் பெற்று இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னை போரூர் சந்திப்பில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் ரூ.54 கோடி செலவில் கட்டப்பட்ட மேம்பாலத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று திறந்து வைத்தார். அப்போது அவர் பேசுகையில், ‘திமுக ஆட்சிக்காலத்தில் முறையான பணிகள் மேற்கொள்ளப்படாமல் போனதால் போரூர் மேம்பாலப் பணிகள் தாமதமாகின ‘ என்று குற்றம் சாட்டினார். இன்று திறக்கப்பட்ட போரூர் பாலத்துக்கு எம்ஜிஆர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்த விழாவுக்கான போஸ்டர்கள், பேனர்களில் அதிமுக அம்மா அணி பொதுச்செயலாளர் சசிகலா மற்றும் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பேனர் வைக்கப்பட்டிருந்தது. இது அதிமுகவினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சசிகலா மற்றும் தினகரனை முழுவதுமாக ஒதுக்கி கட்சியின் அறிவிப்புகளை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டு வருவதாகவும் அவர் தலைமையில் தனி அணி இருப்பதாகவும் பேசப்பட்டு வந்த சூழலில் இந்த பேனர் வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related posts

Top