மக்களால் முதல்வராக தெரிவானவருக்கு பின்கதவால் உள்நுழைந்தவர் சவால்! பனங்காட்டான்

சுமந்திரனோ மாவையரோ தற்செயலாக முதலமைச்சராக இருந்தால் தங்களுக்கு எதிராக செயற்படும் ஒருவரை யார் சிபாரிசு செய்தாலும் அமைச்சராக நியமிக்க இணங்குவார்களா?
—–
ஜனநாயக பாரம்பரியத்தை மறந்து தமிழ் மக்கள் பேரவையை அரசியலில் இறங்கக்கூடாது என்னும் மாவையரின் எச்சரிக்கை, அடுத்த தேர்தலில் தங்கள் கட்சிக்கு என்ன நடைபெறுமென்பதை அவர் உணர்ந்துள்ளதையே தெரிய வைக்கிறது.
——–

கீறல் விழுந்த கண்ணாடி மேலும் மேலும் வெடித்துச் செல்வதுதான் இயற்கை.

கிளறப்பட்ட வடமாகாண சபைக்குள் பச்சை மண்ணும் காய்ந்த மண்ணும் எவ்வாறு ஒன்றாகச் செயற்படப் போகின்றன?

மேற்கண்ட இரண்டு பந்திகளும் எனது கடந்த வாரக் கட்டுரையின் கடைசிப் பந்திகளாக அமைந்திருந்தன.

வெற்றிடமாகவுள்ள இரண்டு அமைச்சர்களின் புதிய நியமனம், எஞ்சியுள்ள இரண்டு அமைச்சர்கள் மீதான புதிய விசாரணையும் அதன் தீர்ப்பும், நடுநிலை தவறிய அக்கிராசனர் சி.வி.கே.சிவஞானம் மீதான நம்பிக்கையீனம், சுமந்திரனும் மாவையரும் நிர்வாகத்துள் மூக்கை நுழைக்கும் செயற்பாடுகள் போன்றவை எதிர்காலச் சவால்கள் என்பது கடந்த வாரக் கட்டுரையின் கட்டம் கட்டப்பட்ட பந்தியாக அமைந்திருந்தது.

இந்தக் கேள்விகளுக்கான பதில்கள் இவ்வளவு விரைவாக ஒரு வாரத்துக்குள்ளேயே கிடைக்குமென நினைத்துக்கூடப் பார்க்கவில்லை.

இப்போது சந்தியும் சந்தையும் சிரிக்கும் நிலைக்கு வடமாகாண சபையைக் கொண்டு வந்துள்ளனர் தமிழரசுக் கட்சியின் இரட்டையர்.

சுமந்திரன், மாவை சேனாதிராஜா எனப்படும் இவர்களோடு கிளிநொச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனும் இப்போது இணைந்துள்ளார். இவரது நெருங்கிய நண்பரான குருகுலராஜாவின் கல்வி அமைச்சர் பதவி இழப்புத்தான் இவரின் கோபத்துக்குக் காரணமென ஊடகவியலாளர்கள் சொல்கின்றனர்.

கடந்த சில நாட்களுக்குள் வடமாகாண சபைப் பிரச்சனை விசுவரூபம் எடுத்துள்ளது என்று சொன்னால் அதில் தவறிருக்க முடியாது.

கொழும்பின் ஆங்கில, தமிழ் பத்திரிகைகளுக்கு சுமந்திரனும் மாவையரும் அளித்த செவ்விகளும், இவைகளுக்குப் பதிலளிப்பதில் நேரத்தைச் செலவிடாது தமக்குள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி முதலமைச்சர் திடுதிப்பென மேற்கெண்ட அதிரடி நடவடிக்கைகளும் பரபரப்பான செய்திகள்.

‘முதலமைச்சர் தமக்குள்ள அதிகாரங்கள்’ என்ற சொற்றொடர் இங்கே அதிமுக்கியமானது.

இதனைச் செய்யும் அதிகாரங்கூட முதலமைச்சருக்கு இல்லையென்றால் அவருக்குள்ள அதிகாரங்கள் என்ன என்பதை தமிழரசுக் கட்சியினர் கொஞ்சம் வெளிப்படையாகச் சொல்ல வேண்டும்.

முதலமைச்சரோடு கலந்தாலோசிக்காது ஆர்னோல்ட் என்ற உறுப்பினரை தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணத்திலுள்ள மார்ட்டின் வீதி அலுவலகம் புதிய கல்வி அமைச்சராக எவ்வாறு நியமிக்க முடியும்?

ஆர்னோல்டை புதிய கல்வி அமைச்சராக தமிழரசுக் கட்சி நியமித்து விட்டதாக ஊடகங்களுக்கு செய்தி வழங்கிய கட்சியின் அதிவிவேக பூரணகுரு யார்?

அமைச்சர்களை நியமிக்கும் அதிகாரம் முதலமைச்சருக்கு மட்டுமே உண்டு. அவரது பரிந்துரையின்படியே பதவிப் பிரமாணத்தை ஆளுனர் செய்து வைப்பார். இதுவே நடைமுறை.

அனந்தி சசிதரன், க.சர்வேஸ்வரன் ஆகியோரை தற்காலிக அமைச்சர்களாக மூன்று மாதத்துக்கு பணியாற்றும் வகையில் முதலமைச்சர் இந்த மாதம் 29ம் திகதி நியமித்தார். அதனை நிராகரிக்கும் அதிகாரமற்ற ஆளுனர் அவர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

தமிழரசுக் கட்சி ஆர்னோல்டை அமைச்சராகப் பரிந்துரை செய்தால் ஆளுனரால் அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்ய முடியாதென்பது அரசியலில் அரிச்சுவடி தெரியாதவருக்கும் தெரியும்.

முதலமைச்சருக்கும் எமக்குமிடையே இப்போது பிரச்சனை ஒன்றுமில்லை. எல்லாமே பேசித் தீர்த்துவிட்டோமென்று பத்திரிகையொன்றுக்கு வழங்கிய செவ்வியில் எடுத்துச் சொன்ன மாவையர், கேள்விகள் தொடர்ந்து வர – முதலமைச்சர் மீதான குற்றச்சாட்டுகளை ஏவுகணைகள்போல ஒன்றன்பின் ஒன்றாக வீசத் தொடங்கினார்.

இதனை எழுதும்போது அறிஞர் ராஜாஜி அவர்கள் எழுதிய “குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா” என்ற பாடல் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை.

இந்தப் பாடலில் குறை ஒன்றும் இல்லை, குறை ஒன்றும் இல்லை என்று கூறிக்கொண்டே தனக்குள்ள குறையை ராஜாஜி அவர்கள் தெரிவிக்கிறார்.

மாவையரும் பிரச்சனை ஒன்றுமில்லை ஒன்றுமில்லையென்று கூறிக்கொண்டு கட்சியைப் பிளவுபடுத்தக்கூடிய வகையில் பழைய பிரச்சனைகளை பூதாகரமாக்கியுள்ளார்.

இங்கு பிரச்சனை இல்லையென்றால் அல்லது இவை பேசித் தீர்க்கக் கூடியவையென்றால் எதற்காக ஊடகங்களை நாடிச் செல்ல வேண்டும்?

2013ல் தாம் எதிர்பார்த்த முதலமைச்சர் பதவி தமக்குக் கிடைக்காதுபோன ஆற்றமுடியாத வேதனையில், மாவையர் பொங்கி வழிவதை இப்போது நன்றாகக் காணமுடிகிறது.

முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்னெடுத்தவர்கள் மாகாணசபை உறுப்பினர்கள் சயந்தன் மற்றும் ஆர்னோல்ட் ஆகியோர்.

மாகாணசபையில் சுமந்திரன் அணி என்ற பெயரில் தொடர்ச்சியாக முதலமைச்சரோடு முரண்பட்டுச் செயற்பட்டு வந்தவர்களும் இவர்களே.

முதலமைச்சருக்கும் சம்பந்தனுக்குமிடையே இந்தமாத நடுப்பகுதியில் இணக்கநிலை ஏற்பட்ட பின்னர், நம்பிக்கையில்லாப் பிரேரணையை மீளப்பெற்றவர்களும் இந்த இருவர்தான்.

(நம்பிக்கையில்லாப் பிரேரணை மீளப் பெறப்படவில்லை. அது, நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது என்று இன்னொரு அர்த்தத்தை கூட்டமைப்பினர் இப்போது கூறி வருகின்றனர்.)

சத்தியலிங்கம் என்ற மாகாண சுகாதார அமைச்சரை புதிய முதலமைச்சராக்க சுமந்திரனுடன் இணைந்து முயற்சி எடுத்தவர்களும் இந்த சயந்தனும் ஆர்னோல்டும்தான்.

ஆக, முதலமைச்சரைப் பதவி நீக்க முன்னணியில் நின்ற ஆர்னோல்டுக்கு அதற்கான உபகாரமாக அமைச்சர் பதவி வழங்க சுமந்திரன் விரும்பியதை, முதலமைச்சர் ஏற்கவில்லையென்பதால் அவர் மீதான அடுத்த கட்ட யுத்தத்துக்கு தமிழரசுக் கட்சியினர் வந்துள்ளனர்.

அமைச்சரவை என்பது முதலமைச்சரின் தெரிவுக்குட்பட்டது. தம்மோடு இணைந்து இயங்கக்கூடிய தகுதியானவர்களையே முதலமைச்சர் என்பவர் அமைச்சர்களாக நியமிப்பது எழுதாத உலக மரபு. அமைச்சரவைக்குள் ஓர் எதிர்க்கட்சியை உருவாக்க எந்த முதலமைச்சரும் விரும்பமாட்டார்.

சுமந்திரனோ மாவையரோ தற்செயலாக முதலமைச்சராக இருந்தால், தங்களுக்கு எதிராக செயற்படும் ஒருவரை யார் சிபாரிசு செய்தாலும் அமைச்சராக நியமிக்க இணங்குவார்களா?

தமிழ் மக்கள் பேரவை உருவானது, அதன் தலைமைப் பதவியை ஏற்றது, 2015ல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பை ஆதரிக்காது அதற்கு எதிரான கட்சியை ஆதரித்தது, இன்று கூட்டமைப்பிலிருந்து விலகி வேறு பாதையில் பயணிப்பது என்று பல குற்றச்சாட்டுகளை விக்கினேஸ்வரனுக்கு எதிராக சுமந்திரன் அடுக்கியுள்ளார்.

இவைகளெல்லாம் உண்மையென்றால், அவ்வேளைகளில் இது தொடர்பாக நடவடிக்கைகளை கூட்டமைப்பு ஏன் எடுக்கவில்லை? திடீரென இப்போது நடவடிக்கை எடுப்பதற்கு குருகுலராஜா, சத்தியலிங்கம் என்னும் தமிழரசு; கட்சியினர்மீது முதலமைச்சர் மேற்கொண்ட நடவடிக்கைகள்தானே காரணம்!

தமிழ் மக்கள் பேரவை தமிழரின் அரசியல் செயற்பாடுகளில் இறங்கக்கூடாது என்றும், தமிழரசுக் கட்சிக்கு எதிராக இயங்க அனுமதிக்கப்பட மாட்டாது என்றும் மாவையர் எச்சரித்துள்ளார்.

இது என்ன புதுவகை ஜனநாயகம்?

சிங்கள தேசத்தில் ஐக்கிய தேசியக் கட்சி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி என்ற இரு பிரதான கட்சிகளுக்கு அப்பால் இடதுசாரிகள், ஜேவி.வி, பொதுபல சேன என்று நாற்பதுக்கும் அதிகமான அரசியல் கட்சிகள் தேர்தலில் போட்டியிடுகின்றன.

எந்தவொரு சிங்களக் கட்சியும் மற்றொரு சிங்கள அமைப்பைப் பார்த்து நீ அரசியலுக்குள் வரக்கூடாதென்று எச்சரித்தது கிடையாது. அதற்கு உரிமையுமில்லை.

ஜனநாயக பாரம்பரியத்தை மறந்து தமிழ் மக்கள் பேரவையை அரசியலில் இறங்கக்கூடாது என்னும் மாவையரின் எச்சரிக்கை, அடுத்த தேர்தலில் தங்கள் கட்சிக்கு என்ன நடைபெறுமென்பதை அவர் உணர்ந்துள்ளதையே தெரியவைக்கிறது.

இப்போது கிளம்பியுள்ள பிரச்சனை இன்னொன்று.

மக்கள் ஆதரவு தமக்கு இருப்பதாக முதலமைச்சர் நம்பினால், மாகாணசபையைக் கலைத்துவிட்டு தேர்தலைச் சந்திக்க விக்கினேஸ்வரன் தயாhh என்று சுமந்திரன் சவால் விட்டுள்ளார்.

தமிழரசுக் கட்சியின் அடிமனசு விருப்பம் விக்கினேஸ்வரனை அப்பதவியிலிருந்து எவ்வகையிலாவது அகற்றுவது என்பதை, இந்தச் சவால் நன்கு புலப்படுத்துகிறது.

தமது அணியின் பலத்தைக் கொண்டு மாகாண சபையைக் கலைக்குமாறு ஒரு தீர்மானத்தை மாகாணசபையில் நிறைவேற்றி செயற்படுத்த சுமந்திரன் ஏன் விரும்பவில்லை?

தமிழ் மக்களின் உயிர்த்தியாகத்தால் பெற்ற வடமாகாணசபையை தமிழரசுக் கட்சி கலைத்துவிட்டது என்ற அவப்பெயர் தங்களுக்கு வந்துவிடக்கூடாதென்பதில் சுமந்திரன் கவனமாக இருக்கிறார்.

அதனால்தான், மாகாணசபையைக் கலைக்குமாறு முதலமைச்சரைக் கேட்கிறார். அப்படிச் செய்தால் அந்த அவப்பெயரையும் விக்கினேஸ்வரன்மீது சூட்டிவிடலாமென்பது அவரது இன்னொரு சதி.

மக்களின் பெரும்பான்மையான – மிகப் பெரும்பான்மையான ஆதரவில் தெரிவான முதலமைச்சரைப் பார்த்து, பின்கதவால் கட்சிக்குள் நுழைந்து நாடாளுமன்ற உறுப்பினரான சுமந்திரன் விடுக்கும் விநோதமான சவால் இது!

Top