விடுதலையாகவுள்ளாரா சசிகலா?

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த தண்டனைக்கு எதிராக சசிகலா, இளவரசி, மற்றும் சுதாகரன் ஆகியோரும் உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்துள்ளனர்.

மறுசீராய்வு மனு உச்சநீதிமன்றத்தில் 6ம் தேதி விசாரணைக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்த போது, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா கடந்த 2015ம் ஆண்டு தீர்ப்பளித்தார்.

அதனையடுத்து சிறை சென்ற ஜெயலலிதா தரப்பில் பெங்களூரு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசரித்த தனி நீதிபதி குமாரசாமி, சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரை விடுவித்தார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அதன் மீது விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம், கடந்த பெப்ரவரி 14ம் தேதியன்று, கர்நாடக மாநில சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உறுதி செய்தும், அம்மாநில உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்தும் உத்தரவிட்டது.

ஜெயலலிதா மரணம் அடைந்து விட்டதால் வழக்கில் இருந்து அவர் விலக்கப்படுவதாக நீதிபதிகள் கூறினார்கள். அவர் இறந்து விட்டதால் அவரை குற்றவாளி என பிரகடனம் செய்து சிறை தண்டனை விதிக்க முடியாது எனவும் கூறினர்.

அதே நேரத்தில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கான 4 ஆண்டு கால சிறை தண்டனையைும், அத்துடன் தலா ரூ.10 கோடி அபராதமும் செலுத்த வேண்டும் என்பதை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்.

இதையடுத்து சசிகலா உள்ளிட்டோர் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதனிடையே கர்நாடகா அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மே 3ம் தேதியன்று ஒரு சீராய்வு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதில் மேல்முறையீட்டு வழக்கு முடிவடைந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்ட பின்னர்தான் ஜெயலலிதா மறைந்தார்.

ஆகையால் அவரையும் குற்றவாளி என பிரகடனம் செய்து அவருக்கு கீழ்நீதிமன்றம் விதித்திருந்த ரூ100 கோடி அபராதத்தை வசூலிப்பது குறித்து உத்தரவிட வேண்டும்; அதற்காக பெப்ரவரி 14ம் தேதி அளித்த தீர்ப்பை மறுசீராய்வு செய்ய வேண்டும் என அம்மனுவில் வலியுறுத்தப்பட்டிருந்தது.

இதனை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமித்வா ராய் பெஞ்ச், கர்நாடகா அரசின் சீராய்வு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தனர்.

இந்நிலையில் சொத்துகுவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்க கோரி சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தனித்தனியாக சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

90 நாட்களில் சீராய்வு மனு தாக்கல் செய்யலாம் என்ற அடிப்படையில் இந்த மனுவை சசிகலா வழக்கறிஞர் செந்தில் தாக்கல் செய்துள்ளார்.

அதில் வழக்கின் முதல் குற்றவாளியான ஜெயலலிதாவுக்கு விலக்கு அளிக்கப்பட்டது போன்று தமக்கும் விலக்கு அளிக்க வேண்டும் என சசிகலா கோரியுள்ளார்.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திர கோஷ், அமிதவா ராய் ஆகியோர் அடங்கிய அமர்வுதான், சொத்துக்குவிப்பு வழக்கை விசாரித்துத் தீர்ப்பளித்தது.

இதே அமர்வுதான், மறுசீராய்வு மனுவையும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால், இந்த இரண்டு நீதிபதிகளில் ஒருவரான பினாகி சந்திர கோஷ் கடந்த மே 27ம் தேதி ஓய்வுபெற்று விட்டதால் இந்த அமர்வுக்கு வேறொரு நீதிபதியை நியமிக்க வேண்டும்.

ஜூலை 6ல் விசாரணை புதிய நீதிபதி யார் என்பதை உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கெஹர் இன்னும் முடிவு செய்யவில்லையாம். அது முடிவு செய்யப்பட்டதும், மறுசீராய்வு மனு விசாரணைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டது.

அநேகமாக மறுசீராய்வு மனு உச்சநீதிமன்றத்தில் 6ம் தேதி விசாரணைக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சசிகலாவின் மொத்த நம்பிக்கையும் மறுசீராய்வு மனு விசாரணையை நம்பித்தான் உள்ளது.

கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதாவிற்கு விடுதலை கிடைத்தது போல, தனக்கும் மறுசீராய்வு மனு விசாரணை கை கொடுக்கும் என்று நம்புகிறார் சசிகலா.

விடுதலையாகி வந்த பின்னர் கட்சியையும், ஆட்சியையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விடலாம் என்றும் நம்புகிறார் நடக்குமா?

காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

Related posts

Top