சசிகலாவுக்கு சிறையில் சிறப்பு சலுகையா?: விரிவான விசாரணை நடத்த கர்நாடக முதல்வர் உத்தரவு

சசிகலாவுக்கு சிறைச்சாலையில் சிறப்பு சலுகைகள் அளிக்கப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து விரிவான விசாரணை நடத்த முதலமைச்சர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலாவின் நான்காண்டு சிறைத்தண்டனை உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர் பெங்களூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிறையில் பல்வேறு சலுகைகளும், சிறப்பு வசதிகளும் அளிக்கப்படுவதாக அவ்வப்போது புகார்கள் கூறப்பட்டு வந்தன.

இந்நிலையில், சசிகலா அடைக்கப்பட்டுள்ள பரப்பன அக்ரஹார சிறையில், சிறைத்துறை புதிய டி.ஐ.ஜி. ரூபா ஆய்வு செய்தார். அப்போது முறைகேடுகளை அவர் கண்டுபிடித்துள்ளார்.

இதையடுத்து, சசிகலாவுக்கு சிறையில் சிறப்பு வசதிகள் செய்து கொடுப்பதற்கு 2 கோடி ரூபாய் வரை உயர் அதிகாரிகள் லஞ்சம் பெற்று இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டிருப்பதாக டிஐஜி குற்றம்சாட்டியுள்ளார். கர்நாடக சிறைத்துறை டிஜிபி சத்திய நாராயணராவ் மீதும் அவர் லஞ்சப் புகார் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

எனவே, இதுகுறித்து விரிவான விசாரணை நடத்தும்படி முதலமைச்சர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார். டிஐஜி ரூபா கூறும் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தி, குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்டவர்களுக்கு கடும் தண்டனை வழங்கப்படும் என்றும் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

Related posts

Top