புதிய அரசியலமைப்பும் கூட்டமைப்பும் – ருத்திரன்

2015 ஜனவரி 8 ஆம் திகதி இந்த நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட போது சர்வதேச நாடுகளின் பின்புலத்தில் மஹிந்த அரசாங்கத்தின் குடும்ப ஆட்சிக்கு எதிராக ஒன்றிணைந்த தென்னிலங்கையின் இரு பிரதான கட்சிகளும் இந்த நாட்டில் ஓரு தசாப்த காலத்திற்கு மேலாக நீடித்து இருக்கின்ற தேசிய இனப்பிரச்சைக்கு தீர்வு காணல், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழித்தல், ஊழல் அற்ற ஆட்சியை உருவாக்குதல் என்பவற்றை வலியுறுத்தியே இன, மத, பேதங்களைக் கடந்து இந்த நாட்டின் அனைத்து மக்களினதும் ஆணையை கோரியிருந்தார்கள்.

தென்னிலங்கையின் ஆட்சி மாற்றத்திற்கான இந்தக் கூட்டில் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இணைந்து கொண்டது. சர்வதேச சமூகம் இலங்கையின் பூகோள நிலையத்தை மையமாக கொண்டு மஹிந்தாவை வீட்டுக்கு அனுப்ப உத்தேசிக்கப்பட்ட போதே அனைத்து குற்றச் செயல்களையும் மூடி மறைப்பதற்கு தமிழ் தலைமைகளின் ஒத்துழைப்போடு அத்திவாரமிடப்பட்டது என்பதே கசப்பான உண்மை. பொதுவாக நோக்குமிடத்து ஆட்சி மாற்றம் என்பது சர்வதேச பூகோள அரசியல் போட்டியை மையமாக்க்கொண்டு இடம்பெற்றது. ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இணைவை நியாயப்படுத்துவதற்காகவே புதிய அரசியல் யாப்பு, யுத்தக் குற்றங்கள், மனிதவுரிமை மீறல்கள், காணாமல் போகச் செய்யப்பட்டவர்களை கண்டறிதல், காணி மீட்பு, அரசியல் கைதிகள் விடுதலை போன்ற விடயங்கள் ஜனாதிபதி தேர்தல் மற்றும் அதன் பின்னரான பொதுத் தேர்தல் மேடைகளில் திரும்ப திரும்ப பேசப்பட்டன.

அந்த நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப ஆட்சி மாற்றமும் ஏற்பட்டது. சர்வதேச சமூகம் இந்த நாட்டின் கேந்திர முக்கியத்துவத்தை பயன்படுத்திக் கொள்வதற்கான அங்கீகாரத்தை புதிய அரசாங்கத்தின் ஊடாக பெற்றுக் கொண்டது. பதிலுக்கு சர்வதேச ரீதியில் தமிழ் மக்களுக்கு எதிரான போர்குற்ற மீறல்கள், மனிதவுரிமை மீறல்கள் என்பவற்றை மையமாக்க்கொண்டு இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கப்பட்ட அழுத்தங்கள் வலுவிழந்துள்ளது. இந்த நிலையில் தங்களது தேவை முடிந்த பின்னர் தமிழ் மக்களின் பிரச்சனைகளில் இருந்து சர்வதேச சமூகம் மெல்ல மெல்ல விலகி வருவதை அவதானிக்க முடிகிறது.

2015 இல் ஐ.நா மனிதவுரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30-01 தீர்மானம் நடைமுறைப்படுத்துவதற்கான அறிகுறிகள் எதுவுமின்றியே அதே தீர்மானத்தை அமுல்படுத்துவதற்கு 34- 1 இன் மூலம் மேலும் இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் வழங்கப்பட்டு இருப்பது இதனை நன்கு புலப்படுத்துகிறது. இதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமையும் ஆதரவு வழங்கியிருந்தது.

நல்லாட்சி எனக் கூறப்படும் ஆட்சி மாற்றத்தின் பின்னர் முழுபாராளுமன்றமும் அரசியலமைப்பு நிர்ணய சபையாக மாற்றப்பட்டது. அதனை வழிநடத்துவதற்காக ஒரு வழிகாட்டல் குழுவும் அந்த குழுவிற்கு ஆலோசனை வழங்குவதற்காக 6 உப குழுக்களும் அமைக்கப்பட்டன. இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் உள்வாங்கப்பட்டிருந்தந்தது.

கடந்த காலங்களில் தென்னிலங்கையின் இரு பிரதான கட்சிகளும் மாறி மாறி ஆட்சிக்கு வந்த போது தமது கட்சி நலன்களையும் தமது அரசாங்க நலன்களையும் முன்னிறுத்தி செயற்பட்டதுடன், எதிர் கட்சியை பலவீனப்படுத்துவதை நோக்கமாக கொண்டும் செயற்பட்டன. ஆனால், ஆட்சி மாற்றத்தின் பின்னர்
பிரதான இரு கட்சிகளும் இணைந்து தேசிய அரசாங்கம் ஒன்றை அமைத்துள்ளது. இதனால் தேர்தலின் போது வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருந்தது.

நல்லாட்சி எனப்படும் இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத நிலையில் உள்ளது. குறிப்பாக வலிந்து காணாமல் போகச் செய்தலுக்கு எதிரான சட்ட மூலத்தை நிறைவேற்ற முடியாத நிலையில் அரசாங்கம் அதனை காலம் கடத்தி வருகின்றது. குறித்த சட்டமூலமானது பயங்கரவாதத்தில் இருந்து இந்த நாட்டை காப்பாற்றிய படைவீரர்களை காட்டிக் கொடுப்பதாக அமையும் என்று மஹிந்த தரப்பினர் பிரச்சாரம் செய்து வருகின்றனர். நாட்டை பயங்கரவாதத்தில் இருந்து மீட்டெடுத்த இராணுவத்தை காட்டிக் கொடுக்கமாட்டோம் என ஜனாதிபதியும் இந்த நாட்டின் அமைச்சர்களும் கூறி வருகின்றனர். தற்போது அந்த சட்ட மூலம் காலவரையறை ஏதுமின்றி விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளாது விடப்பட்டுள்ளது.

மறுபுறத்தில் இலங்கையின் அனைத்து மகாநாயக்கர்கள் புதிய அரசியல் யாப்பு தேவையில்லை என தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு விவாதாத்திற்கு வரக் கூடிய நிலையில் பௌத்த குருமார்களின் இந்த தீர்மானம் தமிழ் மக்கள் மத்தியிலும், ஆட்சி மாற்னத்திற்கு ஆதரவு வழங்கிய நாடுகள் மத்தியிலும் பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

இந்தவிடத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் “பௌத்த துறவிகள் தமது தீர்மானத்தை மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரியுள்ளதுடன், நான்கு பேர் சேர்ந்து எடுக்கும் தீர்மானம் தான் சரி எனில் பாராளுமன்றம் எதற்கு என கேள்வியும் எழுப்பியுள்ளார்.

ஜனாதிபதியும் வியாழக்கிழமை அவசர அவசரமாக பௌத்த பீடங்களை சந்தித்துள்ளார். பௌத்த பீடங்களின் கருத்துக்கள் புதிய அரசியலமைப்பு விவகாரத்தை மேலும் இழுத்தடித்து காலம் கடத்துவதற்கான ஓரு சூழலை உருவாக்கியுள்ளது.

அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் நிலைப்பாட்டையும், இணக்க அரசியலில் ஈடுபடுவது தொடர்பாகவும் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுடன் கலந்து பேசி அதன் சாதக, பாதகங்களை அலசி ஆராய்ந்து முடிவெடுக்கப்படாமையின் விளைவாகவும், அரசாங்கத்திற்கு எந்த நிபந்தனையுமின்றி ஆதரவு வழங்கி வருவதனாலும் கூட்டமைப்பின் தலைமை குறிப்பாக தமிழரசுக் கட்சி இன்று தனிமைப்பட்டு இருக்கிறது. தனது கட்சிக்குள் கூட சில விடயங்களை கலந்து பேசாது ஒட்டு மொத்த தமிழ் தேசிய இனத்தின் பிரச்சனைகளையும் ஒரிருவர் கையாண்டு வருவது பலத்த சந்தேகங்களையும் கேள்வியையும் எழுப்பியுள்ளது.

தற்போது நடைபெற்று வரும் அரசியல் நகர்வுகளைப் பார்க்கும் போது அரசாங்கம் விரும்பியோ, விரும்பாமலோ தேர்தல்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய சூழல் நிலவுவதையே அவாதனிக்க முடிகிறது. கிழக்கு, சப்பிரகமுவ மற்றும் வடமத்திய மாகாண சபைகளின் ஆயுட்காலம் அண்மையில் முடிவுக்கு வரவுள்ளது. இந்தச் சூழலில் அரசியல் யாப்பு தொடர்பான விவாதங்களோ, புதிய சட்ட மூலங்களோ நடப்பு அரசாங்கத்தின் இருப்பை கேள்விக்குள்ளாக்குவதுடன் சில வேளைகளில் மஹிந்தவின் கரத்தை வலுப்படுத்துவதாகவும் அமைந்து விடும் என்று அரசாங்கம் அஞ்சுகிறது. மறுபுறம் பௌத்த பீடங்களின் எதிர்ப்பும் இந்த அஞ்சநிலையை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது.

தமிழ் தரப்பைப் பொறுத்தவரையில் பல்வேறு நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றனர். அரசாங்கத்துடன் இணக்க அரசியல் செய்வதாக கூறிக்கொண்டு கூட்டமைப்பினர் மேற்கொண்டு வரும் செயற்பாடுகள் சரணாகதி நிலைக்கு சென்றுள்ளது. தமிழ் மக்கள் தமது நிலமீட்புக்காகவும், காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பிலும் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக போராடி வருகின்றனர். அந்த போராட்டம் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை காத்திரமான வகையில் அரசாங்கத்திற்கு அழுத்தம் வழங்கவில்லை. மறுபுறம் மக்கள் நலன்சார்ந்த கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு அமைவாக செயற்பட்டு வரும் முதலமைச்சர் ஊழல் தொடர்பிலும் நடவடிக்கை எடுத்திருந்தார். இதன்போது தமிழரசுக்கட்சி மேற்கொண்ட நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனை வடக்கில் நடந்து வரும் சம்பவங்கள் வெளிப்படுத்துகின்றன.

தென்னிலங்கை அரசியல் சக்திகள் தங்களின் தேர்தல் வெற்றிக்காக அரசியல் யாப்பு மற்றும் புதிய சட்ட மூலங்களை கிடப்பில் போட்டுள்ளது. இந்த நிலையில் அரசாங்கத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்கி சரணாகதி நிலையில் உள்ள கூட்டமைப்பின் தலைமை அவர்களை நம்பி வாக்களித்த மக்களுக்கு என்ன சொல்லப்போகிறது என்பதே தற்போது எழுந்துள்ள கேள்வி.

Related posts

Top